For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முழு நிலத்துக்கும் சொந்தம் கொண்டாடும் அமைப்புகள்: அயோத்தி வழக்கு உச்ச நீதிமன்றம் செல்கிறது!

By Chakra
Google Oneindia Tamil News

Supreme Court
லக்னெள: அயோத்தியின் முழு நிலத்துக்கும் இந்து, முஸ்லீம் அமைப்புகள் சொந்தம் கொண்டாடுவதோடு, இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் போவதாகவும் அறிவித்துள்ளன.

இதனால் அடுத்த கட்ட திருப்பமாக இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்துக்கு செல்வதை தவிர்க்க முடியாது என்று தெரிகிறது.

அயோத்தி நிலத்தை மூன்றாகப் பிரித்து கோவில் கட்ட இந்து அமைப்புகளிடமும், இன்னொரு கோவில் கட்ட நிர்மோகி அகரா அமைப்பிடமும், இன்னொரு பகுதியை பாபர் மசூதி கமிட்டியிடமும் வழங்க அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னெள கிளை தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பின்படி இடிக்கப்பட்ட பாபர் மசூதி அமைந்திருந்த 2,400 சதுர அடி நிலம் மூன்று அமைப்பினருக்கும் பிரித்து வழங்கப்பட வேண்டும். அத்தோடு அந்த வழிபாட்டுத் தலததை சுற்றியுள்ள 2.77 ஏக்கர் நிலப் பகுதியும் மூன்றாகப் பிரிக்கப்பட்டு மூவருக்கும் வழங்கப்பட வேண்டும்.

அதே நேரத்தில் இந்த முழு நிலத்துக்கும் உரிமை கோரிய சன்னி முஸ்லீம் வக்பு வாரியத்தின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுவிட்டது. அதே போல இந்த முழு நிலமும் தங்களிடம் தரப்பட வேண்டும் என்ற நிர்மோகி அகரா அமைப்பின் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டுவிட்டது.

அடுத்த 3 மாதங்களுக்கு இந்த நிலம் அப்படியே நீடிக்க வேண்டும் என்றும் அதன் பிறகு 3 சம பங்குகளாப் பிரித்து அதை மூவருக்கும் மத்திய அரசு வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தரம்வீர் சிங், சுதிர் அகர்வால், எஸ்.யூ.கான் ஆகியோர் நேற்று பரபரப்பான தீர்ப்பளித்தனர்.

அதே நேரத்தி்ல் கட்டிடத்தின் மைய பகுதியில் வைக்கப்பட்டுள்ள ராமர் சிலையை எக்காரணம் கொண்டும் அகற்றக்கூடாது என்றும், அந்த இடத்தில் ராமர் கோவில் கட்டலாம் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

3 நீதிபதிகளின் தீர்ப்பும் மொத்தம் 8,189 பக்கங்களில் எழுதப்பட்டுள்ளது.

இந்தத் தீர்ப்பை பாஜக, ஆர்எஸ்எஸ், விஸ்வ இந்து பரிஷத் ஆகியவை ஏற்றுக் கொண்டுவிட்டாலும் இந்த வழக்கில் முக்கிய வாதிகளான இந்து மகா சபா, ராம ஜென்ம பூமி அறக்கட்டளை ஆகியவை நிலத்தின் ஒரு பகுதியை முஸ்லீம்களுக்கு வழங்க எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்யப் போவதாக அறிவித்துள்ளன.

அதே போல சன்னி முஸ்லீம் வக்பு வாரியமும், முஸ்லிம் தனிச்சட்ட வாரியமும் இந்தத் தீர்ப்பை எதிர்த்துள்ளன. தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை அணுகப் போவதாக அறிவித்துள்ளது.

ஆனால், பாபர் மசூதி கமிட்டி தனது நிலையை இன்னும் முடிவு செய்யவில்லை. 3 மாத காலம் வரை அவகாசம் இருப்பதால் வக்பு வாரியம், முஸ்லீம் தனிச் சட்ட வாரியத்துடன் கலந்தாலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப் போவதாகவும், இந்த விஷயத்தில் தேவையில்லாத அவசரம் காட்ட மாட்டோம் என்றும் அறிவித்துள்ளது.

வழக்கு தொடர்ந்த அமைப்புகளில் இந்து மகா சபையும், வக்ப் வாரியமும் தீர்ப்பை ஏற்க மறுத்துள்ளதால், இந்த வழக்கு அடுத்து உச்ச நீதிமன்றத்தை அடையப் போவது நிச்சயமாகிவிட்டது.

இது குறித்து வக்ப் வாரியம் சார்பில் லக்னெள நீதிமன்றத்தில் வாதாடிய வழக்கறிஞர் ஜிலானி கூறுகையில், தீர்ப்பு சட்டத்துக்கு முரணானது. சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் வக்பு வாரியத்துக்கு சொந்தமானது. அதற்கான ஆதாரங்களை நாங்கள் சமர்பித்தும் கூட, எங்களுக்கு நீதி கிடைக்கவில்லை.

சர்ச்சைக்குரிய இடத்தை 3 ஆக பிரிப்பதை ஏற்க இயலாது. பாபர் மசூதி இடம் ஒரு ஓரத்துக்கு சுருக்கப்படுவது எந்த விதத்தில் நியாயம்?. எனவே நிலத்தை விட்டுக் கொடுக்க மாட்டோம்.

அனைத்திந்திய முஸ்லிம் தனிச் சட்ட வாரியத்திடமும் பாபர் மசூதி நடவடிக்கை கமிட்டியுடனும் ஆலோசனை நடத்தி அப்பீல் மனுவை தயார் செய்வோம் என்றார்.

முஸ்லிம் தனிச்சட்ட வாரியமும் இதே கருத்தை தெரிவித்துள்ளது. அதன் பொதுச் செயலாளர் முகம்மத் அப்துல் ரஹீம் குரேஷி கூறுகையில், சர்ச்சைக்குரிய இடத்தில்தான் ராமர் பிறந்தார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. மேலும் வழக்கில் அடிப்படை பிரச்சனைக்கு தீர்வு காணப்படவில்லை. எனவே நாங்கள் உச்ச நீதிமன்றத்தை நாடுவதைத் தவிர வேறு வழியில்லை என்றார்.

அதே போல அகில பாரத இந்து மகா சபையும் தீர்ப்பை ஏற்க இயலாது என்று கூறியுள்ளது. அதன் உத்தரப் பிரதேச மாநிலத் தலைவர் கமலேஷ் திவாரி கூறுபகையில், அந்த 2.77 ஏக்கர் நிலமும் இந்துக்களுக்கு உரியது. அந்த நிலத்தை பங்கு போடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. இதனால் இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம் என்றார்.

ராமஜென்ம பூமி அறக்கட்டளைத் தலைவர் நிருத்ய கோபால் தாஸ் கூறுகையில், தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் நிலத்தின் ஒரு பகுதியை முஸ்லீம்களுக்கு பிரித்துக் கொடுக்க இயலாது. இதனால் இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை அணுகுவோம்.

இந்தத் தீர்ப்பு குறித்து இந்துக்கள் உணர்ச்சிவசப்படத் தேவையில்லை. இந்த நிலையிலும் பேச்சுவார்த்தை மூலம் சுமுகத் தீர்வைக் காணவும் தயாராக உள்ளோம் என்றார்.

இதனால் இந்த வழக்கு அடுத்த ஒரு மாதத்துக்குள் உச்ச நீதிமன்றத்துக்கு செல்கிறது. உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பளிக்க சில ஆண்டுகள் ஆகலாம்.

இதற்கிடையே இந்த விவகாரத்தை மீண்டும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கும் முயற்சிகளில் சிலர் இறங்கியுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X