For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அயோத்தி தீர்ப்பு ஒரு விசித்திரத் தீர்ப்பு: கி.வீரமணி

By Chakra
Google Oneindia Tamil News

Veeramani
சென்னை& டெல்லி: அயோத்தி விவகாரத்தில் அலகாபாத் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு ஓர் 'அருமையான விசித்திரத் தீர்ப்பு' என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பாபர் மசூதி, ராமர் கோயில் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணுவதற்காக கடந்த 60 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த வழக்கின் பரபரப்போடு எதிர்பார்க்கப்பட்ட தீர்ப்பு அலகாபாத் உயர்நீதிமன்ற மூன்று நீதிபதிகளால் நேற்று அளிக்கப்பட்டுவிட்டது.

மூன்று நீதிபதிகளும் இணைந்து கருத்திணக்கத்தோடு ஒரே தீர்ப்பாக வழங்கவில்லை. மூவரும் தனித்தனியே எழுதியுள்ளனர். இத்தீர்ப்பின் பல்வேறு அம்சங்கள், சட்ட அடிப்படையில் அமைவதைவிட 'நம்பிக்கை", நீண்ட காலமாக இருந்து வந்த காரணம் என்பது போன்றவைகளால் அமைந்த விசித்திரத் தீர்ப்பாகும்! வல்லடி வழக்குகளும்கூட!.

நம்பிக்கையின் அடிப்படையில் தீர்ப்பு என்பது ஆபத்தானது!.

“நம்பிக்கை அடிப்படையில்"" என்றால், யாரும் எதற்கும் ஆதாரமோ, சான்றோ, சட்ட விதிகளையோ தேடித்தேடி வழக்கின் தீர்ப்பை அமைக்க முடியாது. இது ஆபத்தான முறைக்கு வழிவகுக்கும் அபாயம் உள்ளது. அந்த வகையில் இந்த அலகாபாத் தீர்ப்பு ஓர் 'அருமையான" விசித்திரத் தீர்ப்பு!.

யாரையும் சங்கடப்படுத்த வேண்டாம் என்று நினைப்பவர்கள் இதுபோன்ற நிலையை பல வாதங்களிலும், வழக்குகளிலும் எடுப்பதுண்டு. அதுபோல்தான் இம்மூன்று தீர்ப்புகளும் அமைந்துள்ளன!.

தீர்ப்பு வெளியாகும் முன்பே பாதிக்கப்பட்டவர்கள், இதை ஏற்க இயலாத வழக்காடிகளில் ஒரு சாரார், மேல்முறையீட்டை உச்சநீதிமன்றத்தில் செய்வார்கள், செய்ய வாய்ப்புண்டு என்று மத்திய அரசு தெளிவாகவே கூறி, யாரும் பதற்றம் அடையாமல் இருந்து, எவ்வித கலவரங்களுக்கும் இடம் தராமல் சுமுகமான வாழ்வு வாழவேண்டும் என்று அறிவித்து, தக்க முன்னேற்பாடுகளை மும்முரத்துடன் செய்ததால், இந்தியாவின் எந்தப் பகுதிகளிலும் குறிப்பாக வடக்கே உள்ள பல மாநிலங்கள் உள்பட எங்கும் அமைதி தவழுவது மிகவும் ஆறுதலானது.

தந்தை பெரியாரின் சுயமரியாதை, பகுத்தறிவு மண்ணான தமிழ்நாடு, முன்பு போலவே (1992) அமைதிப் பூங்காவாகவே காட்சியளிப்பது அதிசயம் அல்ல; காரணம், மதவெறி மாய்த்து மனிநேயத்தைக் காத்த திராவிடர் இயக்கத்தின் ஆட்சியாகும்!

புராண கால கற்பனைகளுக்கும், இதிகாச கால நம்பிக்கைகளுக்கும் மதப் பூச்சு பூசப்பட்டதாலேயே வெறும் நம்பிக்கை அடிப்படையில் ராமர் அங்குதான் பிறந்தார் என்றெல்லாம் இதுபோன்ற தீர்ப்புகளில் எழுதப்படுவது, நீதிமன்றங்களை சட்ட கோர்ட்டுகள் (Courts of Law) என்பதற்குப் பதிலாக, நம்பிக்கை கோர்ட்டுகளாக (Courts of belief and Faith) ஆக்குவதாக அமைந்துள்ளது.

இதன் தீய விளைவு நிகழ்காலத்தில் மட்டுமல்ல, வருங்காலத்திலும் நியாய விரோத தீர்ப்புகள், புற்றீசல்கள்போல் கிளம்ப வழிவகுத்து விடும்.

இராமாயணமே 57 இராமாயணங்கள் உள்ள நிலையில், ராமன் பிறந்த இடம், பிரச்சனைக்குரிய அந்த இடம்தான் என்று சொல்வது நம்பிக்கை அடிப்படையில்தான். சட்ட சான்றுகள் அடிப்படையில் அல்ல!.

எப்படி இருப்பினும், நாடு அமைதிப் பூங்காவாகவே தொடர வேண்டும். ஒருபோதும் மதவெறி காரணமாக அமளிக் காடாக மாறக்கூடாது!.

சமாதான சகவாழ்வின் மூலம்தான் நம் நாடு முன்னேற்றத்தையும், வளர்ச்சியையும் காண முடியும்.

உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டுக்கு 3 மாதங்கள் அவகாசம் உள்ளது. எனவே, இதற்காக வெற்றிக் கூச்சலோ, தோல்வி மனப்பான்மையுடன் கலவரங்களிலோ எவரும் ஈடுபடுவதோ கூடாது, மீண்டும் சட்டத்தின் ஆளுமையின் இறுதித் தீர்ப்பையே எதிர்பார்ப்போமாக! என்று கூறியுள்ளார் வீரமணி.

மத நம்பிக்கைக்கு முக்கியத்துவம்-முலாயம் சிங்:

சமாஜ்வாடிக் கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் இந்தத் தீர்ப்பு குறித்து கூறுகையில், தீர்ப்பில் சட்டவிதிகள் மற்றும் ஆதாரங்களைவிட மத நம்பிக்கைக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தீர்ப்பால் முஸ்லீம்கள் அனைவரும் தாங்கள் ஏமாற்றப்பட்டுள்ளதாக எண்ணுகின்றனர். இது நாட்டுக்கும், அரசியல் அமைப்புக்கும், நீதித்துறைக்கும்கூட நல்ல அடையாளம் அல்ல.

நியாயமான தீர்ப்பில்லை எனக் கருதும் தரப்பினர் சட்டத்தின் அடிப்படையிலும், ஆதாரங்களின் அடிப்படையிலும் தீர்ப்பளிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தை அணுகுவார்கள் என்று நினைக்கிறேன் என்றார்.

சர்ச்சைக்குரிய இடத்தில் தொல்லியல் பல்கலை-திருமா:

அயோத்தில் சர்ச்சைக்குரிய இடத்தை இந்துக்களும் முஸ்லிம்களும் ஒருங்கிணைந்து ஏதேனும் ஒரு பொதுப் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் கொடையளிக்க முன்வர வேண்டும் என்றும், அங்கு தொல்லியல் ஆய்வுக்கான பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவலாம் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அயோத்தி நிலம் தொடர்பான வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதிகள் தரம்வீர் சர்மா, சிப்கத் உல்லா கான் மற்றும் சுதிர் அகர்வால் ஆகியோர் அளித்துள்ள தீர்ப்பு, இந்திய அளவில் நிலவி வந்த பதற்றத்தைத் தற்போதைக்குத் தணித்திடும் வகையில் அமைந்துள்ளது.

அந்த நிலம் யாருக்குச் சொந்தம் என்று கடந்த 1949ம் ஆண்டிலிருந்து நடைபெற்று வந்த வழக்கில் அளிக்கப்படும் தீர்ப்பினால் உடனடி வன்முறை வெடிக்கும் என்ற அச்சம் பரவியிருந்தது.

ஆனால், அத்தகைய வன்முறைச் சூழலுக்கு இடமளிக்காதவகையில் மூன்று மாத காலத்திற்கு தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்றும், உரிமை கொண்டாடி வழக்குத் தொடர்ந்த மூன்று தரப்பினருக்கும் அந்த இடத்தைப் பகிர்ந்தளிக்க வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

அதாவது இந்து மகா சபை, நிர்மோகி அகாரா மற்றும் சுன்னத் வக்பு வாரியம் ஆகிய அமைப்பினருக்குப் பகிர்ந்தளிக்க வேண்டும் என்று அத்தீர்ப்பு கூறுகிறது.

இந்நிலையில் இந்தத் தீர்ப்பை வரவேற்றும் எதிர்த்தும் நாடு தழுவிய அளவில் மதம் சார்ந்த அமைப்புகளும் அரசியல் அமைப்புகளும் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றன.

சர்ச்சைக்குரிய நிலத்தை மூன்று அமைப்பினருக்கும் சம பாகங்களாகப் பிரித்தளிக்க வேண்டும் என்ற போதிலும் இரண்டு மடங்கு இந்துக்களுக்கும், ஒரு மடங்கு முஸ்லிம்களுக்கும் உரிமை உடையது என்னும் வகையில், அத்தீர்ப்பு ஒரு சார்பாக அளிக்கப்பட்டிருப்பதாகவே கருதப்படுகிறது.

அதிலும் தீவிர இந்துத்துவச் சக்திகள் அந்த இடத்தை முழுமையாக இந்துக்களுக்கே ஒப்படைக்க வேண்டும் என்னும் அடிப்படையில், மேல் முறையீட்டுக்குச் செல்வோம் என்றும் முஸ்லிம்களுக்கு மூன்றில் ஒரு பாகத்தைப் பிரித்தளிக்க அனுமதிக்க மாட்டோம் என்றும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

அதேவேளையில் இந்தத் தீர்ப்பைக் கடுமையாக விமர்சனம் செய்து, இஸ்லாமியர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி என்று பாகிஸ்தானிய அமைப்புகள் கண்டனம் தெரிவித்திருப்பதையும் காண முடிகிறது.

ஒட்டுமொத்தத்தில் இந்தப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டதாகவும், இந்து- முஸ்லிம்களுக்கிடையே ஒரு சுமூகமான தீர்வை உருவாக்கும் என்றும் உறுதியாக நம்ப இயலவில்லை.

தீவிர மதவாதச் சக்திகள் இந்தப் பிரச்சனையை மேலும் சிக்கலாக்குவதற்கு முயற்சிப்பார்கள் என்பதையும் தவிர்த்திட முடியாது.

இந்தத் தீர்ப்பினை அடிப்படையாகக் கொண்டு, மேல்முறையீட்டுக்குச் செல்ல விடாமல் இந்திய அரசு தடுப்பதுடன், உடனடிப் பேச்சுவார்த்தை மூலம் ஒரு சுமூகமான தீர்வைக் காண முயற்சிக்க வேண்டும்.

இந்துக்களும் முஸ்லிம்களும் ஒருங்கிணைந்து மனமுவந்து அவ்விடத்தை ஏதேனும் ஒரு பொதுப் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் கொடையளிக்க முன்வர வேண்டும். அதாவது, இந்துக்களும் இஸ்லாமியர்களும் இன்னும் பிற சமூகத்தைச் சார்ந்தவர்களும் பயன்பெறும் வகையில் அவ்விடத்தில் தொல்லியல் ஆய்வுக்கான பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவுவதற்கு இந்துக்களும், முஸ்லிம்களும் மனப்பூர்வமாக விட்டுக் கொடுக்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X