For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அதிமுகவில் இருந்து மேலும் பலர் திமுகவுக்கு வர இருக்கிறார்கள். ஸ்டாலின்

By Chakra
Google Oneindia Tamil News

ஈரோடு: முத்துசாமி, கரூர் சின்னச்சாமியைப் போல அதிமுகவில் இருந்து மேலும் பலரும் திமுகவுக்கு வரவுள்ளார்கள் என்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

ஈரோடு வ.உ.சி பூங்கா மைதானத்தில் நடந்த திமுக பொதுக் கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், இது சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும் முன்னாள் அமைச்சர் முத்துச்சாமியின் சீரிய முயற்சியால் மாபெரும் மாநாடாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இங்கே பேசிய முத்துச்சாமி அதிமுகவில் இப்படி மனம் திறந்து பேசமுடியுமா என்று வருத்தத்துடன் கேட்டார். நான் கேட்கிறேன், அதிமுகவில் முதலில் உங்களால் இப்படி உட்கார முடியுமா? (மேடையில் நாறாகாலியில் ரிலாக்ஸ்டாக உட்கார்ந்திருந்தார் முத்துசாமி).

அண்ணா அறிவாலயத்தில் ஏறத்தாழ 30,000 தொண்டர்களோடு வந்து முத்துச்சாமி இணைந்தபோது தாமதமாக வந்துவிட்டேன் என்று வருத்தப்பட்டார். அப்போது நான் நீங்கள் லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வந்திருப்பதாக கூறினேன்.

முத்துச்சாமி, கரூர் சின்னசாமி போன்றவர்கள் அதிமுகஎன்ற இயக்கம் மலர எவ்வளவு பாடுபட்டார்கள் என்று கேள்விப்படும்போது தன்னலம் கருதாமல் உழைக்கும் அவர்கள் திமுகவில் அல்லவா இருக்க வேண்டும் என்று பெருமூச்சு விட்டதுண்டு. அதற்காக தூதும் அனுப்பியதும் உண்டு.

இன்னும் பலர் அங்கிருந்து வர இருக்கிறார்கள். எனவே தூதுவர்களை பற்றி இப்போது சொல்வது சரியாக இருக்காது.

தமிழகத்தை பெருந்தலைவர் காமராஜர், பெரியவர் பக்தவச்சலம், அண்ணா, எம்.ஜி.ஆர், கலைஞர், அம்மையார் ஜெயலலிதா ஆகியோர் ஆண்டிருக்கிறார்கள்.

அப்போது நடந்த இடைத் தேர்தல்களில் வெற்றி, தோல்வி மாறி, மாறியே வந்து இருக்கின்றன. ஆளுங்கட்சி முழுமையாக வென்ற வரலாறே இல்லை. ஆனால் 5ம் முறையாக தமிழகத்தின் முதல்வராக கருணாநிதி பொறுப்பேற்ற பின்னர் 11 இடைத் தேர்தல்களை சந்தித்து அனைத்திலும் திமுக அணி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.

திமுக மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையால் தான் மாற்று கட்சியினர் இன்று சாரை சாரையாக வந்து கருணாநிதியின் கரம் பிடிக்கிறார்கள்.

இன்று தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றிய சாதனை அரசாக திமுக அரசு திகழ்கிறது. புதிது, புதிதாக கட்சி தொடங்குவதும், கட்சி தொடங்கும் முன்பே நான்தான் முதல்வர் என்று கூறியவர்கள் பலர் அரசியல் அனாதைகளாக, அகதிகளாக அலைவதைக் காண்கிறோம்.

ஆனால், அண்ணா இந்த இயக்கத்தை ஆரம்பித்தபோது உடனே தேர்தலை சந்திக்கவில்லை. தொண்டர்களின் கருத்தைக் கேட்டு 99 சதவீதம் பேர் தேர்தலில் போட்டியிடலம் என்று சொன்ன பிறகு தான் 1957ல் தான் முதல் தேர்தலை சந்தித்தார்.

இந்த இயக்கத்திற்கு வெற்றி-தோல்விகள் மாறி, மாறி வந்திருக்கின்றன. நமக்கு வெற்றி கிடைத்தபோது பதவி வெறிபிடித்து அலையவும் இல்லை. தோற்றபோது துவண்டு விடவும் இல்லை.

வெற்றி, தோல்வியை ஒன்றாக கருதி இந்த நாட்டு மக்களுக்கு உண்மையாக தொண்டாற்றி வரும் இயக்கம் தான் திமுக இந்த அரசின் சாதனைகள் தொடரும். தலைவர் கருணாநிதி 6வது முறையாக தமிழக முதல்வராக பதவி ஏற்பார். இதில் சந்தேகமே வேண்டாம் என்றார் ஸ்டாலின்

முன்னதாக ஈரோடு அருகே குறிச்சி ஊராட்சியில் ரூ.2 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பெரியார் நினைவு சமத்துவபுரம் திறப்பு விழாவில் பேசிய ஸ்டாலின்,

மகளிர் சுய உதவிக் குழுக்கள் திட்டம் கலைஞர் கடந்த 1989ம் ஆண்டு முதல்வர் கருணாநிதியால் தொடங்கப்பட்டது. பெண்கள், தாய்மார்கள் மற்றும் சகோதரிகள் இந்த சுய உதவிக் குழுக்களில் உறுப்பினராகி பல பயன்களை அடைந்து வருகிறார்கள்.

சொத்தில் பெண்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும் என்று 1929ம் ஆண்டு பெரியார் தீர்மானம் நிறைவேற்றினார்.
பெரியாரின் விருப்பத்தை 60 ஆண்டுகளுக்கு பிறகு 1989ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த திமுக அரசு நிறைவேற்றியது. பெரியாரின் கனவுகளை நிறைவேற்றும் அரசாக திமுக ஆட்சி செயல்பட்டு வருகிறது.

இந்தியாவில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் செயல்படுத்தப்படுவதில் தமிழ்நாடு தான் முதலிடத்தில் உள்ளது.

தமிழ் நாட்டில் தற்போது மொத்தம் 4 லட்சத்து 48 ஆயிரத்து 795 குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த மூன்றரை ஆண்டுகளில் மட்டும் தமிழ்நாட்டில் 4 ஆயிரம் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தொடங்கப்பட்டுள்ளன என்றார்.

ஸ்டாலின் பெயர் வந்தது எப்படி?:

முன்னதாக சென்னையில் திமுக பிரமுகர் இல்லத் திருமணத்தை துநடத்தி வைத்துப் பேசிய ஸ்டாலின்,

மணமக்களிடம் உரிமையோடு ஒன்று கேட்டுக் கொள்கிறேன். உங்கள் குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயரை சூட்டுங்கள். தமிழ்ப் பெயர் சூட்ட சொல்கின்ற தகுதி உனக்கு உண்டா? என்று என்னைப் பார்த்து கேட்கலாம்.

ஸ்டாலின் என்ற பெயர் தமிழ்ப் பெயர் அல்ல. மணமகன் பெயரும் ஸ்டாலின் தான். அவருடைய தந்தை தி.வ.விஸ்வநாதனிடம், ஸ்டாலின் என்ற பெயரை எதற்காக வைத்தீர்கள்?' என்று கேட்டேன்.

அவர், உங்கள் நினைவாக வைத்தேன்' என்றார்.

நான் பிறந்தபோது தந்தை பெரியார் பெயரில் உள்ள அய்யாவையும், அறிஞர் அண்ணாதுரை பெயரில் உள்ள துரையும் எடுத்து எனக்கு அய்யாதுரை என்று பெயர் சூட்ட தலைவர் கலைஞர் நினைத்திருந்தார்.

ஆனால் எதிர்பாராதவிதமாக ஸ்டாலின் என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. ரஷ்ய அதிபர் மாபெரும் புரட்சி செய்த ஸ்டாலின் இறந்தவுடன் சென்னை கடற்கரையில் அவருக்கு இரங்கல் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் தலைவர் கலைஞர் பேசிக்கொண்டிருக்கும்போது ஒரு துண்டு சீட்டில் உங்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது என்று எழுதி அதனை தலைவர் கலைஞரிடம் கொடுத்துள்ளனர்.

அதனைப் படித்து பார்த்த தலைவர், எனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஸ்டாலினுக்காக நடந்து கொண்டிருக்கும் இந்த இரங்கல் கூட்டத்தில் அவரது நினைவாக என் மகனுக்கு ஸ்டாலின் என்று பெயர் சூட்டுகிறேன்'' என்று கூட்டத்தில் அறிவித்தார்.

ஸ்டாலினின் கொள்கை, சித்தாந்தம் மீதுள்ள பற்றால் எனக்கு இந்த பெயரை சூட்டினார் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X