For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெ உயிருக்கு பங்கம் விளைவிக்கும் கோழைகள் அல்ல திமுகவினர்: கனிமொழி

By Chakra
Google Oneindia Tamil News

Kanimozhi
நாகர்கோவில்: ஜெயலலிதாவிந் உயிருக்கு பங்கம் விளைவிக்கும் அளவுக்கு திமுக தொண்டர்கள் கோழைகள் அல்ல என்று திமுக எம்பி கனிமொழி கூறினார்.

நாகர்கோவிலில் நடந்த திமுக முப்பெரும் விழாவில் பேசிய அவர், பத்திரிகையாளர் திவ்யா குப்தா எழுதியுள்ள கட்டுரையில் தமிழகத்தில் மிகச் சிறந்த சுகாதார, மருத்துவ வசதிகள் கிடைக்கின்றன என்று குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், சில மேதாவிகள் இந்த ஆட்சியில் 'இலவசங்கள் பவனி' என்று கூறி வருகிறார்கள்.

திருமண உதவி திட்டமாக ரூ.25,000 வழங்கப்படுகிறது. அதற்கு பின்னால் சமூகப் புரட்சி உள்ளது. இந்த உதவித் திட்டம் 10ம் படித்தால் தான் வழங்கப்படுகிறது. இந்த உதவித் தொகையை பெறுவதற்காக பெண்களை வீட்டில் படிக்க வைக்கிறார்கள். இது சமூகப் புரட்சி இல்லையா?

இந்தியாவில் பிரசவத்தின்போது பலியாகும் பெண்களின் எண்ணிக்கையை தமிழகம் குறைத்து காட்டியுள்ளது. காரணம், சிறந்த மருத்துவ வசதிகள் தான்.

முன்பு இருந்த அம்மையார் ஜெயலலிதா ஆட்சி பற்றி சிந்தித்து பார்த்தால் வேறு வார்த்தைகள் வரவில்லை. பயம், அச்சுறுத்தல் என்று சர்வாதிகாரி ஆட்சி தான் நினைவுக்கு வருகிறது. யார் எதிர்த்து கேட்டாலும் சிறைவாசம். ஆசிரியர், அரசு பணியாளர்களை அச்சப்படுத்துவதே தாரக மந்திரமாக இருந்தது.

ஜெயலலிதா பதவி ஏற்ற ஒரு மாதத்தில் தலைவரை நள்ளிரவில் கைது செய்தார். நாடாளுமன்றத்தில் லாலு பிரசாத் யாதவ் போன்ற அரசியல் கட்சி பிரமுகர்கள் என் தலைவருக்கு என்ன ஆனது என்று கேட்டனர். நீதிபதி தலைவரை மருத்துவமனைக்கு அனுப்ப சொல்லியும், சிறைக்கு அழைத்து சென்று கட்டாந்தரையில் உட்கார வைத்தனர்.

இப்படிப்பட்ட ஆட்சி மீண்டும் தமிழகத்தில் வர தமிழன், திமுக தொண்டன் அனுமதிக்க மாட்டார்கள்.

ஜெயலலிதா உயிருக்கு ஆபத்து என்று கூறுகிறார். தனிப்பட்ட ஜெயலலிதா உயிருக்கு பங்கம் விளைவிக்கும் கோழைகள் அல்ல திமுக தொண்டர்கள்.

உங்களை போன்ற சர்வாதிகாரி நிழல் கூட மண்ணில் விழ விடாமல் ஜனநாயக வழியிலே தேர்தலை சந்தித்து விரட்டியடிப்போம் என்றார் கனிமொழி.

நான் சொல்கிறேன்.. கூட்டணியில் இடமில்லை-அன்பழகன்:

சிறப்புரை ஆற்றிய நிதியமைச்சர் பேராசிரியர் க.அன்பழகன் பேசுகையில், இந்த 5 ஆண்டு ஆட்சியில், 5-வது முறையாக நடக்கும் இந்த ஆட்சியில் அகில இந்திய அளவில் வேறு எந்த மாநிலமும் ஈடு செய்ய முடியாத சாதனைகள் செய்யப்பட்டுள்ளது என்பதை நாம் மட்டுமல்ல, அனைவரும் பாராட்டுகிறார்கள். வியக்கிறார்கள். இந்த அரசின் சாதனைகளை மணிக்கணக்கில் சொல்லலாம்.

இந்தியாவில் நிலையான அரசு இருக்க வேண்டும். சிறுபான்மை மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும். சாதி சமயத்துக்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டும். அப்படி ஒன்று இருக்க வேண்டுமானால் காங்கிரஸ் கட்சி மத்தியில் இருக்க வேண்டும் என்று விரும்பிய கருணாநிதி ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகித்தார். அவர்களுக்கும் ஆட்சி அமைக்க நமது ஆதரவு தேவைப்பட்டது. தற்போது மறுபடியும் வெற்றி பெற்று மன்மோகன் சிங் பிரதமராக விளங்கி வருகிறார்.

மத்தியில் கூட்டாட்சி, தமிழகத்தில் சுயாட்சி என்று அண்ணா கூறியதன் அடிப்படையில் இந்த கூட்டணி தொடர்கிறது. இது இந்தியாவின் ஒட்டுமொத்த நன்மைக்காகத்தான்.

வரும் சட்டமன்ற தேர்தலில் இந்த அணிதான் வெற்றி பெறும். கருண்நிதி தான் மீண்டும் முதல்வர் என்று நாடே சொல்கிறது. சிலர் அவரை விமர்சிக்கிறார்கள். அவர்கள் யாரென்று தெரியவில்லை. சிலர் கூட்டணி குறித்து பேச இடமில்லை என்கிறார்கள். ஆனால், யாருக்கும் இங்கு இடம் இல்லை என்று நான் சொல்கிறேன்.

அண்ணா உருவாக்கிய இயக்கம், கருணாநிதி கட்டிக்காத்த இயக்கம். எந்த கட்சிக்கும் இப்படி விரும்பி வரும் கூட்டம் இருந்ததில்லை, இருக்கப் போவதுமில்லை. தேடி வரும் கூட்டம், லட்சியம் உள்ள கூட்டம் திமுகவுக்கு மட்டுமே இருக்க முடியும் என்றார்.

இது பிரியாணிக்கு வந்த கூட்டம் அல்ல-குஷ்பு:

முன்னதாகப் பேசிய நடிகை குஷ்பு, இங்கு கூடியிருக்கும் மாபெரும் கூட்டத்தைப் பார்த்து தலைவருக்கு மிக மகிழ்ச்சியாக உள்ளது. அது அவரது முகத்தைப் பார்த்தாலே தெரிகிறது.

எதிர்க்கட்சி தலைவி ஒரு கூட்டம் நடத்தினார். நானும் அந்த கூட்டத்தைப் பார்த்தேன். எதிர்க்கட்சி தலைவியின் முகத்தில் சந்தோஷமே இல்லை. யோசித்துப் பார்த்தேன். அப்போதுதான் எனக்கு ஞாபகம் வந்தது. வடநாட்டில் ஒரு தலைவர் கூட்டம் நடத்தினார். மேடையில் அவருக்கு 60 மாலைகள் போட்டார்கள். ஆனாலும் அவரது முகத்தில் சந்தோஷம் இல்லை. கடுகடுப்பாக முகம் இருந்தது.

கட்சி நிர்வாகி அவரிடம், தலைவரே! 60 மாலைகள் விழுந்திருக்கிறதே, பிறகு ஏன் சோகமாக இருக்கிறீர்கள்? என்று கேட்டார். அதற்கு தலைவர், "நான் 90 மாலைகளுக்கு பணம் கொடுத்தேன். ஆனால் 60 மாலைகள்தான் விழுந்திருக்கிறது'' என்று கூறினார். காசு வாங்கிவிட்டு வரவில்லையென்றால் கோபம் வரத்தானே செய்யும்.

ஆனால் இங்கு வந்த கூட்டம் அப்படி அல்ல. பிரியாணிக்கு ஆசைப்படும் கூட்டம் அல்ல. தலைவர் மீது பாசம் உள்ள கூட்டம். இந்த மாபெரும் சக்தியால் கலைஞரின் மனம், அடுத்த தலைமுறைக்காக சிந்திக்கிறது. அடுத்த தலைமுறைக்காக சிந்திக்கும் தலைவர் கருணாநிதி மட்டும்தான்.

நமது தலைவரைப் பார்த்து தீய சக்தி என்று சொல்கிறார் ஒருவர். அவர் தீய சக்தி அல்ல. தூய சக்தி. தமிழர்களின் ஊக்க சக்தி. தமிழ்நாட்டின் ஆக்க சக்தி.

கூட்டணி பற்றி பேசுகிறார்கள். நீங்கள் என்ன கூட்டணி வைத்தாலும் தலைவர், தளபதி, அஞ்சாநெஞ்சர் இந்த மூவேந்தர் முன் எந்த கூட்டணி வந்தாலும் தூள் தூள் ஆகிவிடும் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X