108 ஆம்புலன்ஸ் திட்டம்-மேலும் 200 ஆம்புலன்ஸ்களை வாங்க கருணாநிதி அனுமதி
பண்ருட்டி : பொது மக்கள் நலனை கருத்தில் கொண்டு மேலும் 200, 108 ஆம்புலன்ஸ்கள் வாங்க தமிழக முதல்வர் அனுமதி அளித்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
பண்ருட்டியில் அரசு பொறியியல் கல்லூரியில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கான கால்கோள் விழாவில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கலந்து கொண்டார்.
பின்பு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
தமிழகத்தில் 385 மையங்களில் 108 ஆம்புலன்ஸ் சேவை செயல்பட்டு வருகின்றது. விபத்து மற்றும் நோய்கள் மூலம் பாதிக்கப்படும் மக்கள் 12 நிமிடங்களில் ஆம்புலன்ஸ் சேவையை பெற்று வருகின்றனர்.
இந்த கால விரயத்தை குறைக்கும் நோக்கத்தில் 108 ஆம்புலன்ஸ்கள் மேலும் 200 வாங்க முதல்வர் கருணாநிதி அனுமதி அளித்துள்ளார்.
இவை செயல்பாட்டுக்கு வந்தால் பாதிக்கப்படுபவர்கள் ஐந்தே நிமிடத்தில் சேவையைப் பெற முடியும். 108 ஆம்புலன்ஸ் சேவையால் இதுவரை மொத்தம் 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயன் அடைந்துள்ளனர் என்று அவர் கூறினார்.