For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குழந்தைகளை கடத்தினால் தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை-ஸ்டாலின் எச்சரிக்கை

By Staff
Google Oneindia Tamil News

Stalin
சென்னை: குழந்தைகள் கடத்தல் சம்பவங்களை தடுக்க தேவையான நடவடிக்கைகளை எவ்வித தயவு தாட்சண்யமுமின்றி நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக துணை முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் கடத்தல் குறித்து சட்டசபையில் இன்று கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதன் மீது வேலுசாமி (அதிமுக), கோவை தங்கம் (காங்கிரஸ்), வேல்முருகன் (பாமுக), வை. சிவபுண்ணியம் (சிபிஐ), கே. பாலபாரதி (சிபிஎம்), சதன் திருமலைக்குமார் (மதிமுக), ரவிக்குமார் (விடுதலை சிறுத்தை) ஆகியோர் பேசினர். கோவிந்தசாமி பாயிண்ட் ஆஃப் ஆர்டர் கொண்டு வந்து பேசினார்.

அவர்களுக்கு ஸ்டாலின் பதிலளித்துக் கூறியதாவது:

கோவை மாநகரில் பள்ளியில் படிக்கின்ற 2 குழந்தைகள் கடத்தப்பட்டு, கொலை செய்யப்பட்டது குறித்தும், சென்னையில் பள்ளி மாணவர் ஒருவர் கடத்தப்பட்டது, பணம் கேட்டு மிரட்டி, பின் காவல் துறையால் மீட்கப்பட்டது குறித்தும் கவன ஈர்ப்புத் தீர்மானங்கள் கொண்டு வந்திருக்கிறார்கள்.

காவல் துறையினர் எடுத்திருக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்து இங்கு நான் சில விளக்கங்களைக் குறிப்பிட விரும்புகிறேன்.

இந்த அரசு பொறுப்பேற்றது முதல், மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கைப் பராமரிக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதால், தமிழகத்தில் பெரிய அளவில் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் ஏதுமின்றி தொடர்ந்து அமைதி காக்கப்பட்டு வருகிறது.

தமிழக காவல் துறையினர், குற்றச் செயல்களில் ஈடுபடும் சமூக விரோதிகளை உரிய சட்டப் பிரிவுகளின்கீழ் உடனடியாக கைது செய்து நீதிமன்றங்களில் தக்க தண்டனை பெற்றுத் தருவதோடு, அவர்களைத் தடுப்புக் காவலில் வைத்தும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

மாநிலத்தில், ஆங்காங்கே ஒரு சில இடங்களில் நடந்த கடத்தல் சம்பவங்களில், காவல்துறையினர் மிக வேகமாகச் செயல்பட்டு, குறுகிய காலத்திலேயே கடத்தலில் ஈடுபட்டவர்களை கைது செய்து கடத்தப்பட்டவர்களை மீட்டிருக்கிறார்கள்.

பொதுவாக, காதல் விவகாரம் மற்றும் தனிப்பட்ட பிரச்சனைகள் காரணமாக சிலர், வீட்டை விட்டுச் செல்லும் தருணங்களில், அச்சம்பவங்கள் குறித்து பெறப்படும் புகார்களின் மீது பதிவு செய்யப்படும் வழக்குகளைப் பற்றி பத்திரிகைகள் பிரசுரிக்கும்போது, அச்சம்பவங்கள் கடத்தல் சம்பவங்கள் போன்ற தவறான தோற்றத்தை மக்களிடையே ஏற்படுத்தி வருகின்றன.

இதுபோன்று பதிவு செய்யப்படும் வழக்குகளில், பெரும்பாலான வழக்குகள் காதல் விவகாரம் தொடர்பாகவும், சில வழக்குகள் சொத்து, தொழில் போட்டி, குடும்ப விவகாரம், பணம் கொடுக்கல் வாங்கல் போன்ற பிரச்சனைகள் காரணமாகவும் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் ஆகும்.

பணயத் தொகை கேட்டு சிறுவர்கள் கடத்தப்பட்ட சம்பவங்கள் மிகமிகக் குறைவாகும். உதாரணமாக, சென்னை மாநகரில் கடந்த ஜூன் 2009 முதல் இதுவரை 45 கடத்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில், இரண்டு வழக்குகள் மட்டுமே பணயத் தொகை கேட்டு சிறுவர்கள் கடத்தப்பட்டவை ஆகும்.

எஞ்சிய வழக்குகளில், 32 வழக்குகள் காதல் விவகாரம் தொடர்பாகவும், இரண்டு வழக்குகள் சொத்து பிரச்சனை சம்பந்தமாகவும், ஒரு வழக்கு தொழில் போட்டியின் காரணமாகவும், 8 வழக்குகள் குடும்ப விவகாரம் பணம் கொடுக்கல் வாங்கல் காரணமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

2006ம் ஆண்டு முதல் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை, 201 கடத்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளில் அனைத்திலுமே காவல் துறையினர் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து கைது செய்துள்ளதோடு, கடத்தப்பட்டவர்களையும் மீட்டுள்ளனர்.

உதாரணமாக, சென்னை பெரம்பூரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் சீனிவாசன் கடத்தல் வழக்கு, சேலம் மாநகரம், சேலத்தான்பட்டியில் சிவாஜி என்பவரின் மகன் ரோஹித் கடத்தப்பட்ட வழக்கு, அரியலூர் காங்கிரஸ் சட்டப் பேரவை உறுப்பினர் பாளை அமரமூர்த்தியின் தம்பி மகன் மாணவன் தர்மதுரை கடத்தப்பட்ட வழக்கு, மதுரை மாவட்டம், பரவை பாமாதேவி என்பவரின் மகன் அக்னிவேல் ஜெயராமன் கடத்தப்பட்ட வழக்கு, சிவகாசி ராமமூர்த்தி என்பவரின் மகள் பவிதா கடத்தப்பட்ட வழக்கு, சென்னை அண்ணாநகர் எஸ்.பி.ஓ.ஏ பள்ளி மாணவன் கிரீஷ் ஆனந்த் கடத்தப்பட்ட வழக்கு, சென்னை முகப்பேர் டி.ஏ.வி பள்ளி மாணவன் கீர்த்திவாசன் கடத்தப்பட்ட வழக்கு ஆகியவற்றில் காவல்துறையினர் திறமையாகச் செயல்பட்டு, கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை மிகக் குறுகிய காலத்திலேயே கைது செய்து, கடத்தப்பட்டவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாவண்ணம் அவர்களைப் பாதுகாப்பாக மீட்டிருக்கிறார்கள்.

குறிப்பாக கீர்த்திவாசன் கடத்தப்பட்ட வழக்கில் காவல் துறையினர் விரைந்து செயல்பட்டு, குற்றவாளிகளை தங்களது கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வந்து, எதிரிகள் மக்கள் நெருக்கம் மிகுந்த குடியிருப்பு பகுதியில் இருந்ததாகத் தெரிய வந்ததால், எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல், கீர்த்திவாசனை அவர்களிடமிருந்து பணயத் தொகை கொடுத்து மீட்கும் யுக்தியைக் கடைப்பிடித்து, மாணவனை மீட்ட சில மணி நேரத்திலேயே குற்றவாளிகளை கைது செய்து, பணயத் தொகையையும் கைப்பற்றியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், நான் இங்கே ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன். 1993ம் ஆண்டு ஜூன் மாதம், அடையார் காந்தி நகரில் தொழிலதிபர் சிங்கார வேலனின் மகனும் பள்ளி மாணவனுமான ஸ்ரீராம் பள்ளியை விட்டு வெளியே வந்தபோது கடத்தப்பட்ட வழக்கில், மாணவனின் தந்தை பணயத் தொகையாக ரூ.5 லட்சம் கொடுத்தும், மாணவன் ஸ்ரீராம் உயிருடன் மீட்கப்படவில்லை என்பதுதான் உண்மையான செய்தி.

அதேபோல, கோவை மாநகர், ரங்கே கவுண்டர் வீதியில் குடியிருந்து வரும் பிரேம்சந்த் என்பவரின் மகள் முஸ்கான் ஆஸ்வால் (10), மகன் ரித்திக்(7) ஆகியோர் கடந்த 29.10.2010 காலை சுமார் 8 மணியளவில் பள்ளிக்குச் சென்றபோது கடத்தப்பட்டுள்ளனர்.

இந்த இரு மாணவர்களையும் வழக்கமாக பள்ளிக்கு அழைத்துச் செல்லும் டாக்ஸி வருவதற்கு முன்பாகவே மற்றொரு டாக்ஸியில் காலை 7.55 மணியளவில் யாரோ அழைத்துச் சென்றுவிட்டதாக, சுமார் இரண்டே முக்கால் மணி நேர தாமதத்திற்குப் பின்பே, அதாவது சுமார் 10.45 மணிக்கு வெரைட்டி ஹால் சாலை காவல் நிலையத்திற்குத் தகவல் தரப்பட்டுள்ளது.

உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறை மூலம் அனைத்து சோதனைச் சாவடிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. கோவை மாநகர் பி.8 காவல் நிலைய குற்ற எண்.1461/10 இந்தியத் தண்டனைச் சட்டப் பிரிவு 363 மற்றும் 364, 376, 302, 201 பிரிவுகளின்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு, ஒரு உதவி ஆணையர் மற்றும் 4 ஆய்வாளர்களைக் கொண்ட தனிப்படை புலன் விசாரணையை மேற்கொண்டுள்ளது.

தனிப்படையின் விசாரணையில் அந்த மாணவர்களை ஏற்கனவே பள்ளிக்கு அழைத்துச் சென்ற முந்தைய டாக்ஸி ஓட்டுநரான மோகன் என்கிற மோகன் ராஜ் என்கிற மோகனகிருஷ்ணன் என்பவன் கடத்திச் சென்றது தெரியவந்தது. குற்றவாளியின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு, தனிப்படையினர் அன்றைய தினமே (29.10.2010) இரவு 9.30 மணிக்கு அவனைக் கைது செய்துள்ளனர்.

விசாரணையில், குழந்தைகளைக் கடத்தி சிறுமி முஸ்கானைக் கற்பழித்து, இயற்கைக்கு மாறான உறவு கொண்டு, அதன்பின் குழந்தைகளைக் கொலை செய்து அவர்களின் உடல்களைப் பரம்பிக்குளம் ஆழியாறு திட்டப் பிரதான கால்வாயில் போட்டு விட்டதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ள மோகன், தன் நண்பனான மனோகரன் என்பவனும் தனக்கு உடந்தையாக இருந்ததாக வாக்குமூலம் அளித்துள்ளான்.

இதனடிப்படையில், மனோகரன் 31.10.2010 அன்று காலை 7.00 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளான்.

குற்றவாளி மோகனின் வாக்குமூலத்தின் அடிப்படையில் முஸ்கானின் உடல் 30.10.2010 அன்றும், ரித்திக்கின் உடல் 31.10.2010 அன்றும் பரம்பிக்குளம் ஆழியாறு திட்ட பிரதான கால்வாயில் வெவ்வேறு இடங்களிலிருந்து மீட்டெடுக்கப்பட்டன.

சக மாணவர்களிடமும், பள்ளி ஆசிரியர்களிடமும் தகவல் பெற்று, முந்தைய ஓட்டுநர்களையும் விசாரித்து, குற்றவாளி மோகனகிருஷ்ணன் அன்றைய தினமே கைது செய்யப்பட்டுள்ளான். காவல்துறைக்கு தகவல் கிடைத்து எதிரிகளைத் தேடத் துவங்கும் முன்பே குற்றங்கள் நடந்து முடிந்துவிட்டன. வழக்கு விசாரணையை உடனடியாக முடித்து, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

இந்த வழக்கில் புலன் விசாரணை அதிகாரி, தேவையான சாட்சியங்களைச் சேகரிக்க மோகன் மற்றும் மனோகரன் ஆகியோரை 8.11.2010 அன்று மாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, 3 நாட்கள் காவல் துறை காவலில் எடுத்துள்ளனர்.

9.11.2010 அன்று காலை 5 மணியளவில், சம்பவ இடத்தைப் பற்றி அறிந்து சாட்சியங்களைச் சேகரிக்க, குற்றவாளி மோகனை ஆய்வாளர் அண்ணாதுரை, உதவி ஆய்வாளர்கள் ஜோதி, முத்துமாலை மற்றும் மூன்று காவல் ஆளிநர்கள் ஒரு காவல் வாகனத்திலும் மற்றொரு எதிரி மனோகரனை ஆய்வாளர் கனகசபாபதி மற்றும் காவல் ஆளிநர்கள் பிறிதொரு காவல் வாகனத்திலும் கோவையிலிருந்து பொள்ளாச்சிக்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

காலை சுமார் 5.30 மணியளவில், வாகனம் போத்தனூர் காவல் நிலைய எல்லை, செட்டிப்பாளையம் குப்பமேடு என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது உதவி ஆய்வாளர் ஜோதி வைத்திருந்த கைத்துப்பாக்கியை குற்றவாளி மோகன் திடீரென பறித்துக் கொண்டு வாகன ஓட்டுநரை பாலக்காடு நோக்கி ஓட்டுமாறு மிரட்டியுள்ளான். அதற்கு காவல் அதிகாரிகள் மறுத்தபோது, மோகன் கைத்துப்பாக்கியால் காவலர்களை நோக்கி சுட்டு, வாகனத்திலிருந்து தப்பிக்க முயற்சித்துள்ளான்.

குற்றவாளி சுட்டதில் உதவி ஆய்வாளர் ஜோதிக்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளது. மோகனைப் பிடிக்க முயற்சித்தபோது, உதவி ஆய்வாளர் முத்துமாலையை நோக்கி குற்றவாளி மோகன் சுட்டதில், அவருக்கு வயிற்றுப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. உடனே, உதவி ஆய்வாளர் முத்துமாலை தற்காப்புக்காகவும், உடன் வந்த மற்றவர்களைப் பாதுகாக்கும் பொருட்டும் அவரிடமிருந்த கைத்துப்பாக்கியால் குற்றவாளியைச் சுட்டுள்ளார்.

ஆய்வாளர் அண்ணாதுரையும் தன்னிடம் இருந்த கைத்துப்பாக்கியால் சுட்டுள்ளார். இச்சம்பவத்தில் குற்றவாளி மோகனுக்கு மார்பு மற்றும் தலையில் காயம் ஏற்பட்டு கீழே விழுந்துள்ளான். உடனே அவனை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு காவல் துறையினர் கொண்டு சென்றுள்ளனர். அவனைப் பரிசோதித்த மருத்துவர் இறந்தவிட்டதாகத் தெரிவித்துள்ளார். மற்றொரு எதிரி மனோகரன் காவல் பாதுகாப்பில் விசாரணையில் இருந்து வருகிறான்.

குற்றவாளி காவல்துறைப் பாதுகாப்பில் இருந்தபோது, மரணமுற்றதால், நீதித்துறை நடுவர் மூலமாக நீதி விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இச்சம்பவத்தில் காயமடைந்த உதவி ஆய்வாளர் ஜோதி மற்றும் முத்துமாலை ஆகியோர், கோவை அரசு மருத்துவமனையில் முதல் சிகிச்சைப் பெற்ற பின்னர், கோவை மெடிகல் சென்டர் (தனியார்) மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

மேற்கண்ட சம்பவம் தொடர்பாக போத்தனூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, முறையான விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதேபோல், அதிமுக உறுப்பினர் செ.ம. வேலுசாமி ஒரு குற்றச்சாட்டை இங்கே பதிவு செய்திருக்கிறார். தஞ்சாவூரில் காணாமல் போன ஒரு பள்ளி சிறுமியைப் பற்றி இங்கே குறிப்பிட்டுச் சொன்னார். அதற்கான விளக்கம் வருமாறு:

தஞ்சாவூர் செக்கடியில் வசித்து வரும் பெருமாள் என்பவரின் மகள் சீதாலெட்சுமி (11) என்பவர், தஞ்சாவூர் கல்யாணசுந்தரம் மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு பயின்று வருகின்றார். நேற்று (9-11-2010) காலை 9.30 மணிக்குப் பள்ளிக்குச் சென்ற தனது மகள் காணவில்லையென்று பெருமாள், நேற்றிரவு தஞ்சாவூர் மேற்கு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கில்,

காணாமல் போன சீதாலெட்சுமியைக் காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வந்தனர். நேற்று இரவு 10.30 மணியளவில் திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் பணியிலிருந்த காவல் துறையினர் ஈரோடு-நாகர்கோவில் பயணிகள் இரயிலிலிருந்து இறங்கிய சீதாலெட்சுமியைக் கண்டுபிடித்து விசாரித்தனர்.
சீதாலெட்சுமியின் பாட்டி திருநெல்வேலியில் வசித்து வருவதால், அவரைப் பார்க்க தானாகவே வந்ததாக சீதாலெட்சுமி தெரிவித்ததைத் தொடர்ந்து, அவரது பெற்றோருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தற்போது சீதாலெட்சுமி திருநெல்வேலி சரணாலயம் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார். சீதாலெட்சுமியின் பெற்றோர்கள் அவரை அழைத்து வர திருநெல்வேலி சென்றிருக்கிறார்கள் என்ற செய்தியை இந்த அவைக்கு நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

அடுத்து, திருவல்லிக்கேணியில் நடைபெற்ற ஒரு சம்பவத்தைப் பற்றிக் கூட அவர் இங்கே பேசியிருக்கிறார். சென்னை திருவல்லிக்கேணி, மேயர் சிட்டிபாபு தெருவில் வசிக்கக்கூடிய 84வது வட்ட அதிமுக செயலாளர் சிவா என்பவரின் மகன் தினேஷ்குமார் (12), 7ம் வகுப்பு படிக்கக்கூடிய மாணவன், 8-11-2010 அன்று இரவு 8-30 மணியளவில் தனது வீட்டின் அருகிலே விளையாடிக் கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மேற்படி சிறுவனிடம் அவரது தந்தையின் புகைப்படத்தைக் காட்டி “உன் தந்தை அழைத்து வரச் சொன்னார்" என்று கூற, மேற்படி நபரைப் பின்தொடர்ந்து பார்த்தசாரதி கோயில் வரையில் நடந்து சென்ற சிறுவன் தினேஷ்குமார் பயத்தால் அழுததால், மேற்படி நபர்- சிறுவனின் இடது கையில் பிளேடால் கீறிவிட்டு, சிறுவனை அங்கேயே விட்டுவிட்டுச் சென்ற விட்டதாக, சிறுவனின் தந்தை சிவா கொடுத்த புகாரின் பேரில், ஜாம்பஜார் காவல் நிலையக் குற்றவியல் எண் 1335/2010 சட்டப் பிரிவு 324 என்ற பிரிவில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

சிறுவன் பத்திரமாகப் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டான். விசாரணையில் சிறுவன் குடும்பத்தில் பணம் கொடுக்கல், வாங்கல் காரணமாக நிலவி வரும் முன்விரோதம் காரணமாக இந்தச் செயல் நடந்திருக்க வாய்ப்பிருப்பதாகவும், அதன் காரணமாக சிறுவன் தினேஷ்குமார் கடத்தப்பட்டதாகத் தெரிகிறது. இதுசம்பந்தமாக முறையான விசாரணை நடைபெற்று வருகிறது.

ஆகவே, பள்ளி மாணவர்கள் கடத்தப்பட்ட சம்பவங்கள் அடுத்தடுத்து நடந்ததையடுத்து, அனைத்து பள்ளிகளிலும் காவல் துறையினர் கண்காணிப்பு பணிகளை அதிகப்படுத்தியுள்ளனர்.

நகரங்களில், பள்ளி தொடங்கும் மற்றும் முடியும் நேரங்களில் காவல்துறையினர் வாகனங்களில் அப்பகுதிகளில் ரோந்து செய்து வருகின்றனர்.

மேலும், இத்தகைய சம்பவங்களைத் தடுக்க அனைத்து பள்ளி நிர்வாகங்களையும் மாணவர்களின் பாதுகாப்பு குறித்து அவர்களது பெற்றோர்களோடு கலந்து பேசவேண்டுமென்றும், மாணவர்கள் பள்ளிகளுக்கு வரும் வாகனங்களின் ஓட்டுநர்கள் குறித்த விவரங்கள் சேகரித்து வைக்கப்பட வேண்டுமென்றும், மாலையில் பள்ளி வாசலில் ஆசிரியர்களை அமர்த்தி மாணவர்கள் பாதுகாப்பாகச் செல்கின்றனரா என்று கண்காணிக்க வேண்டுமென்றும், மாணவர்களிடையே கடத்தல் சம்பவங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென்றும், காவல் துறை, கல்வித் துறை மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் பாதுகாப்பு குறித்து தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் அரசு அறிவுறுத்தியிருக்கிறது.

இக்குற்றங்கள் சம்பந்தமாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் உடனடியாக புலன் விசாரணை முடித்து, எதிரிகளுக்கு விரைவில் நீதிமன்றத்தில் தக்க தண்டனை பெற்றுத்தர காவல் துறையினர் அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.

காவல் துறையினர்- கடத்தல் போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது தகுந்த நடவடிக்கைகள் எடுத்து வந்த போதிலும், பாதிக்கப்பட்ட நபர்களுக்கு தெரிந்தவர்களே இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதால், சில சமயங்களில் அக்குற்றங்களை காவல் துறையினர் முழுவதுமாக தடுக்க இயலாமல் போய்விடுகிறது.

இருப்பினும் இதுபோன்ற சம்பவங்களை தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எவ்வித தயவு தாட்சண்யமுமின்றி எடுக்க வேண்டுமென காவல் துறைக்கு தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X