For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டெல்லி துப்பாக்கி சூட்டுக்கு நாங்களே காரணம்-இந்தியன் முஜாஹிதீன்

By Chakra
Google Oneindia Tamil News

Jama Masjid
டெல்லி: டெல்லி ஜும்மா மசூதி அருகே வெளிநாட்டுப் பயணிகள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடுக்கு இந்தியன் முஜாகிதீன் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

காஷ்மீரில் பொது மக்களை ராணுவம் சுட்டுக் கொன்று வருவதற்கு பழி வாங்கவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், டெல்லியில் நடக்கவுள்ள காமன்வெல்த் போட்டிகளின்போது மேலும் தாக்குதல்கள் நடக்கும் என்றும் அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.

நேற்று மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம மனிதர்கள் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வேன் மீது சரமாரியாக சுட்டதில் தைவான் நாட்டு இளைஞர்கள் 2 பேர் காயமடைந்தனர்.

இதைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த காரில் குக்கரில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததாக தகவல் பரவியது. ஆனால், அதில் குண்டு ஏதும் வெடிக்கவில்லை என்று தெரியவந்துள்ளது. மின்சார சர்க்யூட் கோளாறு காரணமாகவே கார் தீ்ப்பிடித்து எரிந்ததாக தெரியவந்துள்ளது

துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தியவர்கள் மீது அப் பகுதியைச் சேர்ந்த சலீம் என்ற ரிக்ஷா ஓட்டுனர் விரட்டியுள்ளார். அவர்கள் மீது ஒரு கடைக்குப் பின்னால் மறைந்து கொண்டு கற்களை வீசியுள்ளார். இதையடுத்து இருவரும் மோட்டார் சைக்கிளில் வேகமாக தப்பியோடியுள்ளனர்.

அதே போல இந்த சம்பவத்தை பிரமோத் என் காவலரும் நேரில் பார்த்துள்ளார். இதையடுத்து இவர்களிடம் டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே இந்தத் தாக்குதலுக்கு இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

இந்த அமைப்பு செய்தி நிறுவனங்களுக்கு அனுப்பியுள்ள இ மெயிலில், ''உங்களுக்கு (மத்திய அரசு) துணிவிருந்தால் காமன்வெல்த் போட்டிகளை நடத்திப் பாருங்கள். அதற்கான விளைவுகளைச் சந்திப்பீர்கள்.

போட்டிக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன என்பதை அறிவோம். தாக்குதல் நடத்த நாங்களும் எல்லா ஏற்பாடுகளையும் செய்து வருகிறோம். அதையும் எதிர்கொள்ளத் தயாராக இருங்கள். எங்கள் எச்சரிக்கையும் மீறி போட்டிகளில் கலந்து கொண்டால் விளைவுகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல என்று கூறியுள்ளனர்.

மேலும் 2008ம் ஆண்டு டெல்லி பாட்லா ஹவுஸில் போலீஸாரால் கொல்லப்பட்ட அமீன், ஷாகித் ஆகியோருக்கு இப்போதையத் தாக்குதல் சமர்ப்பணம் செய்யப்படுகிறது என்றும், காஷ்மீரி்ல் ராணுவம் நடத்தி வரும் தாக்குதலுக்கு பதிலடியாகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

இந்த மெயிலைத் தொடர்ந்து, இந்தியன் முஜாஹிதீனுக்கு இதில் எந்த அளவுக்கு பங்கு உள்ளது என்பது குறித்து விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.

மேலும் காமன்வெல்த் போட்டிகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிர பரிசீலனை செய்யப்பட்டு வருகின்றன. இதற்கிடையே, இந்த தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போட்டிக்கான பாதுகாப்பு மையத்தைத் தொடர்பு கொண்டு விவரம் கேட்டுள்ளனவாம்.

மேலும் 30 பேரிடம் விசாரணை:

இதற்கிடையே, டெல்லி துப்பாக்கிச் சூடு தொடர்பாக 30 பேரைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் பழைய குற்றப் பின்னணி உடையவர்கள் ஆவர். இவர்களிடம் தற்போது தீவிர விசாரணை நடந்து வருகிறது.

காரி்ல் குக்கர் குண்டு வெடிக்கவில்லை?:

இதற்கிடையே, பாபி சர்மா என்பவரின் கார், சம்பவம் நடந்த 2 மணி நேரம் கழித்து வெடித்துச் சிதறியுள்ளது. ஜும்மா மசூதிக்கு அருகில்தான் இந்த கார் தீப்பிடித்து எரிந்துள்ளது. அதில் குண்டு வைக்கப்பட்டிருக்கலாமோ என்று சந்தேகம் எழுந்தது. இதையடுத்து பாபி சர்மாவைப் பிடித்து போலீஸார் விசாரித்தனர். அதில் குண்டு ஏதும் காரில் இருந்ததாக தெரியவில்லை. மாறாக சர்க்யூட் பிரச்சனை காரணமாகவே காரில் தீவிபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் பாபி சர்மாவிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந் நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தைவான் இளைஞர்கள் இருவரையும் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் நேரில் பார்த்து ஆறுதல் கூறினார்.

அடுத்த மாதம் 3ம் தேதி முதல் 14ம் தேதி வரை டெல்லியில் நடைபெறயுள்ள காமன்வெல்த் போட்டிகளை அடுத்து டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்வதற்காக உயர்நிலைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. இந்த நிலையில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X