For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மரணத்தை வென்று மீண்டுள்ளேன்-காஸ்ட்ரோ உற்சாகப் பேட்டி

By Chakra
Google Oneindia Tamil News

Fidel Castro
ஹவானா: மரணத்தின் வாயிலைத் தொட்டுவிட்டு திரும்பி வந்திருக்கிறேன் என்று கியூபாவின் முன்னாள் அதிபரும், முதுபெரும் கம்யூனிஸ தலைவருமான பிடல் காஸ்ட்ரோ (84) உணர்ச்சி ததும்ப தெரிவித்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் என் உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டபோது பிழைப்பேனோ, மாட்டேனோ என்று நினைத்தேன். ஆனால் நான் மரணத்தை வென்றுவிட்டேன் என்று மெக்ஸிகோ நாட்டின் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பிடல் காஸ்ட்ரோ கூறியுள்ளார்.

அந்த பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் அவர் மேலும் கூறியதாவது,

எனக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டபோது பிழைப்பேனா,இல்லை இறந்திடுவேனா, மருத்துவர்கள் என்னை காப்பாற்றிவிடுவார்களா, இல்லை காப்பாற்ற முடியாது என்று கைவிட்டுவிடுவார்களா என்றெல்லாம் எனக்குள் நான் எத்தனையோ கேள்விகளைக் கேட்டுக் கொண்டேன். ஆனால் நான் குணமடைந்து விட்டேன்.

உடல்நிலை சற்றுத் தேறியவுடன் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு வந்தேன். அதன் பிறகு நான் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப கடுமையாகப் போராடினேன். உடல்நலக் குறைவால் எனது கால்களும், கைகளும் வழுவிழந்து இருந்தன. இதனால் எனது கால்களையும், கைகளையும் பழையபடி கொண்டுவர முயற்சித்தேன்.

எழுந்து நிற்கவே படாதபாடு பட்டேன். என்னால் முடியும் என்ற நம்பிக்கையுடன் நடக்க ஆரம்பித்தேன். எழுதி எழுதி கைகளை சரிசெய்தேன். என் உடலையும், உள்ளத்தையும் மீணடும் புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொண்டேன். இதனால் தான் என்னால் ஓரளவுக்காவது பழைய நிலைக்கு திரும்ப முடிந்தது.

உடல் நலம் பாதிக்கப்பட்டபோது உடல் எடை வெகுவாகக் குறைந்தது. தற்போது உடல் எடை அதிகரித்து 85 கிலோவாக உள்ளது. எனினும் உணவு, மருந்து உட்கொள்வதில் மருத்துவர் ஆலோசனையை தவறாது கடைப்பிடிக்கிறேன்.

எனது உடல்நிலை குறித்து எனக்குள் எழுந்த கேள்விகளையும், சந்தேகங்களையும் மருத்துவர்களிடம் கேட்டுக் கேட்டு தற்போது எனக்கு மருத்துவம் தொடர்பாக நிறைய விஷயங்கள் தெரியும். சுருக்கமாகச் சொன்னால் நான் பட்டம் பெறாத மருத்துவராகி விட்டேன் என்று அவர் கூறினார்.

இந்த பேட்டியின் போது பிடல் காஸ்ட்ரோ உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் காணப்பட்டார். கேட்கும் கேள்விகளுக்கு நகைச்சுவையாக பதிலளித்து எங்கள் அனைவரையும் சிரிக்க வைத்தார் என்று அவரைப் பேட்டி கண்ட பத்திரிகையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கியூபாவை ஏறத்தாழ அரைநூற்றாண்டு காலமாக ஆண்டவர் கம்யூனிஸ தலைவர் பிடல் காஸ்ட்ரோ. கடந்த 2006-ம் ஆண்டு மத்தியில் அவருக்கு திடீரென இரைப்பையில் கோளாறு ஏற்பட்டது. மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருந்த காஸ்ட்ரோ, மரண வாயிலைத் தொட்டுத் திரும்பினார்.

காஸ்ட்ரோவிற்கு உடல்நிலை பாதிக்கப்பட்டபோது அவரை உயிராய் நேசிக்கும் கியூபா மக்கள் கவலையில் ஆழ்ந்தனர். எனினும் அவரின் உடல்நிலை படிப்படியாகத் தேறியது.

இனியும் தன்னால் அதிபர் பதவியில் சிறப்பாகச் செயல்பட முடியாது என்று நினைத்த அவர் அதிபர் பதவியை தனது சகோதரர் ராவுல் காஸ்ட்ரோவிடம் கடந்த 2008-ம் ஆண்டு ஒப்படைத்தார். தற்போது அரசுக்குத் தேவையான ஆலோசனைகளை மட்டும் வழங்கி வருகிறார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X