தர்மபுரி தண்டவாள குண்டுவெடிப்பு வழக்கு-நக்சலைட் சுந்தரமூர்த்திக்கு 5 ஆயுள் தண்டனை
சென்னை: தர்மபுரியில் ரயில் தண்டவாளம் குண்டு வைத்துத் தகர்ப்பட்ட வழக்கில் கைதான நக்சலைட் சுந்தரமூர்த்திக்கு 5 ஆயுள் தண்டனை விதித்து சென்னை தடா கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பைக் கண்டித்து சுந்தரமூர்த்தியின் வழக்கறிஞர் ஆவேசக் குரல் எழுப்பியதால் நீதிபதி தனது அறைக்குச் சென்று கதவைப் பூட்டிக் கொண்டார்.
5.10.1992 அன்று தருமபுரி மாவட்டம் கமலாபுரம் ரயில் நிலையத்திற்கும் பாலக்கோடு ரயில் நிலையத்திற்கும் இடையே தண்டவாளம் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக தர்மபுரி ராமையன்பட்டியைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி, மாந்தோப்பைச் சேர்ந்த வேலு என்ற பூபாலன், பாலக்கோடைச் சேர்ந்த சிசுபாலன் ஆகியோர் மீது திருப்பத்தூர் கியூ பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
குற்றம் சாட்டப்பட்ட மூவரும் நக்சலைட் இயக்க ஆதரவாளர்கள் ஆவர். இந்த வழக்கு விசாரணை சென்னை தடா கோர்ட்டில் நடந்து வந்தது. மூன்று பேரில் வேலு தலைமறைவாகிவிட்டார். சிசுபாலன் கடந்த 29.10.2003 அன்று கைது செய்யப்பட்டு 5 ஆண்டு ஜெயில் தண்டனை அனுபவித்தார். ஆனால், சுந்தரமூர்த்தி மட்டும் போலீசில் சிக்காமல் தப்பி வந்தார்.
கடந்த 9.7.2010 அன்று திருப்பூர் பிச்சாம்பாளையத்தில் சுந்தரமூர்த்தி போலீசில் சிக்கினார். வேறொரு வழக்கில் கைது செய்யப்பட்ட அவர் பின்னர், தண்டவாளம் தகர்ப்பு வழக்கில் 14.8.2010 அன்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கு சென்னை தடா கோர்ட்டில் நடந்து வந்த நிலையில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
நேற்று நீதிபதி தட்சிணாமூர்த்தி பரபரப்பு தீர்ப்பளித்தார்.
அவர் கூறுகையில்,
கூட்டு சதி, வெடிகுண்டு வைத்து தண்டவாளம் தகர்ப்பு, பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்பட 5 பிரிவுகளில் ஆயுள் தண்டனையும், ஒரு பிரிவில் 7 ஆண்டு சிறைத்தண்டனையும் விதிக்கப்படுகிறது. அதோடு, 2 பிரிவுகளில் தலா ரூ.500-ம் ஒரு பிரிவில் ரூ.ஆயிரம் (மொத்தம் ரூ.2000) அபராதமும் விதிக்கப்படுகிறது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட வேலு என்ற பூபாலன் தலைமறைவாக உள்ளார். எனவே, வழக்கு சம்பந்தப்பட்ட ஆவணங்களையும், பொருட்களையும் அழித்து விடக் கூடாது என்று உத்தரவிட்டார்.
முன்னதாக, சுந்தரமூர்த்திக்காக ஆஜராகிய அப்போது சீனியர் வக்கீல் சங்கரசுப்பு குறுக்கிட்டு, மனுதாரர் சார்பில் போடப்பட்ட ஆய்வு மனுக்களை பரிசீலிக்க வேண்டும். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிக்கே 5 ஆண்டுதான் தண்டனை விதிக்கப்பட்டது, அப்படி இருக்கும் போது சுந்தரமூர்த்திக்கு மட்டும் ஆயுள் தண்டனை விதிப்பது நியாயம் அல்ல என்றும் ஆவேசமாக பேசினார்.
இதையடுத்து நீதிபதி எழுந்து தனது அறைக்குப் போய் விட்டார். உள்ளே போய் கதவை மூடிக் கொண்ட அவர் அரை மணிநேரமாக வரவில்லை. இதனால் தீர்ப்பு வாசிக்கப்படாமல் இருந்தது. பின்னர் வந்து தீர்ப்பை வாசித்தார் நீதிபதி.