மதுரை: விநாயகர் சதுர்த்தி விழாவில் மோதல்-பக்தர்கள் மீது தடியடி
மதுரை: மதுரை மாவ்டடம் எழுமலை கிராமத்தில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவின்போது மோதல் ஏற்பட்டது. இதையடுத்து பக்தர்களை போலீஸார் தடியடி நடத்திக் கலைத்தனர்.
உசிலம்பட்டியை அடுத்த எழுமலையில் உள்ள செல்வ கணபதி ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்தினர். இதில் ஏராளமான பக்தர்கள் பூஜைகள் செய்து கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் எழுமலையை சுற்றியுள்ள இ.பெருமாள்பட்டி, வங்கி நாராயணபுரம், பேரையம் பட்டி, சீல்நாயக்கன்பட்டி, எஸ்.பாப்பிநாயக்கன்பட்டி, சங்கரலிங்காபுரம் உள்பட சுமார் 23 கிராமங்களில் இருந்து விநாயகர் சிலை கள் செல்வ கணபதி ஆலயத்திற்கு வந்தது.
அதன் பின்பு அங்கிருந்து அனைத்து சிலைகளும் ஊர் வலமாக எழுமலையின் முக்கிய வீதிகள் வழியாக கொண்டு செல்லப்பட்டன. ஊர்வலத்தை பாரதீய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் சசிராமன் தொடங்கி வைத்தார்.
விநாயகர் சிலை ஊர் வலம் முக்கிய வீதிகள் வழியாக வந்த போது அதில் கலந்து கொண்ட பக்தர்கள் பட்டாசுகளை வெடித்தும், கும்பலாகவும் சென்றனர். அவர்களை போலீசார் ஒழுங்குபடுத்தினர்.
அப்போது திடீரென போலீஸாருக்கும், பக்தர்களுக்கும் இடையே மோதல் மூண்டது. தள்ளுமுள்ளு ஏற்பட்டதைத் தொடர்ந்து போலீஸார் தடியடி நடத்தி அனைவரையும் கலைத்தனர். அதில் ஒருவர் காயமடைந்தார். அவரை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர்.