புகைப்படத்துடன் கூடிய இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு-27 லட்சம் பெயர்கள் சேர்ப்பு
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான, புகைப்படத்துடன் கூடிய இறுதி வாக்காளர் பட்டியலை இன்று தேர்தல் ஆணையம் வெளியிட்டது.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கல் மற்றும் முகவரி மாற்றம் தொடர்பான பணிகள் கடந்த ஜனவரியில் தொடங்கின. பெயர் சேர்ப்பு, நீக்கலுக்காக 31 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். மதுரையில்தான் மிக அதிக அளவிலானோர் விண்ணப்பித்தனர். இவர்களைப் பரிசீலித்து உரியவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்தப் பட்டியல் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் நிருபர்களிடம் கூறுகையில்,
தமிழ்நாட்டில் இன்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் விண்ணப்பம் செய்த 31 லட்சம் பேரில் தகுதி உள்ள 27 லட்சம் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மாவட்டங்களில் 5 முதல் 9 சதவீதம் பேர் புதிய வாக்காளர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இது தான் இந்த ஆண்டுக்கான இறுதி பட்டியலாகும் என்றார்.
மாநகராட்சி அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்கள் மற்றும் பல்வேறு அரசுத் துறை அலுவலகங்களில் பொது மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியல் விரைவில் தமிழக தேர்தல் அலுவலக இணையதளத்திலும் வெளியிடப்படும்.
இன்று வெளியிடப்பட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலிலும் பெயர் இடம் பெறாதவர்கள், அக்டோபர் மாதம் நடைபெறும் சுருக்க முறை திருத்தம் மூலம் பெயரை சேர்த்துக் கொள்ளலாம்.