ஜெ.வுக்கு மேலும் ஒரு மிரட்டல் கடிதம்-சென்னை போலீஸில் புகார்

Posted By:
Subscribe to Oneindia Tamil
Jayalalitha
சென்னை: பாஸ் என்கிற பாஸ்கரன், வைகைப் புயல் பாலு உள்ளிட்ட பெயர்களில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு மீண்டும் கொலை மிரட்டல் வந்துள்ளது. இதுகுறித்து கிண்டி போலீஸில் புகார் தரப்பட்டுள்ளது.

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு சரமாரியாக கொலை மிரட்டல் விடுத்து கடிதம் வந்து கொண்டுள்ளது. அனைத்துக் கடிதங்களும் ஜெயா டிவி அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டு வருகின்றன.

இதுதொடர்பாக சென்னை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சமீபத்தில் மதுரைக்குச் சென்ற போலீஸ் படை திமுக பிரமுகரான முத்துப் பாண்டியனிடம் தீவிர விசாரணை நடத்தியது. அதன் விவரம் என்னவென்று இதுவரை வெளியிடப்படவில்லை.

இந்த நிலையில், தற்போது மேலும் ஒரு மிரட்டல் கடிதம் வந்துள்ளது. நேற்று மாலையில் சென்னை ஈக்காடுதாங்கலில் உள்ள ஜெயா டி.வி. அலுவலகத்துக்கு மீண்டும் இரண்டு மிரட்டல் கடிதங்கள் வந்தன. ஒரு கடிதம் இன்லேன்ட் கடிதமாகவும், இன்னொன்று உறையிட்ட கடிதமாகவும் இருந்தது.

அதில், 1992-ம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக இருந்த போது தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்தார். அதனால் நாங்கள் பாதிக்கப்பட்டோம். மதுரை பொதுக் கூட்டத்துக்கு ஜெயலலிதா வரக்கூடாது, வந்தால் வீடு திரும்ப மாட்டார். அந்த நிகழ்ச்சியை ஜெயா டி.வி.ஒளிபரப்பினால் ஜெயா டி.வி. அலுவலகம் ஆர்.டி.எக்ஸ் குண்டு வைத்து தகர்க்கப்படும் என்று ஒரு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

மேலும் அதில், பாஸ் என்ற பாஸ்கரன், நக்சலைட் நாகராஜ், சிறுத்தை ஸ்ரீனிவாசன் என்ற பெயர்களும் இடம் பெற்றிருந்தன.

இன்னொரு கடிதத்தை வைகைப் புயல் பாலு என்ற பெயரில் அனுப்பியுள்ளனர். இதே பெயரில் ஏற்கனவே சில மிரட்டல் கடிதங்கள் வந்தது நினைனவிருக்கலாம்.

இரண்டு கடிதங்களையும் கிண்டி காவல் நிலையத்தில் கொடுத்த ஜெயா டிவி நிர்வாகத்தினர் அதுதொடர்பாக புகார்களையும் கொடுத்தனர்.

அதிமுக எம்.எல்.ஏ. அலுவலகம்-கத்தியுடன் வந்த வாலிபர்:

இதற்கிடையே திருத்தணி அதிமுக எம்.எல்.ஏ. கோ.அரியின் அலுவலகம், திருத்தணி ரயில் நிலையம் அருகே ம.பொ.சி. சாலையில் உள்ளது.

இன்று காலை காவலாளி முருகேசன் பணியில் இருந்த போது ஒரு வாலிபர் அங்கு வந்தார். அவர் கையில் சிறிய பேனாகத்தி வைத்திருந்தார்.

எம்.எல்.ஏ. இருக்கிறாரா, அவரை கொலை செய்யப் போகிறேன் என்று அந்த வாலிபர் மிரட்டல் விடுத்தார். இதனால் அதிர்ச்சியான காவலாளி முருகேசன், எம்.எல்.ஏ. இங்கு இல்லை என்று கூறினார்.

அதற்கு அந்த வாலிபர், அவர் வந்ததும் கொலை செய்கிறேன் என்று கூறிவிட்டு அங்கு நின்றிருந்த காரில் ஏறி படுத்துக் கொண்டார்.

இது குறித்து முருகேசன் அந்தப் பகுதி அதிமுக பிரமுகர்களுக்கு போனில் தகவல் தெரிவித்தார். உடனே போலீசில் புகார் செய்யப்பட்டது.

டி.எஸ்.பி. மாணிக்கம் தலைமையில் வந்த போலீசார் காரில் படுத்திருந்த அந்த வாலிபரை கைது செய்தனர்.

விசாரணையில் அவரது பெயர் சுரேஷ் (27) என்றும், திருத்தணியை அடுத்த தாழவேடு கிராமத்தை சேர்ந்தவன் என்றும் தெரியவந்தது.

இதையடுத்து அவரது பெற்றோர் கணேசன், தனம் ஆகியோரை வரவழைத்து போலீசார் விசாரித்தனர்.

அதில் சுரேஷ் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று தெரியவந்தது. அவன் அணிந்திருந்த பனியனில் கருணாநிதி வாழ்க, ஜெயலலிதா வாழ்க என்றும் எழுதியிருந்தார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Please Wait while comments are loading...