For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திருச்சி கல்லறையில் ஜாதி வெறி-இடிக்கப்பட்டது தீண்டாமைச் சுவர்

Google Oneindia Tamil News

திருச்சி: திருச்சி சிறையில் ஜாதி ரீதியாக கல்லறையைப் பிரித்துக் கட்டப்பட்டிருந்த தீண்டாமைச் சுவரை இடிக்கும் போராட்டம் இன்று நடந்தது. இதில் ஈடுபட்ட தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத்தினரை போலீஸார் அப்புறப்படுத்திக் கைது செய்தனர்.

பெரியார் காலத்திலிருந்தே இந்த தீண்டாமைச் சுவர் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

திருச்சி மேலபுதூரில் உள்ள உத்திரமாதா கோயில் கல்லறையில் தலித் மக்களுக்காக ஒரு பகுதியும், பிள்ளைமார் உள்ளிட்ட பிற ஜாதியினருக்கு தனி இடமும் ஒதுக்கி கல்லறையே இரண்டாகப் பிரித்து வைத்து சவ அடக்கங்களை நடத்தி வருகின்றனர். கல்லறைக்குப் போகும் இடத்திலும் நிலவி வந்த இந்த ஜாதி வெறி இன்று நேற்றல்ல பல காலமாக இருந்து வருகிறதாம்.

இதைக் கண்டித்து தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம் பொதுச்செயலாளர் நிலவன் தலைமையில், 10 பேர் கொண்ட கும்பல் கடப்பாறை, சம்மட்டி, சுத்தி ஆகியவற்றை கொண்டு சுவரை இடித்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம் பொதுச்செயலாளர் நிலவன்,

திருச்சி மாநகரில் மைய பகுதியில் மேலபுதூரில் அமைந்துள்ளது உத்திரமாதா கோயில் கல்லறை. சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டுள்ள இந்த கல்லறையில் ஆயிரக்கணக்கானோர் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தில்லை மாநகர், தருமநாதபுரம், செங்குலம் காலணி, செந்தநீர்புரம், நாசிங்பேட்டை, வரகநெரி, ராஜாபேட்டை, மன்னார்புரம், ஜங்ஷன், காஜாமலை உள்ளிட்ட 32 பகுதிகளைச் சேர்ந்த கிருத்துவ மக்களுக்கு சொந்தமான இந்த கல்லறையில், தீண்டாமை சுவர் ஒன்றை எழுப்பி, நாங்கள் மேல் ஜாதி என்று அழைத்துக்கொள்ளும் பிள்ளைமார், ஆசாரி ஜாதியை சேர்ந்த கிருத்துவர்களை அடக்கம் செய்வதற்கு தனியாகவும், தாழ்த்தப்பட்ட கிருத்துவ மக்களை அடக்கம் செய்ய தனியாகவும், ஜாதிக் கண்ணோட்டத்தில் கல்லறையை இரண்டாக பிரித்து சுவர் எழுப்பியுள்ளனர்.

மதம் மாறிய பிறகும் ஜாதிக் கொடுமையா?

இந்த இரண்டு பிரிவினரும் ரோமன் கத்தோலிக்க (ஆர்.சி) பிரிவை சேர்ந்தவர்கள். இந்த இரண்டு பிரிவினரும் ஒரே கோயில் பங்கு உடையவர்கள். இந்து மதம் சாதியின் பெயரால், கொடுமை பிடியில் இருந்து தங்களை விடுவித்துக்கொள்வதற்காக கிருத்தவ மதத்தை தழுவிய லட்சக்கணக்கான தாழ்த்தப்பட்ட மக்களை, அதே சாதி கொடுமையினால் வாட்டி வதைப்பதன் மூலம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டுமல்லாது, கிருத்துவ மதத்திற்கு அவமானத்தையும், துயரத்தையும் வழங்குவதோடு தங்களை பழைய சாதி அடையாளங்களை தக்க வைத்துக்கொள்வது மூலம் கிருத்துவ மதத்தை இந்துத்துவ படுத்தும் வேலையாக ஆதிக்க சாதிவெறி பிடித்த கிருத்தவர்கள் தொடர்ந்து செய்து வருகிறார்கள்.

பெரியார் காலத்திலிருந்தே இருக்கும் ஜாதி வெறி

இவர்கள் சாதிவெறிக்கு இந்த மேலபுதூரில் கல்லறையின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தீண்டாமை சுவர், பெரிய எடுத்துக்காட்டாகும். 1960ல் மேலபுதூரில் உள்ள ஜாதி சுவரை இடித்து தள்ளுவேன் என பெரியார் கூறினார். ஆனால் கிருத்தவ வெள்ளாளர்களுக்கும், ஆசாரிகளுக்கும் சில தாழ்த்தப்பட்ட கிருத்தவர்கள் கை கூலியாக மாறியதால், பெரியாரின் முயற்சி தோல்வி அடைந்தது என்றார்.

பின்னர் நிலவன் தலைமையில், 10 பேர் கொண்ட கும்பல் கடப்பாறை, சம்மட்டி, சுத்தி ஆகியவற்றை கொண்டு சுவரை இடித்தது. அப்போது பாலக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையில் வந்த போலீசார், 10 பேரை கைது செய்தனர். அப்போது அவர்கள், இறந்து பின்னும் சாதி எதற்கு? மரியே நியாயமா? என்ற கோஷங்களை எழுப்பினர்.

மதுரை மாவட்டத்தில் இருந்து வந்த ஒரு தீண்டாமைச் சுவருக்கு சில காலத்திற்கு முன்புதான் தீர்வு காணப்பட்டது. இருந்தாலும் அங்கு இன்னும் தீண்டாமை ஒழியவில்லை. இந்த நிலையில் மரணத்திற்குப் பின்னர் அனைவரும் சமம் என்ற நிலையிலும், அங்கும் ஜாதி வெறி தலைவிரித்தாடும் செயல் பரபரப்பையும், வேதனையையும் ஏற்படுத்துவதாக உள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X