இணையதளப் பெயரை தவறாக பயன்படுத்தியதாக காங். மீது பாஜக புகார்
இதுகுறித்து பாஜக தரப்பில் கூறப்படுவதாவது...
கடந்த சில மாதங்களாக எங்களது இணையதளத்திற்கு (http://bjp.org/) வருகிற விசிட்டர்களின் எண்ணிக்கையில் பெரும் சரிவு காணப்பட்டது. இது எங்களுக்குக் குழப்பத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து என்ன பிரச்சினை என்று ஆராய்ந்தபோது எங்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.
அதாவது பாஜக இணையதளத்திற்குப் போக விரும்பும் ஒருவர், www.bjp.com என்றுதான் பெரும்பாலும் டைப் செய்கின்றனர். வர்த்தக பயன்பாட்டுக்குத்தான் .காம் என்பது பயன்படுத்தப்படுகிறது என்பது பெரும்பாலானவர்களுக்குத் தெரிவதில்லை. எனவே bjp.com என்று பொதுவாக டைப் செய்கின்றனர்.
அப்படிச் செய்தபோது அது நேரடியாக காங்கிரஸ் கட்சியின் இணையதளத்திற்குக் கொண்டு போய் விட்டதைப் பார்த்து நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம்.
இதையடுத்து நாங்கள் தீவிர விசாரணையில் இறங்கினோம். அப்போது பாரத் ஜனதா பிரகாஷன் என்ற பெயரில் bjp.com என்ற டொமைன் பதிவு செய்யப்பட்டிருப்பதை அறிந்தோம்.
சில மாதங்களுக்கு முன்பு இந்த டொமைனை யாரோ சிலர் வாங்கியுள்ளனர். பின்னர் அதை காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு ரீடைரக்ட் செய்துள்ளனர். அதாவது பாஜகவுக்குரிய விசிட்டர்களை சட்டவிரோதமாக அவர்கள் தங்களது கட்சி இணையதளத்திற்குத் திருப்பி விட்டுள்ளனர் என்று கூறியுள்ளனர்.
இந்த நிலையில் இதுகுறித்து தற்போது காங்கிரஸ் கட்சிக்கு பாஜக வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், இது பிக்பாக்கெட் திருட்டு போல உள்ளது. எதிர்க்கட்சி ஒன்றின் அடையாளத்தை பயன்படுத்துவது ஒரு கீழான செயலாகும். ஆனால், காங்கிரஸ் கட்சி இதுவரை பதில் தராமல் உள்ளது.
வணிக அமைப்புகள் மட்டுமே .காம் என்ற பெயருடன் இணையதளம் தொடங்குவது நடைமுறையில் உள்ளது. ஆனால், யாரோ பிஜேபி.காம் என்ற பெயரை காங்கிரஸ் இணையதளத்துக்கு சாதகமாக பயன்படுத்தி வருகின்றனர். இதன் பின்னணியில் இருப்பது யார் என்று எங்களுக்கு தெரிய வேண்டும். எனவே தான் காங்கிரஸ் கட்சிக்கு நோட்டீஸ் அனுப்பினோம்.
அந்த இணையதளத்தின் உரிமையாளர் விவரத்தில் குறிப்பிட்டுள்ள தொலைபேசி எண்கள் அமெரிக்காவைச் சேர்ந்தவை. அதில் தொடர்பு கொண்டால் பதிவு செய்யப்பட்ட தானியங்கி முறையிலான பதில் தான் வருகிறது.
"பாரத் ஜர்னல்ஸ்" என்னும் நிறுவனம் தான் அந்த இணையதளப் பெயரின் உரிமையாளர் என்றால் அவர்கள் பகிரங்கமாக இணையதளத்தை நடத்த வேண்டும். ஆனால், அதில் காங்கிரஸ் இணையதளத்துக்கு எதற்காக இணைப்பு கொடுக்க வேண்டும்? பாஜகவின் அடையாளத்தை திருடும் நடவடிக்கை தான் இது.
உலகெங்கும் பிஜேபி என்ற பெயர் எங்கள் கட்சியை தான் குறிக்கும் என்பது அனைவரும் அறிந்தது. எங்கள் அடையாளத்தை தெரிந்தே திருடியுள்ளனர். இது தெரியாமல் நடந்த தவறு அல்ல என்பதே எங்கள் குற்றச்சாட்டு என்றார் அவர்.