For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மதுரை, திருச்சி, கோவை, வேலூர் மாநகராட்சிகளின் எல்லைகள் விரிவாக்கம்

By Chakra
Google Oneindia Tamil News

சென்னை: மதுரை, திருச்சி, கோவை மற்றும் வேலூர் மாநகராட்சிகளின் எல்லை விரிவாக்கப்பட்டுள்ளது. இந்த மாநகராட்சிகளின் அருகே உள்ள பேரூராட்சிகள் உள்ளிட்டவற்றின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகள் மாநகராட்சியுடன் சேர்க்கப்பட்டுள்ளன.

மாநகராட்சிகளின் சுற்றுப் பகுதிகளிலும் மக்கள் தொகை பெருக்கம் அதிகரித்து வருகிறது. இவை பேரூராட்சிகள், பஞ்சாயத்துகள், நகராட்சிகளின் கீழ் வருவதால் மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள வசதிகள் இங்கு இருப்பதில்லை.

இந்தப் பகுதிகளில் முறையான கழிவுநீர் அகற்றும் வசதியோ, குடிநீர் வசதியோ, சாலை வசதியோ இருப்பதில்லை.

இந்தக் குறைகளைப் போக்க துணை முதல்வரும் உள்ளாட்சித் துறை அமைச்சருமான மு.க.ஸ்டாலின் உத்தரவி்ட்டுள்ளார்.

இதையடுத்து முதல்கட்டமாக மதுரை, திருச்சி, கோவை, வேலூர் ஆகிய மாநகராட்சிகளுக்கு அருகில் உள்ள பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளை அந்தந்த மாநகராட்சிகளுடன் இணைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் அஷோக்வர்தன் ஷெட்டி வெளியிட்டுள்ள உத்தரவி்ல் கூறப்பட்டுள்ளதாவது:

திருச்சி மாநகராட்சியுடன் திருவெறும்பூர் பேரூராட்சி மற்றும் 4 ஊராட்சிகளை சேர்த்து மாநகராட்சி எல்லையை விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

திருவெறும்பூர் பேரூராட்சி, கீழ்கல்கண்டார் கோட்டை மற்றும் ஆலத்தூர் ஊராட்சி மன்றங்களை மாநகராட்சியுடன் இணைக்க வேண்டாம் என்று அந்த உள்ளாட்சிகள் தீர்மானம் நிறைவேற்றியிருந்தன. இருப்பினும், பொதுமக்கள் நலன் மற்றும் வேகமாக நகரமயமாகி வருதல் போன்ற காரணங்களால் இந்த உள்ளாட்சி அமைப்புகளை, திருச்சி மாநகராட்சியுடன் இணைத்து அரசு ஆணையிடுகிறது.

இதேபோல், கோயம்புத்தூர் மாநகராட்சியுடன், அதனை சுற்றி அமைந்துள்ள 3 நகராட்சிகள், 7 பேரூராட்சிகள் மற்றும் 2 ஊராட்சி அமைப்புகளை இணைத்து ஆணை வெளியிடப்படுகிறது.

மதுரை மாநகராட்சியுடன் 3 நகராட்சிகள், ஆனையூர் உள்ளிட்ட 3 பேரூராட்சிகள், 12 ஊராட்சிகள் உள்ளிட்ட 17 உள்ளாட்சி அமைப்புகளை இணைத்து அரசு ஆணையிட்டுள்ளது.

வேலூர் நகராட்சிகளில் சேர்க்க முடிவு செய்யப்பட்டிருந்த 75 உள்ளாட்சி அமைப்புகளில், 17 உள்ளாட்சி அமைப்புகளை மட்டும் வேலூர் மாநகராட்சியுடன் சேர்க்க முடிவு செய்து அவ்வாறே ஆணையிடப்படுகிறது.

மேற்கண்ட 4 மாநகராட்சிகளுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, விரிவுபடுத்தப்படவுள்ள மாநகராட்சி பகுதிகளுக்கான வார்டு எல்லைகளை நிர்ணயித்தல், மண்டலங்கள் அமைத்தல் குறித்த அறிக்கையை அனுப்ப வேண்டுமென நகராட்சி நிர்வாக இயக்குனர் அறிவுறுத்தப்படுகிறார்.

அந்த அறிக்கையின் அடிப்படையில், வார்டுகள் நிர்ணயம் செய்யப்பட்டு, விரிவுபடுத்தப்பட்ட திருச்சி, கோவை, மதுரை, வேலூர் ஆகிய 4 மாநகராட்சிகளுக்கு 2011ம் ஆண்டு சாதாரண தேர்தல் நடத்தப்படும்.

இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

இதன்மூலம் இந்த 4 மாநகராட்சிகளுடன், அவற்றின் அருகில் உள்ள உள்ளாட்சி அமைப்புகள் சேர்க்கப்படுவதால், அந்தந்த பகுதிகளில் சாலை வசதி, குடிநீர் வசதி, கழிவுநீர் அகற்றல் வசதி போன்ற அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மற்றும் இதர மேம்பாட்டுப் பணிகள் வேகமாக நடைபெறும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X