திருப்பதி மலையில் மேலும் ஒரு சிறுத்தை சிக்கியது : பக்தர்கள் மகிழ்ச்சி
திருமலை: திருப்பதி மலைப்பாதையில் ஏற்கனவே ஒரு சிறுத்தை சிக்கிய நிலையில், தற்போது மேலும் ஒரு சிறுத்தை பொறியில் சிக்கியது.
திருப்பதி மலைப்பாதையில் கடந்த சில தினங்களுக்கு முன் 2 சிறுமிகளை ஆண் சிறுத்தை புலி தாக்கியது. இதில் அவர்கள் இருவரும் காயமடைந்தனர். இதையடுத்து அந்த புலியை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர்.
இந்த நிலையில் தனது ஜோடியைக் காணாமல், ஆண் சிறுத்தையைத் தேடி அதன் ஜோடியான பெண் சிறுத்தை மலையெங்கும் திரிந்து கொண்டிருந்தது.
கடந்த சில நாட்களுக்கு முன் மான்பூங்காவில் உள்ள ஒரு மானை சிறுத்தை ஒன்று வேட்டை ஆடியது. இந்த நிலையில், அந்த இடத்திற்கு அருகில் வைக்கப்பட்டிருந்த கூண்டில் 6 வயது மதிக்கத்தக்க ஆண் சிறுத்தை நேற்று சிக்கியது.
இதையடுத்து வன ஊழியர்கள் கூண்டில் சிக்கிய சிறுத்தையைப் பிடித்தனர். அதை வனப்பகுதியில் கொண்டு விட முடிவு செய்துள்ளனர். திருப்பதி மலைப்பாதையில் நடமாடிய 2 சிறுத்தைகள் பிடிபட்டுள்ளதால் பக்தர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
இருப்பினும் ஜோடியைத் தேடி வந்த பெண் சிறுத்தை இதுவரை சிக்கவில்லை. சிறுத்தையின் நடமாட்டம் இருப்பதை வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதை உறுதி செய்த பின்னரே இரவு நேரத்தில் பக்தர்கள் மலைப்பாதையில் நடந்து செல்ல விதிக்கப்பட்ட தடை நீக்கப்படும் என்று தேவஸ்தான அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
திருப்பதி மலைப்பாதையில் மேலும் ஒரு சிறுத்தைப் புலி பிடிபட்டிருப்பதை அடுத்து திருப்பதி மலைப்பாதை வழியாக கோவிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்த நேரத்தை திருப்பதி தேவஸ்தானம் மாற்றியுள்ளது.
திருப்பதி மலைப்பாதையில் பக்தர்கள் முதலில் காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டும் நடந்து செல்ல அனுமதிக்கப்பட்டனர். அதற்கு மாறாக தற்போது கூடுதலாக காலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை நடந்து செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.