For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜனவரிக்குள் சட்ட மேலவைத் தேர்தல் பணிகள் முடியும்-பிரவீன் குமார்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக சட்ட மேலவைக்கான தேர்தல் பணிகளை ஜனவரி மாதத்திற்குள் முடித்து விட ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் கூறியுள்ளார்.

தமிழக சட்ட மேலவைத் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கடந்த ஆகஸ்ட்28ம் தேதி பிரவீன்குமார் தலைமையில் நடந்தது.இதையடுத்து நேற்று மீண்டும் ஒருகூட்டம் கூட்டப்பட்டது. இதில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார், இந்திய தேர்தல் ஆணைய செயலாளர் கே.எல்.வில்பிரட், சார்பு செயலாளர் அசீஸ் சக்கரவர்த்தி ஆகியோர் தலைமையில் கூட்டம் நடந்தது.

அ.தி.மு.க. சார்பில் ஓ.பன்னீர்செல்வம், கே.ஏ.செங்கோட்டையன், தி.மு.க. சார்பில் கல்யாண சுந்தரம், கிரிராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் ஏ.கே.பாலகிருஷ்ணன், ஆறுமுக நயினார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ராஜ்மோகன், ஆர்.திருமலை, பா.ம.க. சார்பில் வக்கீல் பாலு, முத்துக்குமார், காங்கிரஸ் கட்சி சார்பில் கே.வீ.தங்கபாலு, தாமோதரன், பா.ஜ.க. சார்பில் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், தேசியவாத காங்கிரஸ் சார்பில் அதன் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி, ராஜமோகன், எஸ்.கலைவாணி, பகுஜன் சமாஜ்வாடி கட்சி சார்பில் மாநில பொதுச்செயலாளர் லயன் முருகன், மாநிலச் செயலாளர் மகேந்திரவர்மன் ஆகியோர் பங்கேற்று தங்கள் கட்சிகளின் கருத்துகளை எடுத்துரைத்தனர்.

பின்னர் பிரவீன் குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

மேலவை தேர்தல் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டத்தில் அரசியல் கட்சிகளின் பிரநிதிகள் கலந்துகொண்டனர். கடந்த கூட்டத்தில் தொகுதி வரையறை குறித்து அவர்கள் தெரிவித்திருந்த ஆலோசனைகள் மற்றும் திருத்தங்களை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டிருக்கிறது.

ஊராட்சி தலைவர்களுக்கு வாக்குரிமை அளிக்கப்படாததற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அரசியல் சாசனத்தில் சொல்லப்பட்டுள்ள விதிமுறைகளின்படிதான் தேர்தல் ஆணையம் செயல்பட முடியும். தற்போது பட்டதாரி மற்றும் ஆசிரியர் வாக்காளர் தொகுதிகள் அனைத்தும் இறுதி வரையறை செய்யப்பட்டுவிட்டன. உள்ளாட்சிமன்ற உறுப்பினர் வாக்காளர் தொகுதிகள் உத்தேசமாக தயாரிக்கப்பட்டுள்ளன. இதில் வேண்டுமானால் திருத்தங்கள் செய்யப்படலாம்.

தேர்தலுக்கான வாக்காளர் படிவங்கள் எங்கேயும் வினியோகம் செய்யப்படவில்லை. தேர்தலுக்காக வாக்காளர் படிவங்களை தயாரிக்குமாறு மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. படிவங்கள் அச்சிடும்பணி நடைபெற்று வருகிறது. தொகுதி மறுசீரமைப்பு மற்றும் வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணியும் ஜனவரி மாதத்திற்குள் முடிக்கப்பட்டு விடும்.

மேலவைத் தேர்தல், சட்டப்பேரவை தேர்தலுக்கு முன் நடத்தப்படுமா? அல்லது அதற்குப் பின்னர் நடத்தப்படுமா? என்பதை தேர்தல் ஆணையம்தான் அறிவிக்கும். தொகுதி மறுசீரமைப்பு மற்றும் வாக்காளர் பட்டியல் பணி முடிந்த பிறகு எப்போது வேண்டுமானாலும் தேர்தல் நாள் அறிவிக்கப்படலாம் என்றார்.

பஞ்சாயத்துத் தலைவர்களுக்கு வாக்குரிமை வேண்டும்

முன்னதாக பஞ்சாயத்துத் தலைவர்களுக்கு வாக்குரிமை தரப்படாததை கட்சிகள் கண்டித்தன.

அதிமுக சார்பில் ஜெயலலிதாவின் மனு ஒன்றை பிரவீன் குமாரிடம் அளித்தனர். அதில், கடந்த ஆலோசனை கூட்டத்தின் போது கட்சிகள் சார்பில் தெரிவிக்கப்பட்ட ஆலோசனைகளை தேர்தல் ஆணையம் உதாசீணப்படுத்தி இருப்பது ஆச்சரியமாக உள்ளது.

மேலவை தேர்தலை அவசர அவசரமாக நடத்த திட்டமிட்டுள்ளனர். பொதுவான மக்கள் தொகை அடிப்படையில் பார்க்காமல் பட்டதாரிகள், ஆசிரியர்கள், உள்ளாட்சிமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில் தொகுதிகளை வரையறை செய்ய வேண்டும் என்று ஜெயலலிதா கூறியிருந்தார்.

தங்கபாலு கூறுகையில், இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களில் மேல்-சபை தேர்தலுக்கு என்னென்ன நடைமுறைகளை கடைப்பிடிக்கிறார்களோ அவற்றை தமிழகத்திலும் பின்பற்ற வேண்டும். தமிழகத்திற்கென்று தனி விதிமுறைகளை உருவாக்க முடியாது.

தமிழகம் தனி நாடு அல்ல. ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பெண்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று பல கட்சிகள் வேண்டுகோள் விடுத்தார்கள். இட ஒதுக்கீட்டை நாங்களும் வரவேற்கிறோம். தேர்தல் ஆணையம் ஒரு சுயாட்சி பெற்ற தனித்த ஒரு அமைப்பு. அதன் சட்ட திட்டங்களுக்கு உடன்பட்டு ஒத்துழைப்பு அளிப்போம் என்றார்.

பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் பேசுகையில், 23 ஆண்டுகளுக்குப் பிறகு மேல்-சபை தேர்தல் நடத்தப்பட உள்ளது. சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக மேல்-சபை தேர்தல் நடத்த வேண்டும் என்று அவசரம் காட்டுகிறார்கள். தொகுதி மறுசீரமைப்பு மற்றும் வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணியை அவசரமில்லாமல் நடத்தி நிதானமாக தேர்தலை நடத்த வேண்டும் என்றார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பேசிய ஏ.கே.பாலகிருஷ்ணன் கூறுகையில், தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக அரசியல் கட்சி நிர்வாகிகள் தெரிவித்த கருத்துகளை தேர்தல் ஆணையம் பரிசீலிக்கவே இல்லை. மேலவை தேர்தலில் அவசர அவசரமாக நடத்த திட்டமிட்டுள்ளார்கள். பஞ்சாயத்து தலைவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கப்படாதது ஏற்றுக்கொள்ள முடியாது. இதேபோல், ஆரம்ப பள்ளி ஆசிரியர்களுக்கு வாக்குரிமை அளிக்காதது முறையாக இருக்காது. அவர்களுக்கு வாக்குரிமை வழங்குவற்காக சட்டத் திருத்தம் கூட கொண்டுவரலாம்.

பா.ம.க. வின் பாலு பேசும்போது, கடலூரை அரியலூரோடும், திருச்சியை பெரம்பலூருடனும் சேர்க்க வேண்டும் என்ற எங்கள் கோரிக்கையை ஏற்றுக்கொண்டதற்காக தேர்தல் ஆணையத்திற்கு நன்றி. மேலவை தேர்தலை முறையாக, சரியாக நடத்த வேண்டும் என்றார்.

எத்தனை தொகுதிகள்?

மேலவைக்கு மொத்தம் 78 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இவர்களில் 26 பேர் சட்டமன்ற உறுப்பினர்கள் மூலமாகவும், 26 பேர் உள்ளாட்சி மன்ற உறுப்பினர்கள் மூலமாகவும், 7 பேர் ஆசிரியர்கள் மூலமாகவும், 7 பேர் பட்டதாரிகள் மூலமாகவும் தேர்வு செய்யப்படுவார்கள். 12 பேர் நியமன உறுப்பினர்கள். அவர்களை ஆளுநர் நியமிப்பார்.

இந்த நிலையில், உள்ளாட்சிமன்ற உறுப்பினர் வாக்காளர் தொகுதிகளும், ஆசிரியர் மற்றும் பட்டதாரி வாக்காளர் தொகுதி பட்டியலும் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் ஆசிரியர், பட்டதாரி வாக்காளர் தொகுதி பட்டியல் இறுதி செய்யப்பட்டுவிட்டது. உள்ளாட்சி மன்ற உறுப்பினர் வாக்காளர் தொகுதி பட்டியல் உத்தேச பட்டியல் ஆகும். இதில் ஒருவேளை திருத்தம் செய்யப்படலாம் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் தெரிவித்தார்.

தொகுதிகள் விவரம்...

உள்ளாட்சிமன்ற உறுப்பினர் வாக்காளர் தொகுதி பட்டியல் (26)

1. சென்னை (2 தொகுதிகள்) 3. திருவள்ளூர் 4. காஞ்சீபுரம் 5. வேலூர் 6. திருவண்ணாமலை 7. விழுப்புரம் 8. கடலூர் மற்றும் அரியலூர் 9. தர்மபுரி 10. கிருஷ்ணகிரி 11. சேலம் 12. நாமக்கல் மற்றும் கரூர் 13. கோவை மற்றும் நீலகிரி 14. ஈரோடு 15. திருப்பூர் 16. திண்டுக்கல் மற்றும் தேனி 17. மதுரை 18. திருச்சி மற்றும் பெரம்பலூர் 19. நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் 20. தஞ்சாவூர் 21. புதுக்கோட்டை 22. சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் 23. விருதுநகர் 24. தூத்துக்குடி 25. திருநெல்வேலி 26. கன்னியாகுமரி.

ஆசிரியர் மற்றும் பட்டதாரி வாக்காளர் தொகுதிகள் (7)

1. சென்னை (சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர்)
2. தமிழ்நாடு வடக்கு (வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை)
3. தமிழ்நாடு வடக்கு மத்திய தொகுதி (விழுப்புரம், கடலூர், சேலம், நாமக்கல்)
4. தமிழ்நாடு மேற்கு (ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி, கரூர்)
5. தமிழ்நாடு கிழக்கு மத்திய தொகுதி (திருச்சி, பெரம்பலூர், அரியலூர், நாகப்பட்டினம், திருவூர், தஞ்சாவூர்)
6. தமிழ்நாடு தெற்கு மத்திய தொகுதி (திண்டுக்கல், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம்)
7. தமிழ்நாடு தெற்கு (கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், தேனி)

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X