For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விளக்கம் தந்த காங்கிரஸ்.. அடக்கி வாசித்த திமுக!

By Chakra
Google Oneindia Tamil News

Sonia Gandhi and Karunanidhi
சென்னை: நுழைவுத் தேர்வு, வரிவிதிப்பு போன்ற விஷயங்களில் மாநில அரசின் உரிமைகள் பறிக்கும் வகையில் மத்திய அரசு நடந்து கொள்ளக் கூடாது என்று திமுக எம்.பிக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திமுகவை இளங்கோவன் உள்ளிட்ட சில காங்கிரஸ் மாநிலத் தலைவர்கள் சிலர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இதற்கு பேச்சுக்களுக்கு ராகுல் காந்தியின் ஆதரவு இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந் நிலையில் முதல்வர் கருணாநிதி தலைமையில், இன்று திமுக எம்.பிக்கள் கூட்டம் கூட்டப்பட்டது. அண்ணா அறிவாலயத்தில் நடந்த இக் கூட்டத்தில் மத்திய அரசுக்கு நெருக்கடி தரும் வகையில் சில முடிவுகள் எடுக்கப்படலாம் என்று கருதப்பட்டது.

இதற்கிடையே திமுக கூட்டணி தொடரும் என்றும் திமுக அரசை விமர்சித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் குலாம் நபி ஆசாத் மூலம் காங்கிரஸ் தலைமை கடும் எச்சரிக்கை விடுத்தது.

இதையடுத்து இன்றைய திமுக எம்பிக்கள் கூட்டத்தில் மத்திய அரசுக்கோ, காங்கிரசுக்கோ எதிராக கடுமையான தீர்மானங்கள் ஏதும் நிறைவேற்றப்படவில்லை.

கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள், திமுக எம்பிக்கள் அனைவரும் கலந்து கொண்டனர். இதில் காங்கிரஸ் கூட்டணி விவகாரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள் வருமாறு:

-சரக்குகள் மற்றும் சேவைகள் வரி தொடர்பாக அரசமைப்புச் சட்டத் திருத்தம் ஒன்றை மத்திய அரசு மேற்கொள்ள முடிவெடுத்து, வரைவு சட்ட முன்வடிவு ஒன்றையும் தயாரித்து மாநில அரசுகளுக்கு அனுப்பியது.

இந்த சட்டத் திருத்தத்தினால், சராசரி மனிதன் பயன்படுத்தும் பொருள்கள் மீது விதிக்கப்படும் வரி உயரும் என்றும், ஆடம்பரப் பொருள்களின் மீதான வரி குறையும் என்றும், குறைந்த வருவாய் உடைய மக்கள் தொகை நிறைந்துள்ள நமது நாட்டில் புதிய வரிவிதிப்பு முறை பிற்போக்கானது எனக் கருதப்படும் என்றும் கருத்துக்கள் தெரிவித்து முதல்வர் கருணாநிதி மத்திய அரசுக்கு தொடர்ந்து கடிதங்கள் அனுப்பியிருந்தார்.

இவற்றிற்கு பிறகு, ஒரு மனதான ஒப்புதலின்றி சரக்குகள் மற்றும் சேவைகள் வரி தொடர்பான அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தை மேற்கொள்வது சாத்தியமாகாது என்று மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி அண்மையில் அறிவித்திருப்பது நமக்கு மிகுந்த ஆறுதலை அளிப்பதாக அமைந்திருக்கிறது.

மத்திய நிதியமைச்சரின் இந்த அறிவிப்பை கழக எம்.பிக்களின் இக்கூட்டம் மனமுவந்து வரவேற்று, நன்றி செலுத்துவதோடு இறுதியாகவும், உறுதியாகவும் கல்வி, வரி விதிப்பு போன்ற துறைகளில் மாநில அரசின் உரிமைகளைப் பாதிக்காத அளவுக்கு மத்திய அரசின் அணுகுமுறைகள் தொடர்ந்து இருக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

-மருத்துவ படிப்பில் சேருவதற்கு அகில இந்திய அளவில் பொது நுழைவுத்தேர்வு நடத்துவது சம்பந்தமான வழக்கு இந்திய உச்ச நீதிமன்றத்தில் வந்தபோது, இந்திய மருத்துவக் குழுமம் வழங்கிய பரிந்துரையின் அடிப்படையில் மத்திய அரசு 2011-2012ம் ஆண்டு முதல் அகில இந்திய பொது நுழைவுத் தேர்வுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தது.

இதனை அறிந்ததும் முதல்வர் கருணாநிதி கிராமப்புற மாணவர்களின் நலனைக்கருத்தில் கொண்டு தமிழக அரசு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலோடு, பொறியியல் மற்றும் மருத்துவக் கல்விக்கான நுழைவுத் தேர்வினை 2007-2008ம் ஆண்டு முதல் ரத்து செய்து சட்டம் இயற்றியுள்ளது என்றும்,

அதன் காரணமாக சமூக மற்றும் பொருளாளதார நிலைகளில் பின்தங்கியுள்ள கிராமப்புற மாணவர்கள் பெரிதும் பயன் அடைந்து வருகின்றனர் என்றும், அகில இந்திய பொது நுழைவுத் தேர்வு முறை மாநிலங்கள் கல்வித் துறையை நிர்வாகம் செய்வதில் உள்ள உரிமையில் குறுக்கிடுவதாகக் கருதப்படுகிறது என்றும், தமிழக அரசு நீண்ட காலமாக நடைமுறைப்படுத்தி வரும் 69 விழுக்காடு இடஒதுக்கீட்டிற்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என்றும்,

சமூக நீதியின் தாயகமான தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களின் நலன்கள் பாதிப்புக்குள்ளாகும் என்றும் கருத்து தெரிவித்து, பொது நுழைவுத் தேர்வு நடத்துவது குறித்து மறுபரிசீலனை செய்து நல்ல முடிவு ஒன்றை மேற்கொள்ளுமாறு கேட்டு, இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங், மத்திய அரசின் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் குலாம்நபி ஆசாத் ஆகியோருக்கு 15-8-2010 அன்று கடிதம் எழுதினார்.

இதையடுத்து மருத்துவப் படிப்பில் சேருவதற்கு அகில இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வு நடத்துவது என்ற திட்டத்தை நிறுத்தி வைத்துள்ளதாகவும், இது குறித்து அனைத்து மாநில அரசுகளுடனும் விரிவான விவாதம் நடத்த இருப்பதாகவும், மத்திய அரசு அறிவித்துள்ளது.

முதல்வர் கருணாநிதி விடுத்த கோரிக்கையினையொட்டி, உரிய நேரத்தில் சரியான முடிவெடுத்து, தமிழகத்தில் சமூக நீதிக்குச் சேதம் ஏற்படாமல் தடுத்த மத்திய அரசுக்கு, கழக நாடாளுமன்ற உறுப்பினர்களின் இக்கூட்டம் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதோடு, அகில இந்திய அளவில் பொதுநுழைவுத் தேர்வு என்பதை நிரந்தரமாக ரத்து செய்து அறிவித்திட வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறது.

-இலங்கையில் நடைபெற்ற போரின் காரணமாக இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் மீண்டும் அவர்கள் இடத்திற்குச் சென்று வசிக்கின்ற வாழ்வாதாரங்களை இன்னமும் சிங்கள அரசு செய்து தராமல் காலம் கடத்தி வருகிறது. இடம்பெயர்ந்த தமிழர்களின் மறுவாழ்வுக்காக இந்திய அரசு இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகளை வரவேற்கின்ற அதே நேரத்தில், இந்திய அரசின் கருத்துக்கு மாறாக இலங்கை அரசு இடம்பெயர்ந்த தமிழர்களின் பிரச்சனையில் இன்னும் மந்த நிலையில் செயல்படுவதை இந்தக் கூட்டம் சுட்டிக் காட்டுவதோடு- உடன் இலங்கைத் தமிழர்களின் நல்வாழ்வுக்கு உரிய வழி காண வேண்டுமென்று இந்திய அரசை வற்புறுத்திக் கேட்டுக்கொள்கிறது என்பன உட்பட பல்வேறு பொதுவான தீர்மானங்களே நிறைவேற்றப்பட்டன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X