For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கடலூர் காங். கூட்டத்தில் கோஷ்டிப் பூசல்-கூட்டத்தைப் புறக்கணித்தார் தங்கபாலு

Google Oneindia Tamil News

Thangabalu
கடலூர்: கடலூர் மாவட்ட காங்கிரஸ் கூட்டத்தில் கோஷ்டிப் பூசல் உச்சத்தை எட்டியிருப்பதால் அங்கு ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தை கட்சித் தலைவர் தங்கபாலுவே புறக்கணித்து விட்டார்.

மாநில அளவில் பல்வேறு கோஷ்டிகள் கொடி கட்டிப் பறந்து வரும் நிலையில் தற்போது மாவட்ட வாரியாக மோதிக் கொண்டுள்ளனர் காங்கிரஸ் கோஷ்டிகள். இன்னும் பெரிய அளவில் வேட்டி கிழிப்பு, மண்டை உடைப்பு என ஆரம்பிக்கவில்லை. இருந்தாலும் மோதல்கள் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளன.

சோனியாகாந்தி, 9-ம் தேதி திருச்சி வருகிறார். இதை முன்னிட்டு, தங்கபாலு அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு கட்சித் தலைவர்களையும் தொண்டர்களையும் சந்தித்து வருகிறார். கூட்டத்திற்கு பெரும் கூட்டம் சேர்க்க வேண்டும் என்று ஆலோசனை கூறி வருகிறார்.

கடலூர் மாவட்ட காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம், கடலூர் திருமண மண்டபம் ஒன்றில், வெள்ளிக்கிழமை நடைபெறும் என்று, வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஏ.நெடுஞ்செழியன், தெற்கு மாவட்டத் தலைவர் பி.ஆர்.சச்சிதானந்தம் ஆகியோர் அறிவிப்பு வெளியிட்டு இருந்தனர். இதனால் கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் பலர் திருமண மண்டபத்தில் கூடியிருந்தனர்.

தங்கபாலுவுக்காக அனைவரும் காத்திருந்தனர். அவர் காலை 9.30 மணிக்கு கடலூர் சர்க்யூட் ஹவுஸில் செய்தியாளர்களைச் சந்திப்பார் என்றும் கூறப்பட்டிருந்தது. இப்படி தடபுடலாக அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வைத்திருந்த நிலையில், நகர எல்லையான பெண்ணை ஆற்றங்கரையில் ஒரு கோஷ்டியினரும், கடலூர் நகரில் காமராஜர் சிலை அருகே மற்றொரு கோஷ்டியினரும், தங்கபாலுவை வரவேற்கக் காத்திருந்தனர்.

ஆனால் தங்கபாலுவையும் காணோம், அவரது நிழலையும் காணோம். இதுகுறித்து வடக்கு மாவட்டக் காங்கிரஸ் தலைவர் நெடுஞ்செழியனைக் கேட்டதற்கு, தங்கபாலு புதுவையில் தங்கி இருக்கிறார். வந்து கொண்டே இருக்கிறார் என்றார்.

ஆனால் 11.30 மணியளவில் தங்கபாலுவின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார் நெடுஞ்செழியன். இதனால் செய்தியாளர்கள் கடுப்பாகி வெளியேறினர். அதேபோல கட்சியினரும் அதிருப்தியுடன் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

நிலைமை என்னவென்றால் சம்பந்தப்பட்ட இடத்தில் வாசன் கோஷ்டியினரும், ப.சிதம்பரம் கோஷ்டியினரும் முஷ்டியை மடக்கிக் கொண்டு மோதலுக்காக காத்திருந்தனராம். தங்கபாலு வந்தால் அவர் முன்பு பெரிய லெவலில் கட்டி உருண்டிருப்பார்கள் அல்லது பெரும் அமளியாகியிருக்கும். இதை உணர்ந்துதான் தங்கபாலு அங்கு வராமலேயே எஸ்கேப் ஆகி விட்டதாக கூறுகிறார்கள்.

அங்கிருந்து எஸ்கேப் ஆன தங்கபாலு நேரடியாக விழுப்புரம் வந்தார். அங்கு நடந்த காங்கிரஸ் செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில்,

நாட்டில் 4 மாநிலங்களில் மட்டும் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த நிலையை மாற்றி, 14 மாநிலங்களில் காங்கிரசை ஆட்சிக்குக் கொண்டுவந்தவர் சோனியாகாந்தி. 5 ஆண்டுகள் நிலையான ஆட்சியை காங்கிரஸ் வழங்கும் என்று நிரூபித்தவர்.

பல மாநிலங்களில் தனித்தும், சில மாநிலங்களில் பரந்த மனப்பான்மையுடன் விட்டுக் கொடுத்தும் ஆட்சியமைக்க உதவி வருகிறோம்.

தமிழகத்தில் ப.சிதம்பரம், ஜி.கே.வாசன், இளங்கோவன் என தலைவர்களிடையே வேறுபாடு இல்லாமல், ஒற்றுமையாக உள்ளோம். பொறாமை கிடையாது. இளைஞர் காங்கிரஸில் உள்ளவர்களின் திறமையை லாவகமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

சோனியாகாந்தி வரும்போது மாபெரும் கூட்டத்தை திரட்ட வேண்டியது நமது கடமை. எந்தக் கட்சியில் பிரிவினை இல்லை? சகோதரர்களிடம் கூட வேற்றுமை உள்ளது. அதனை மறந்து நாம் ஒன்று திரளுவோம் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X