எங்கள் அனுமதியின்றி யாரிடமும் பேச்சு கூடாது: தாலிபான்களுக்கு ஐஎஸ்ஐ எச்சரிக்கை
வாஷிங்டன்: பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ தனது அனுமதியின்றி ஆப்கானிஸ்தான் அரசுடனோ அல்லது அமெரிக்காவுடனோ பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது என்று தாலிபான்களை எச்சரித்துள்ளது.
இந்த தகவலை ஐஎஸ்ஐ அமைப்பின் உயர் தலைவர்கள் தெரிவித்ததாக அமெரிக்காவிலிருந்து வெளிவரும் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தானை ஒதுக்கி வைத்துவிட்டு இந்த பேச்சுவார்த்தையை நடத்த ஆப்கானிஸ்தான் முயன்று வருகிறது. எனவே, அதை தடுத்தே தீர வேண்டும் என்று தீர்க்கமாக ஐஎஸ்ஐ உள்ளது.
ஆப்கானிஸ்தான் அரசுடன் தாலிபான் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்த முயற்சிப்பதை தெரிந்து கொண்ட ஐஎஸ்ஐ அமைப்பினர் அதை எப்பாடு பட்டாவது தடுக்க வேண்டும் என்று அமெரிக்காவின் உளவு அமைப்பான சிஐஏயை மூலம் தாலிபான் அமைப்பின் இரண்டாம் நிலை தலைவரான முல்லா அப்துல் கனி பராதரை கைது செய்ய வைத்தனர்.
இவர் கடந்த ஜனவரி மாதம் கராச்சியில் கைதானார். இவர் கைதான சில நாட்களிலேயே மேலும் 23 தாலிபான் தலைவர்களை கைது செய்தனர்.
இவர்களில் பெரும்பாலானவர்களுக்கு பாகிஸ்தான் தான் அடைக்கலம் அளித்து வந்ததாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை மேலும் தெரிவித்துள்ளது.
கைதான இந்த தலைவர்களை தற்போது பாகிஸ்தான் அரசு விடுதலை செய்துள்ளது. மேலும், அவர்களை ஆப்கானிஸ்தான் சென்று அங்கு போரில் ஈடுபட்டுவரும் அமெரிக்க படைகளுக்கு எதிராக செயல்படுமாறும் ஐஎஸ்ஐ உத்தரவிட்டுள்ளதாக அந்த பத்திரிகை மேலும் கூறுகிறது.
முல்லா கயூம் ஜாகிர், அப்துல் கபீர், அப்துல் ரவூப் காதீம் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டுள்ள தாலிபான் தலைவர்களில் சிலர்.
தாலிபான்கள் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த முயற்சி மேற்கொண்டனர். இது எங்களுக்கு தெரியவந்ததை அடுத்து பராதர் உள்ளிட்ட தாலிபான் தலைவர்களை கைது செய்தோம். எங்களை நம்பியே தாலிபான்கள் உள்ளனர். எனவே,அவர்களைப் பாதுகாப்பது எங்கள் கடமை ஆகும். கர்சாய் அரசுடனோ அல்லது இந்தியாவுடனோ அவர்கள் பேச்சுவார்த்தை நடத்த விடமாட்டோம் என்று ஐஎஸ்ஐ உளவு அமைப்பின் அதிகாரி ஒருவர் கூறியதாக அந்த பத்திரிகை மேலும் தெரிவித்துள்ளது.
முக்கிய தாலிபான் தலைவர்களை கைது செய்துள்ள பாகிஸ்தான்,ஆப்கான் விவகாரத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு எதிர்பார்த்த முடிவு கிடைக்குமா கிடைக்காதா என்பதை தெரிந்துகொண்ட பிறகே அதற்கேற்றார் போல் தான் செயல்பட இருப்பதாகத் தெரிகிறது.
அமெரிக்கா வெற்றி பெற்றால் தாலிபான்களை பேச்சுவார்த்தை நடத்த அனுமதிப்பது என்றும், மாறாக அமெரிக்கா தோல்வியுற்று நாடு திரும்பிவிட்டால், தாலிபான்களுடன் கூட்டுவைப்பது என்றும் பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது.
தாலிபான் மூத்த தலைவர் பராதரை கைது செய்து அவரை இஸ்லாமாபாத்தில் வைத்து ஒரு வார காலம் விசாரணை நடத்தியது. இந்த விசாரணையில் சிஐஏ அதிகாரிகள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. இவர்கள் விசாரித்த பிறகே சிஐஏ விசாரிக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
பராதர் விஷயத்தில் நாங்கள் சொன்னதை எல்லாம் அப்படியே நம்பினார்கள் அப்பாவி சிஐஏ அதிகாரிகள். நாங்கள் சொன்னதிற்கெல்லாம் தலையாட்டினர் என்று பாகிஸ்தான் உளவு அதிகாரிகள் கைகொட்டி சிரித்ததாக டைம்ஸ் பத்திரிகை மேலும் தெரிவித்துள்ளது.
பராதர் கைது செய்யப்பட்டு காபூலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார் என வெளியான பத்திரிகை செய்திகளும் தவறு. அதற்கு மாறாக அவர் சொகுசாக ஐஎஸ்ஐ அலுவலகத்திற்குச் சொந்தமான வீட்டில் பாதுகாப்பாக இருக்கிறார் என்றும் டைம்ஸ் பத்திரிகை செய்தி மேலும் கூறுகிறது.
தாலிபானிடம் பயிற்சி பெற்ற தீவிரவாத அமைப்பின் தாக்குதல் :
சோமாலியா நாட்டின் தீவிரவாத இயக்கமான அல்-ஷபாப் கடந்த சனிக்கிழமை இரவு நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 3 பாகிஸ்தானியர்கள், 2 இந்தியர்கள், ஆப்கானிஸ்தான் மற்றும் அல்ஜீரியாவைச் சேர்ந்த ஒருவர் மற்றும் 3 பேரும் பலியாகினர். காரின் மூலம் வெடிகுண்டை வெடிக்கச் செய்து இந்த தாக்குதலை தீவிரவாதிகள் நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த அமைப்பு ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் நாடுகளின் பயிற்சி பெற்ற தீவிரவாதிகளிடம் பயிற்சி பெறுவதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு வெடிகுண்டை வைக்கும் போது, தீவிரவாதி ஒருவர் பலியானார்.