• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அயோத்தி தீர்ப்பு: அனைவரும் அமைதி காக்க கருணாநிதி கோரிக்கை

By Chakra
|

Karunanidhi
நாகர்கோவில்: அயோத்தி பிரச்சனையில் நீதிமன்றத் தீர்ப்பு வெளியாகும் தினத்தில் அனைத்துத் தரப்பினரும் அமைதி காக்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.

பெரியார், அண்ணா ஆகியோரின் பிறந்த நாள் விழா, திமுக ழகம் தொடங்கப்பட்ட நாள் விழா ஆகிய முப்பெரும் விழா, நாகர்கோவில் நகராட்சி பொருட்காட்சி திடலில் நடந்தது.

மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான திமுகவினர் கூடியதால் நகரமே திணறியது.

விழாவில், திமுக அறக்கட்டளை சார்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு நிதி மற்றும் சான்றிதழ்களை முதல்வர் கருணாநிதி வழங்கினார்.

பாரதிதாசன் பாடல் ஒப்புவித்தல் போட்டியில் மாநில அளவில் தேர்வு பெற்ற கல்லூரி மற்றும் பள்ளிக்கூட மாணவர்களுக்கு சான்றிதழ்களையும், பரிசுகளையும் வழங்கினார்.

அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்துக்கு பெரியார் விருதையும், திமுக தொழிற்சங்க தலைவர் செ.குப்புசாமிக்கு அண்ணா விருதையும், ஜி.எம்.ஷாவுக்கு கலைஞர் விருதையும், ராஜம் ஜானுக்கு பாரதிதாசன் விருதையும் கருணாநிதி வழங்கினார்.

பின்னர் பேசிய கருணாநிதி, குமரி மாவட்டத்துக்கு நான் வந்து இடையில் நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. இன்றைக்கு காணுகின்ற எழுச்சி, மலர்ச்சி, இவைகளெல்லாம் பார்க்கும்போது இது குமரி மாவட்டம் தானா? வேறு மாவட்டங்களில் இருந்து எழுச்சியை, உணர்ச்சியை கடன்பெற்று பரவசப்படுத்திக் கொண்டிருக்கின்ற புதிய மாவட்டமா? என்கிற அளவிற்கு இந்த மகத்தான விழாவை ஒரு மாநாடுபோல நடத்திக்கொண்டிருப்பதை பார்க்கும்போது பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

நாகர்கோவில் என்பது ஒரு அரசியல் தேர்ச்சி பெற்ற பகுதி. இங்கே தான் காமராஜர் நாடாளுமன்ற தேர்தலில் நின்று, எங்களுடைய எதிர்ப்புகளையெல்லாம் மீறி, ஜனநாயகரீதியிலான எதிர்ப்பு தான், வெற்றி பெற்ற இடம்.

இங்கே தான் குமரி மாவட்டம் தாய் தமிழகத்தோடு இருந்தே தீர வேண்டும் என்பதற்காக மார்ஷல் நேசமணி தலைமையில் மாபெரும் போராட்டங்களை நடத்திய தொண்டர்கள் இன்னமும் இருக்கிறார்கள்.

1957ல் சட்டமன்றத்தில் முதல் சட்டமன்ற உறுப்பினராக குளித்தலையில் இருந்து திமுக சார்பில் நான் சென்று அமர்ந்தபோது என்னோடு சட்டமன்றத்தில் அமர்ந்தவர் மார்ஷல் நேசமணி. குமரி மாவட்டம் தாய் தமிழகத்தோடு இருக்க வேண்டும் என்று தளபதியாக இருந்து போராடியதால் மார்ஷல் என்ற மகுடம் சூட்டப்பட்டவர்.

மகுடம் சூட்டினார்களே தவிர, அவருக்கு தரவேண்டிய மரியாதையை இந்த மாவட்டத்து மக்கள் தரவில்லை என்பது தான் எனக்குள்ள மனக்குறை. அவர் பெயரால் பேருந்து நிலையம் இருக்கலாம், அவருக்கு சிலை இருக்கலாம். ஒரு மணிமண்டபம் வேண்டாமா என்ற மனக்குறை இந்த மாவட்டத்து, நகரத்து மக்களுக்கு நிரம்ப இருக்கிறது என்பதை நான் நன்றாக அறிவேன்.

அதனால் தான் நான் இங்கே வந்து இறங்கியபோது, லட்சக்கணக்கான கையெழுத்துகளுடன் இருந்த கோரிக்கையை என்னிடம் கொடுத்து, அந்த கோரிக்கையை நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள். நான் அவர்களுக்கு சொல்வேன், இந்த கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்று சர்க்கார் பாஷையிலே சொல்லிவிட்டு விடைபெற விரும்பவில்லை. பரிசீலித்து ஆவண செய்யப்படும் என்று என்னுடைய மொழியிலேயே உங்களுக்கு உறுதி அளிக்கின்றேன். எப்போது என்று கேட்பீர்களேயானால், இப்போதே நாளைக்கே அதற்கான ஏற்பாடுகள் நடைபெறும்.

அதைத்தொடர்ந்து இங்கே கட்டப்படுகின்ற மார்ஷல் நேசமணியின் அந்த மண்டபத்தை திறக்க வருகிற ஜுன் மாதத்திலே நான் வருவேன். ஏனென்றால் மே மாதத்திலே சட்டமன்றத் தேர்தல். அந்த நேரத்திலே வந்தால் தேர்தல் கமிஷன் இது தேர்தலுக்கு புறம்பான செயல் என்று சொல்லக் கூடும்.

ஆகவே தேர்தல் முடிந்து, முடிந்து முடியாமல் இருந்தாலும் கூட நேசமணி பெயரால் அமையக்கூடிய மாளிகைக்கு அடிக்கல் நாட்டவோ, அல்லது திறப்புவிழா நடத்தவோ கருணாநிதி நிச்சயமாக வருவான் என்ற உறுதிமொழியை நேசமணிபால் அன்பு கொண்டுள்ள அன்பர்களுக்கு காங்கிரஸ் பேரியக்க தோழர்களுக்கு, அவர்கள் செய்தால் என்ன- நான் செய்தால் என்ன- இருவரும் ஒரே கூட்டணியில் இருக்கிறோம் என்பதற்கு வேறு பொருள் தான் என்ன- அதற்கு ஏற்ப இந்த உறுதி மொழி நிறைவேற்றப்படும் என்பதை எடுத்துக் காட்ட விரும்புகின்றேன்.

இங்கே குஷ்பு குறிப்பிட்டதைப்போல, இந்தியாவில் எத்தனையோ பிரச்சனைகள், இங்கே நாம் அமைதியாக விழா கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். இதே நேரத்தில் இந்தியாவில் உள்ள அனைத்துக் கட்சித்தலைவர்களும், திமுகவின் டி.ஆர்.பாலு உட்பட காஷ்மீர் ஸ்ரீநகரிலே கூடி இதற்கு என்ன விடிவு காலம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தியா விடுதலை பெற்றபோது ஆரம்பமான அந்த கிளர்ச்சி, எத்தனையோ லட்சம் கோடிகளை ராணுவத்திற்காக வீசிவிட்டு, இன்றைக்கு கேள்விக்குறியாக இருப்பதை காணுகின்றோம்.

இன்றைக்கு ஒவ்வொரு நாளும் பத்திரிகையை படிப்பதற்கு கை நடுங்குகிறது. இத்தனை பேர் இறந்தார்கள், இத்தனை பேர் கொல்லப்பட்டார்கள், இத்தனை பேர் காயம்பட்டார்கள், இத்தனை வீடுகள் கொளுத்தப்பட்டன என்ற செய்திகள் இந்தியாவிலே உள்ள ஒரு பகுதி காஷ்மீரத்தில் நடந்து கொண்டிருக்கிறது. அதைப்பற்றி இங்கே கவலைப்படாமல், மத உணர்வுகளை தூண்டிவிடுபவர்கள், மத உணர்வுகளை உசுப்பி விடுபவர்கள் இன்னமும் இருக்கத்தான் செய்கிறார்கள். காஷ்மீரத்தில் மத உணர்வுக்கு அப்பாற்பட்டு- அதன் மாநில உரிமைக்காக மக்கள் நடத்துகிற போராட்டம். அந்த போராட்டத்துக்கு நாம் தரப்போகிற வேலை என்ன? அந்த போராட்டத்தில் இந்திய அரசு எடுக்கும் நிலை என்ன? என்று கேள்விகள் அடுக்கடுக்காக வந்து கொண்டிருக்கிற நேரத்தில் நாம் அதைப்பற்றி சிந்திக்க வேண்டியவர்களாக இருக்கிறோம்.

நம்முடைய இயக்கத்தின் சார்பாகவும் நம்முடைய கருத்துக்களையும் டி.ஆர்.பாலுவிடம் சொல்லியனுப்பியிருக்கின்றேன். அவைகளுக்கு எத்தகைய வரவேற்பு இருக்கிறது என்பதும் அல்லது அனைத்துக் கட்சித் தலைவர்கள் எடுக்கின்ற முடிவுகளுக்கு என்ன வரவேற்பு இருக்கும் என்பதும் எனக்கு தெரியாது. நாளை அல்லது நாளை மறுநாள் தெரியலாம். அப்படி தெரிகிற நேரத்தில் என்ன முடிவானாலும் அந்த முடிவை சமாளிக்க நம்முடைய தலைவர்கள் தயாராக இருப்பார்கள்.

அதைப்போலவே இன்னொரு பிரச்சனை- பயமுறுத்திக் கொண்டிருக்கிற பிரச்சினை. 24ம் தேதியன்று ராமர்கோவில் பிரச்சனை நீதிமன்றத்திலே தீர்ப்பு வருகிற நாள். அந்த நேரத்தில் டெல்லியில் என்ன நடைபெறுமோ, அயோத்தியில் என்ன நடக்குமோ- ஆங்காங்கு எத்தகைய மதக்கலவரங்கள் உருவாகுமோ- யார் யார் இந்த கலவரங்களை தூண்டிவிடுவார்களோ என்று அச்சம் எல்லோருடைய மனதிலும் ஊசலாடிக் கொண்டிருக்கின்றது.

அந்த அச்சத்தை தவிர்க்க வேண்டுமென்று பிரதமர் மன்மோகன் சிங் விளம்பரங்களாகவே வெளியிட்டு - எல்லோரும் அமைதியாக இருக்க வேண்டும். பிரச்சனைகளை உங்களுடைய பிரதிநிதிகளுடன் கலந்து பேசி முடிவெடுக்க வேண்டும். அந்த முடிவுகளை மேற்கொள்ளுகிற வகையிலே நீங்கள் எல்லாம் ஒத்துழைப்பு தரவேண்டும் என்று அவரும் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

இந்த மாபெரும் கூட்டத்தின் வாயிலாக நானும் கேட்டுக் கொள்கின்றேன். எந்தக் கலவரங்களுக்கும் எத்தகைய பிரச்சினைகளுக்கும் எந்த வன்முறையும் நடக்காமல் தவிர்த்து நம் வாழ்விலே வளம் சேர்க்க நம்மை நாமே அர்ப்பணித்துக் கொள்ளவேண்டிய நாள் இந்த நாள் என்பதையும் இனி தொடர்ந்து வருகின்ற நாட்கள் என்பதையும் நான் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

ஏனென்றால் நாம் கூடியிருக்கின்ற இந்த இடம் நாகர்கோவில் ஆதிதமிழர் தோன்றிய இடம். லெமூரியா கண்டம் இருந்த பகுதியில் தான் நாம் கூடியிருக்கின்றோம். அப்படிப்பட்ட பழம்பெரும் பூமியில், வரலாற்று சிறப்பு பெற்ற பூமியில் தோன்றிய மக்களின் சந்ததியினராக- நாம் அனைவரும் திராவிட சமுதாயம் என்ற தமிழ் சமுதாயம் என்ற அந்தக்காலத்தில் நாகர்கள் என்றழைக்கப்பட்ட நமக்கெல்லாம் தனி கலாச்சாரம் அதற்கு பெயர் தான் திராவிட கலாசாரம்.

ஏதோ இன்னொரு கலாசாரம் இருக்கிறது- அதனால் தான் நீங்கள் திராவிட கலாச்சாரம் என்று பிரித்துச் சொல்லுகின்றோம் என்ற அந்த வேறுபாட்டை உணரக்கூடியவர்கள் உண்டு. ஆரிய கலாச்சாரத்தை பிரித்து காட்ட நாம் திராவிட கலாச்சாரத்தை சொல்ல வேண்டியிருக்கிறது. திராவிட கலாச்சாரத்தில் ஊறி வளர்ந்தவர்கள் நாம். அதனால் தான் இந்த இயக்கத்திற்கு திராவிட முன்னேற்ற கழகம் என்று பெயர் வைத்திருக்கிறோம் என்றால், திராவிட கலாச்சாரத்தை வாழ்த்த, திராவிட கலாச்சாரத்தை போற்ற திராவிட என்ற சொல்லை எதிர்த்தவர்கள், இன்றைக்கு திராவிட என்ற சொல்லை தாங்கள் ஆரம்பிக்கின்ற புதிய கட்சிகளுக்கெல்லாம் வைத்துக்கொண்டு நம்முடைய வாய்ப்பை- நம்முடைய எதிர்காலத்தை- நம்முடைய பெருமையை- நம்முடைய மக்கள் பற்றை- மக்கள் தொடர்பை அறுத்துவிடுவோம் என்று மார்தட்டுகிறார்கள்.

நான் அவர்களுக்கு சொல்லுவேன்- இங்கே பேசியவர்கள் எல்லாம் குறிப்பிட்டதைப் போல திமுக ஒன்றும் ஏமாந்த சோனகிரி ஆகிவிடாது. ஏனென்றால் இதனுடைய அடிப்படை- இன உணர்வு அடிப்படை. திடீரென்று செடியை பதியன் போட்டு வந்ததல்ல. ஒரு சிறிய விதையில் இருந்து முளைத்ததாக இருந்தாலும் மாபெரும் தருவாக திமுக தரு வளர்ந்திருக்கிறது. இந்த தருவின் நிழலிலே நாம் குளிர்காய்வது மாத்திரமல்ல, நம்முடையகுலப் பெருமையை காணலாம். இந்த தருவின் நிழலிலே இன்னும் பல மேன்மைகளை காணலாம்.

நேற்று நான் ஸ்டாலின் எங்கே போயிருக்கிறார் என்று கேட்டபோது, இங்கே வீடுகட்டும் திட்டம் நடந்து கொண்டிருக்கிறது. அதை ஆய்வு செய்யப் போயிருக்கிறார் என்றனர். நான் அவரிடம் என்ன ஆயிற்று என்று கேட்டபோது, இங்கே 1,500 வீடுகள் கட்டி முடிக்கப்படும் சூழ்நிலையில் இருக்கின்றது. நீங்கள் இந்த ஆண்டு முடிவில் 3 லட்சம் வீடுகள் தமிழகத்தில் முதல்கட்டமாக முடிக்கப்படும் என்று சொன்னீர்கள். நாங்கள் அவ்வளவு நாள் கூட பொறுத்திருக்க தேவையில்லை. இப்பொழுதே கன்னியாகுமரி மாவட்டத்திலே வரும் பொங்கலுக்குள்ளே ஒரு 1,500 வீடுகளை கட்டி முடிப்போம் என்று இங்குள்ள அதிகாரிகளும், அமைச்சரும் சொல்லியிருக்கிறார்கள்.

அவ்வளவு வேகத்திலே நம்முடைய வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. அந்த வேகம் தான் வேதனையை ஏற்படுத்துகிறது எதிர்வரிசையில் இருப்பவர்களுக்கு. தொலைய மாட்டார்களா? பிறகு நாம் கொள்ளையடிக்க. இதற்காகத் தான் நம்மை விரட்டப் பார்க்கிறார்கள். விரட்டுவதற்கு ஏதேதோ பொய்களை எல்லாம் சொல்கிறார்கள். அதற்கெல்லாம் குறிப்பிட்டு பதில் சொல்வதில்லை. இங்கே கூட சிலபேர் அம்மையாரின் பெயரின் குறிப்பிட்டெல்லாம் பதில் சொன்னார்கள்.

அவர்கள் எந்த விளம்பரத்துக்காக நம்மை தாக்குகிறார்களோ அதிலே நாம் சிக்கிக் கொள்ளக்கூடாது. அதிலே நாம் ஜாக்கிரதையாக இருந்து நம்முடைய கருத்துக்களை மக்களுக்கு என்ன சொல்ல வேண்டுமோ அதை சொல்லி மக்களை நம் பக்கம் திருப்பவேண்டுமேயல்லாமல் நாம் அவர்களோடு சண்டை போட்டுக் கொண்டிருக்க கட்சி தொடங்கவில்லை.

திராவிட இயக்கத்தின் பணி நம்மை யார் என்று காட்டுவது மாத்திரமல்ல. நம்முடைய பணி, நம்முடைய வேலை, நம்முடைய உழைப்பு, இவைகளெல்லாம் இந்த மக்களுக்காக பயன்பட வேண்டும் என்பது தான் என்றார் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X