யார் இந்த நிர்மோகி அகரா?

குறிப்பாக இடிக்கப்பட்ட பாபர் மசூதியின் மத்திய கோபுரத்துக்குக் கீழே ராமர் சிலை வைக்கப்பட்டுள்ள இடம் ராமர் பிறந்த இடம் என்றும் இந்தத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த இடத்தில் ராமர் கோவில் கட்டவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்த மொத்த இடத்தின் பரப்பளவும் 60க்கு 40 சதுர அடி தான் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது, மொத்தமே 2,400 சதுர அடி நிலம் தான்.
ஆனால், மசூதி இடிக்கப்பட்ட பின் அந்த இடத்தை சுற்றி இருந்த 2.7 ஏக்கர் நிலத்தை மத்திய அரசு கையகப்படுத்தியது. பின்னர் மேலும் 65 ஏக்கரை கைப்பற்றியது. இப்போது இந்த மொத்த 67.7 ஏக்கர் நிலமும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது.
இந் நிலையில் இப்போது மூன்றாகப் பிரிக்கப்படவுள்ள நிலம் 2,400 சதுர அடி தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த இடத்துக்காக பாபர் மசூதி கமிட்டி, ராம் ஜென்ம பூமி கமிட்டி, இந்து மகா சபா உள்ளிட்ட இந்து அமைப்புகள் போராடி வந்தது அனைவருக்கும் தெரியும். ஆனால், இந்து அமைப்பாக இருந்தாலும் இந்த இடத்துக்குத் தனியாக உரிமை கோரி வந்த அமைப்பு நிர்மோகி அகரா (Nirmohi Akhara). இப்போது இந்த அமைப்புக்கும் ஒரு பகுதி நிலம் தரப்படவுள்ளது.
மொத்த இடத்தையும் மூன்றாகப் பிரித்து அதில் ஒரு பகுதியை பாபர் மசூதி கமிட்டியிடமும், இன்னொரு பகுதியை ராமர் கோவில் கட்ட இந்து அமைப்புகளிடமும் ஒப்படைக்க உத்தரவிட்ட நீதிமன்றம், இன்னொரு பகுதியை நிர்மோகி அகராவிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
இந்த இடத்துக்கு முழு உரிமையும் கோரி 1951ல் வழக்கு போட்ட அமைப்பு நிர்மோகி அகரா. இவர்களும் ராமரை வணங்கும் சாதுக்கள். நிர்மோகி அகராவுக்கு, அனைத்தையும் விலக்கி சாது நிலையை அடைந்தவர்கள் (“Group Without Attachment") என்று அர்த்தம்.
இவர்கள் இந்த முழு இடத்தையும் தங்கள் வசமே ஒப்படைக்க வேண்டும் என்று கோரி வழக்குத் தொடுத்தனர். அதே போல சன்னி முஸ்லீம் வக்பு வாரியமும் இந்த இடத்தை முழுவதுமாக தங்களிடம் ஒப்படைக்கக் கோரி வந்தது.
ஆனால், வக்பு வாரியத்தின் மனுவை நீதிமன்றம் முழுவதுமாக தள்ளுபடி செய்துவிட்டது. அதே நேரத்தில் நிர்மோகி அகராவுக்கும் முழு இடத்தைத் தர முடியாது என்று கூறிவிட்ட நீதிமன்றம், அவர்களு்கு ஒரு பகுதி நிலத்தை மட்டுமே வழங்கலாம் என்றும் தீர்ப்பளித்தது.
இந்த அமைப்புக்கு அயோத்தி நிலத்தில் ராம் சபுத்தரா என்ற பகுதியும் சீதா ரசோய் என்ற பகுதியும் தரப்படவுள்ளது.