• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிகார் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம்-பாஜக பட்டியலில் நரேந்திர மோடி, வருண் காந்தி இல்லை

By Chakra
|

பாட்னா: பிகார் சட்டமன்றத் தேர்தலில் பிரச்சாரம் செய்ய வர வேண்டாம் என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடியிடமும், பாஜக இளம் தலைவர்களில் ஒருவரான வருண் காந்தியிடமும் பாஜக கூறிவிட்டது.

இந்த இருவரும் பிகார் பக்கமே வரக் கூடாது என்று அம் மாநில முதல்வர் நிதிஷ் குமார், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் சரத் யாதவ் ஆகியோர் திட்டவட்டமாகக் கூறிவிட்டதையடுத்து பாஜக இந்த முடிவை எடுத்துள்ளது.

அந்த மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம்-பாஜக கூட்டணி அரசு நடந்து வருகிறது. இம்மாதம் நடக்கும் சட்டமனறத் தேர்தலிலும் இந்தக் கூட்டணி போட்டியிடுகிறது.

இந் நிலையில் கடந்த ஆண்டு பிகாரில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பின்போது குஜராத் சார்பில் ரூ. 5 கோடி நிதியுதவியை பிகாருக்கு வழங்கினார் மோடி. இதை பத்திரிகைகளில் விளம்பரமாகவும் வெளியிட்டார்.

இதற்கு நிதிஷ் குமார் கடும் கண்டனம் ரிவித்ததோடு அந்தப் பணத்தையும் திருப்பி அனுப்பினார்.

இதனால் இரு கட்சிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

நிதிஷ் குமார் நடத்தி அமைச்சரவைக் கூட்டத்தை மாநில பாஜக தலைவரும், துணை முதல்வருமான சுசில் குமார் மோடி உள்ளிட்டோர் புறக்கணித்தன்ர்.

இதையடுத்து கூட்டணியே உடையும் நிலை ஏற்பட்டது. ஆனால், பாஜக பணிந்தது. அக் கட்சியின் மூத்த தலைவரான அருண் ஜேட்லி உள்ளிட்ட தலைவர்கள், பிகார் விரைந்து சென்று நிதிஷ் குமாருடன் சமாதானப் பேச்சு நடத்தினர்.

இந் நிலையில் பிகார் சட்டப் பேரவைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. அங்கு அக்டோபர் 21ம் தேதி முதல் நவம்பர் 20-ம் தேதி வரை 6 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது.

மொத்தமுள்ள 243 தொகுதிகளில் ஐக்கிய ஜனதா தளம் 141 இடங்களிலும், பாஜக 102 இடங்களிலும் போட்டியிடுகின்றன.

இதையடுத்து தேர்தல் பிரசாரத்துக்காக பாஜக நரேந்திர மோடி, வருண் காந்தி ஆகியோரை பிகாருக்கு அனுப்ப திட்டமிட்டது. ஆனால், யார் இந்த வருண் காந்தி என்று கேட்ட ஐக்கிய ஜனதா தளத் தலைவர் சரத் யாதவ், தேர்தல் பிரச்சாரத்துக்காக வருண் காந்தி பிகாருக்குள் கால் வைக்கக் கூடாது என்றார். அதே போல மோடியும் வரக் கூடாது என்றார்.

இதே கருத்தை நிதிஷ் குமாரும் திட்டவட்டமாக பாஜகவிடம் தெரிவித்துவிட்டார்.

இதையடுத்து பிரசாரம் செய்யவுள்ள பாஜகவைச் சேர்ந்த 40 தலைவர்கள் அடங்கிய பட்டியலில் இந்த இருவரின் பெயரும் இல்லை. இந்தப் பட்டியலை பாஜக தேர்தல் ஆணையத்திடம் நேற்று சமர்பித்தது.

தேர்தல் கமிஷனிடம் இத்தகைய பட்டியலை அரசியல் கட்சிகள் அளிக்க வேண்டும் என்பது தேர்தல் விதியாகும்.

இதில் பாஜக தலைவர்கள் நிதின் கட்காரி, அத்வானி, ஜோஷி, சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜேட்லி, ராஜ்நாத் சிங், முக்தர் அப்பாஸ் நக்வி, அனந்த்குமார் ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

மேலும், பிகார் மாநிலத்தைச் சேர்ந்த முக்கிய பாஜக தலைவர்களான ரவிசங்கர் பிரசாத், ராஜீவ் பிரதாப் ரூடி, ஷாநவாஸ் உசேன், சி.பி.தாகூர் ஆகியோருடைய பெயர்களும் இடம் பெற்றுள்ளன.

பிகாரில் சிறுபான்மையினர் வாக்குகளை குறி வைத்துள்ள நிதிஷ் குமார், குஜராத் மதக் கலவரம் காரணமாகவே மோடிக்கும், முஸ்லீம்களின் கையை வெட்டுவேன் என்று பேசிய வருண் காந்திக்கும் தடை போட்டுள்ளார். ஆனால், இதற்கு குஜராத் அரசு வெளியிட்ட வெள்ள நிவாரண விளம்பரத்தை காரணமாகக் காட்டிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாஜக கூட்டணி வேட்பாளராக ஷகாபுதீன் மகள்:

இதற்கிடையே பாபர் மசூதி இயக்க கமிட்டியின் ஒருங்கிணைப்பாளரான சையத் ஷகாபுதீன் மகளுக்கு பிகார் சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட ஐக்கிய ஜனதா தளம் வாய்ப்பளித்துள்ளது.

பெகுசராய் மாவட்டத்தில், சாஹேப்பூர் கமல் தொகுதியின் ஐக்கிய ஜனதா தள வேட்பாளராக ஷகாபுதீன் மகளான பர்வீன் அமானுல்லா போட்டியிடுகிறார்.

1990ம் ஆண்டில் பாஜக தலைவர் அத்வானி ரத யாத்திரை மேற்கொண்டபோது, அப்போதைய முதல்வர் லாலு பிரசாத் உத்தரவின்பேரில் தன்பாத் நகர கலெக்டராக இருந்த பர்வீனின் கணவரும், ஐஏஎஸ் அதிகாரியுமான அமானுல்லா அத்வானியைக் கைது செய்ய தயாராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X