பாக்.குக்கு கூடுதலாக 2 அணு உலைகளை வழங்கும் சீனா-இந்தியா கவலை
டெல்லி: பாகிஸ்தானுக்கு கூடுதலாக 2 அணு உலைகளை அமைத்துக் கொடுக்க சீனா முன்வந்திருப்பதை இந்தியா கவனத்தில் கொண்டுள்ளது. இது கவலை தரும் விஷயம் என்று இந்தியா தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானின் சஸ்மா பகுதியில் ஏற்கனவே இரண்டு அணு உலைகளை பாகிஸ்தான் கட்டியுள்ளது. இதற்கு சீனாதான் முழு உதவிகளையும் செய்தது. தற்போது மேலும் 2 அணு உலைகளை கட்டிக் கொடுக்கவும், தேவையான பொருட்களை வழங்கவும் சீனா முன்வந்துள்ளது. இதற்கான அறிவிப்பையும் சீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக சர்வதேச அணு சக்தி முகமைக்குத் தெரிவித்து விட்டதாகவும் சீனா தெரிவித்துள்ளது. இவை மின் நிலையங்கள் என்று பாகிஸ்தானும், சீனாவும் கூறினாலும் கூட இந்தியா வேறு கண்ணோட்டத்தில்தான் இதைப் பார்க்க வேண்டியுள்ளது.
இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், இது எப்படி நிறைவேற்றப்படுகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்த விவகாரம் குறித்தும், இதுதொடர்பாக சீன, பாகிஸ்தானிய செயல்பாடுகளையும் இந்தியா கவனத்தில் கொண்டுள்ளது. இந்தியாவுக்கு நிச்சயம் கவலை தரும் அம்சம் இது என்பதில் சந்தேகமில்லை என்றார்.
தீவிரவாதிகளின் சொர்க்கபுரியாக திகழ்கிறது பாகிஸ்தான். இந்த நிலையில் கூடுதலாக அணு உலைகளை கட்டினால் அது எந்த அளவுக்கு பாதுகாப்பாக இருக்கும் என்ற பெரும் சந்தேகம் எழுந்துள்ளது. மேலும், தீவிரவாதிகள் கைக்கு அணு உலைகளும், ஆயுதங்களும் சென்றால் அது இந்தியாவுக்கு மிகப் பெரிய ஆபத்தாகி விடும். எனவேதான் பாகிஸ்தானின் கூடுதல் அணு உலைகளை இந்தியா தொடர்ந்து எதிர்த்து வருகிறது.
ஆனால் இந்தியாவின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் பாகிஸ்தானுக்கு உதவ சீனா முடிவு செய்து விட்டது.
பாகிஸ்தான்-சீனாவின் இந்த நடவடிக்கை குறித்து அணு சப்ளை குழுமத்தில் உள்ள தனது தோழமை நாடுகளுடன் இந்தியா பேசத் தொடங்கியுள்ளது. மேலும் அமெரிக்கா, ரஷ்யா போன்ற தனது நட்பு நாடுகளிடமும் இந்தப் பிரச்சினையை கொண்டு சென்றுள்ளது.