ஜெகன் மோகன் ரெட்டி கொடுத்த சர்ப்ரைஸ்-ரூ. 84 கோடி அட்வான்ஸ் வரி கட்டினார்

தந்தை ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி மறைவுக்குப் பின்னர் முதல்வர் பதவி தனக்கே வரும் என எதிர்பார்த்திருந்தார் ஜெகன்மோகன். ஆனால் ரோசய்யாவை முதல்வராக்கி விட்டது காங்கிரஸ் மேலிடம். இதனால் கடும் அதிருப்திக்குள்ளான அவர் தொடர்ந்து காங்கிரஸ் மேலிடத்திற்கு நெருக்கடி கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் தற்போது ஜெகன் மோகன் ரெட்டியின் பண பலம் பெருத்த ஆச்சரியத்தை ஏற்படுத்த தொடங்கியுள்ளது. ராஜசேகர ரெட்டி மறைவுக்குப் பின்னர் ஜெகன் மோகன் ரெட்டியின் சொத்து விவரங்கள், பண பலம் குறித்து பெரிய அளவில் யாருக்கும் சரிவரத் தெரியவில்லை. இந்த நிலையில் அவர் ரூ. 84 கோடியை அட்வான்ஸ் வரியாக கட்டி அனைவரையும் வியப்புக்குள்ளாக்கியுள்ளார்.
நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டும் ரூ. 84 கோடி அட்வான்ஸ் வரி கட்டியுள்ளார் ஜெகன் மோகன். இதன் மூலம் இவருடைய ஆண்டு வருமானம் ரூ. 500 கோடி அல்லது அதற்கு மேலும் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதே ஜெகன் மோகன் ரெட்டி கந்த 2008-09 நிதியாண்டில் வெறும் ரூ.2.92 லட்த்தை மட்டுமே வரியாக கட்டியிருந்தார். இது 2009-10ல் ரூ. 6.72 கோடியாக உயர்ந்திருந்தது. ஆனால் தற்போது ரூ. 84 கோடி அட்வான்ஸ் வரியை அவர் இதுவரை கட்டியிருப்பது பெரும் கேள்விக்குறிகளை எழுப்பியுள்ளது.
கடந்த 2009ம் ஆண்டுஇதே காலகட்டத்தில் அவர் கட்டிய அட்வான்ஸ் வரியுடன் ஒப்பிட்டால் இது 1000 சதவீதம் அதிகுமாகும். தனி நபர்கள் வருடத்திற்கு இரண்டு முறை அட்வான்ஸ் வரியைக் கட்டலாம்.
இவர் மட்டுமல்ல கர்நாடக மாநிலத்தில் சட்டவிரோதமாக சுரங்கத் தொழிலில் ஈடுபட்டிருப்பவர் என்ற குற்றச்சாட்டுடன் கூடிய அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி, அவருடைய மனைவி காலி லட்சுமி அருணா ஆகியோரும் பெருமளவில் அட்வான்ஸ் வரி கட்டியவர்களில் சிலர். செப்டம்பர் மாதம் வரை இவர்கள் ரூ.20 கோடி வரை அட்வான்ஸ் வரி கட்டியுள்ளனர்.
தொலைத் தொடர்புத்துறை அதிகாரியாகஇருந்துதொழிலதிபராக மாறிய ஆசிம் கோஷ் ரூ. 20.78 கோடி அட்வான்ஸ் வரி கட்டியுள்ளார்.