For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

செங்கோட்டை-புனலூர் மீட்டர்கேஜ் பாதை நாளை மூடல்: 110 வருட ரயிலுக்கு பிரியா விடை

Google Oneindia Tamil News

Punalur Train on the Bridge
செங்கோட்டை: செங்கோட்டை-புனலூர் மீட்டர்கேஜ் பாதை நாளை முதல் மூடப்படுகிறது.

தமிழகத்தையும், கேரளாவையும் இணைக்கும் முக்கிய ரயில் மார்க்கமாக புனலூர்-செங்கோட்டை பகுதி விளங்கி வருகிறது. இந்திய ரயில்வேத் துறை வரலாற்றில் பழமையான ரயில்வே மார்க்கங்களில் ஒன்றாக கருதப்படும் இந்த மீட்டர்கேஜ் ரயில் பாதை 1901-ம் ஆண்டு செயல்படத் தொடங்கியது.

சுமார் 110 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும் இந்த ரயில்வே மார்க்கம் மிகவும் இயற்கை எழில் வாய்ந்த மலைப்பகுதியில் அமைந்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வந்து செல்வர்.

செங்கோட்டையை அடுத்த கேரளாவில் அமைந்துள்ள தென்மலை, ஊருக்குண்ணு, இடைப்பாளையம், கழுதையுரூட்டி, ஆரியங்காவு ஆகிய 5 இடங்களில் 800 அடி முதல் 2800 அடி நீளம் வரை இருபது அடி அகலம், 15 அடி உயரத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையை குடைந்து அமைக்கப்பட்டுள்ள ரயில்வே குகைகள் மிகவும் பிரசித்தமானதாகும்.

இந்நிலையில் தென்னக ரயில்வேயி்ன் கடைசி மீட்டர்கேஜ் பகுதியாக கருதப்படும் செங்கோட்டை-புனலூர் மீட்டர்கேஜ் பாதையை அகல ரயில்பாதையாக மாற்ற ரயில்வேத் துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. எனவே, நாளை முதல் இப்பகுதியில் ரயில் சேவை நிறுத்தப்படுகிறது.

இது கடந்த 1997-98-ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட கொல்லம்-விருதுநகர், தென்காசி, நெல்லை, திருச்செந்தூர் அகல ரயில்பாதை திட்டத்தின் கடைசி பகுதியாகும். இந்த திட்டம் 12 வருடங்களுக்கு முன்பு ரூ. 462 கோடி மதிப்பீட்டில் துவங்கப்பட்டது. முதல் கட்டமாக விருதுநகர்-செங்கோட்டை அகல ரயில் பாதை பணிகள் முடிக்கப்பட்டு அந்த பாதையில் போக்குவரத்து தொடங்கியது.

இதைத் தொடர்ந்து நெல்லை-திருச்செந்தூர், புனலூர்-கொல்லம் அகல ரயில் பாதையும் செயல்படத் தொடங்கியது. தற்போது தென்காசி-திருநெல்வேலி அகல ரயில் பாதை பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகிறது.

செங்கோட்டை-புனலூர் அகல ரயில் பாதை பணிகள் துவங்குவதற்காக நாளை இப்பகுதியில் ரயில் சேவை நிறுத்தப்படுகிறது. சுமார் 50 கி.மீ. தூரமுள்ள இப்பாதையில் 5 குகைகளும், ஏராளமான பாலங்களும், வளைவுகளும் உள்ளது. கடந்த 2008-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இதன் மதி்ப்பீடு ரூ. 357 கோடியாக மதிப்பிடப்பட்டது. தற்போது இதன் மதிப்பீடு ரூ.380 கோடி அதிகரித்துள்ளதாக ரயில்வேத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. பல்வேறு பணிகளுக்கான டெண்டர் முடிவடைந்த நிலையில் பணிகள் துவங்குவதற்காக நாளை இந்த மார்க்கம் மூடப்படுகிறது.

சுமார் 110 ஆண்டுகள் இப்பகுதி மக்களின் ரத்தத்தோடு பின்னிப்பிணைந்த உறவாக கருதப்பட்ட செங்கோட்டை-புனலூர் மீட்டர்கேஜ் ரயில் நாளையோடு தனது இயக்கத்தை நிறுத்திக் கொள்கிறது. இது காலத்தின் கட்டாயம் என்றாலும் பலரும் இதை நினைத்து விம்முகிறார்கள்.

இதனால் கடந்த ஒரு வாரகாலமாக குழந்தைகளை ரயில் நிலையத்துக்கு அழைத்து வந்து ரயிலை காண்பிக்கின்றனர். ஏராளமான சுற்றுலா பயணிகள் பல்வேறு பகுதிகளில் இறங்கி குகைகளையும், வளைவுகளையும், இயற்கை காட்சிகளையும் ரசித்து வருகின்றனர். இதனால் இப்பகுதியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம அதிகரித்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X