For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

செப். 28ம் தேதி வரை அயோத்தி தீர்ப்பு ஒத்திவைப்பு-சுப்ரீம் கோர்ட்

By Chakra
Google Oneindia Tamil News

Security
அயோத்தி: அயோத்தி: நாளை வழங்கப்படுவதாக இருந்த அயோத்தி தீர்ப்பை செப்டம்பர் 28ம் தேதி வரை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம். இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை விசாரித்த இரு நீதிபதிகளும் முரண்பட்ட கருத்தை தெரிவித்ததால் சலசலப்பு ஏற்பட்டது.

அயோத்தி குறித்த 60 ஆண்டு கால வழக்கில் நாளை அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறவிருந்தது. இதனால் நாடு முழுவதும் பெரும் பரபரப்பாக காணப்பட்டது. அனைத்து மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

இந்த நிலையில், இந்த தீர்ப்பை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரி முன்னாள் அரசு அதிகாரி ரமேஷ் சந்த் திரிபாதி என்பவர் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் அதை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் திரிபாதி.

நேற்று இந்த மனு கபீர், பாதக் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தபோது இதை விசாரிக்கும் அதிகாரம் தங்களுக்கு இல்லை என்று கூறி விட்டனர். இதையடுத்து திரிபாதியின் மனு இன்று நீதிபதிகள் எச்.எல். கோகலே, ரவீந்திரன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது பெஞ்ச்சில் இடம் பெற்றிருந்த இரு நீதிபதிகளும் வேறுபட்ட கருத்தைத் தெரிவித்தனர். இதனால் சலசலப்பு ஏற்பட்டது. இறுதியில் அயோத்தி தீர்ப்பை செப்டம்பர் 28ம் தேதிக்கு தள்ளி வைத்து பெஞ்ச் உத்தரவிட்டது.

நீதிபதி கோகலே தீர்ப்பை தள்ளி வைக்கலாம் என்று கருத்து தெரிவித்தார். அவர் கூறுகையில், இந்த விவகாரத்தில் சமரசம் பேச வாய்ப்பு உள்ளது என்றால் அதற்கான வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். ஒரு சதவீத வாய்ப்பு இருந்தால் கூட பரவாயில்லை, அதை அளிக்க வேண்டும்.

ஒரு தீர்ப்பால் பலரும் பாதிக்கப்படக் கூடும் என்றால், முடிந்தவரை பேச்சுவார்த்தைக்கு முயற்சித்துப் பார்க்கலாம். அதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திப் பார்க்கலாம். அதில் எந்தத் தவறும் இல்லை.

இந்த தீர்ப்பால் பாதிப்பு ஏற்பட்டால் அது சாமானிய மக்களைத்தான் பாதிக்கும். மக்களை பாதித்தால் அவர்கள் சுப்ரீம் கோர்ட்டைத்தான் குறை கூறுவார்கள். எனவே இந்த தீர்ப்பை தள்ளி வைக்கலாம் என்று தெரிவித்தார்.

நீதிபதி ரவீந்திரன் கூறுகையில், இப்போது தீர்ப்பை ஒத்திவைக்க வேண்டிய காரணம் என்ன உள்ளது. இந்த விவகாரம் கடந்த 60 ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் இருந்து வருகிறது. இந்த நிலையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினால் பிரச்சினை தீர்ந்து விடும் என்பதை எப்படி நம்ப முடியும் என்றார்.

இருப்பினும் நீதிபதி கோகலேவின் கருத்தை தான் மதிப்பதாக தெரிவித்த ரவீந்திரன், தீர்ப்பை தள்ளி வைக்க உடன்படுவதாக தெரிவித்தார். இதையடுத்து செப்டம்பர் 28ம்தேதிக்கு தீர்ப்பை தள்ளி வைத்த நீதிபதிகள், திரிபாதியின் மனு மீதான விசாரணையையும் அன்றைய தினத்திற்கே தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.

இதன் மூலம் பெரும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட அயோத்தி தீர்ப்பு நாளை வெளிவராது என்பது உறுதியாகி விட்டது. இருப்பினும் செப்டம்பர் 28ம் தேதி உச்சநீதிமன்றம் தெரிவிக்கப் போகும் உத்தரவைப் பொறுத்தே அயோத்தி தீர்ப்பின் எதிர்காலம் அமைந்துள்ளது.

மத்திய அரசுக்கு நோட்டீஸ்:

வழக்கை ஒத்திவைத்த நீதிபதிகள் இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு கூறி மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

இதன் மூலம் இந்த விவகாரத்தில் மத்திய அரசு தனது கருத்தை தெரிவிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

அயோத்தியில் பலத்த பாதுகாப்பு:

முன்னதாக தீர்ப்பு வெளியாவதாக இருந்ததால், அயோத்தி முழுவதும்யுபலத்த பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டிருந்தது. உ.பி. மாநிலம் முழுவதும் பாதுகாப்புப் படையினர் பெருமளவில் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பிலும், பாதுகாப்பிலும் ஈடுபட்டுள்ளனர்.

அயோத்தி, பைசாபாத், லக்னோ உள்ளிட்ட 19 முக்கிய நகரங்களில் கிட்டத்தட்ட 1 லட்சம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

உ.பி. முழுவதும் அமைதிப் பேரணிகளை நடத்த தடை விதிக்கப்பட்டிருந்தது. தீர்ப்புக்குப் பிறகு அதை இனிப்பு கொடுத்துக் கொண்டாடுவதற்கும், எதிர்த்துப் போராட்டங்கள் நடத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தீர்ப்பளிக்கப்படவுள்ள அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ பெஞ்ச் வளாகத்திற்குள் நாளை யாரும் நுழையக் கூடாது என அறிவுறுத்தப்பட்டிருந்தது. வழக்குகள் உடைய வக்கீல்கள் மட்டுமே வர வேண்டும். வழக்குகள் எதுவும் இல்லாத வக்கீல்கள் வரக் கூடாது என உத்தரவிடப்பட்டிருந்தது.

தீர்ப்பை வாசிகக்ப் போகும் 3 நீதிபதிகளுக்கும் மிக பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது.

மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் இன்று தமிழ்நாட்டுக்கு வருவதாக இருந்தது. ஆனால் அயோத்தி தீர்ப்பு தொடர்பான பதட்டம் அதிகரித்திருப்பதால் அவர் தனது பயணத்தை ரத்து செய்து டெல்லியிலேயே தங்கியிருந்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X