For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கோலாகலமாகமாக நடந்தது அழகிரி மகன் திருமணம்-கருணாநிதி நடத்தி வைத்தார்

Google Oneindia Tamil News

மதுரை: மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி-அனுஷ்கா திருமணத்தை முதல்வர் கருணாநிதி இன்று நடத்தி வைத்தார்.

முதல்வரின் பேரனும், அழகிரியின் இளைய மகனுமான துரை தயாநிதிக்கும், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சீதாராமனின் மகள் அனுஷ்காவுக்கும் இன்று திருமணம் நடைபெற்றது. இதற்காக தமுக்கம் மைதானத்தில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

காலை 9.50 மணியளவில் நிதியமைச்சர் க.அன்பழகன் தலைமையில் முதல்வர் கருணாநிதி நடத்தி வைத்தார். அவர் தாலியை எடுத்துக் கொடுக்க, அதை வாங்கி அனுஷ்கா கழுத்தில் கட்டினார் தயாநிதி அழகிரி.

கோவில்களில் அன்னதானம்:

திருமணத்தையொட்டி மதுரை மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளி மாணவர்கள் பள்ளிகள், முதியோர் இல்லங்கள், ஆரவற்றோர் அமைப்புகளின் மையங்கள், கோவில்களில் இன்று அன்னதானத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சின்ன சொக்கிகுளத்தில் உள்ள காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத குழந்தைகளுக்கான பள்ளி, செனாய் நகரில் உள்ள சேவாலய பள்ளி, திருப்பாலையில் உள்ள லவ் அண்டு கேர் மையம், பைக்காராவில் உள்ள நாராயண குரு முதியோர் இல்லம், பசுமலையில் உள்ள பாரதி முதியோர் இல்லம், பரவையில் உள்ள பார்வையற்ற குழந்தைகளுக் கான பள்ளி.

நத்தம் சாலையில் உள்ள சேவா ஆசிரமம், ஆரப்பாளையத்தில் உள்ள அபோர்டு பள்ளி, கூடல் நகரில் இருக்கும் ஈமா மையம், சுந்தர்ராஜன் பட்டியில் உள்ள பார்வையற்றோருக்கான பள்ளி ஆகியவற்றில் இலவச மதிய உணவு வழங்கப்படும்.

அதேபோல கே.கே.நகரில் உள்ள என்.எம்.ஆர். ஆதரவற்றோர் பள்ளி, பசுமலை இன்பா இல்லம், கிருஷ்ணாபுரம் காலனியில் உள்ள நாகராஜ் இல்லம், கே.புதூரில் உள்ள ஆதரவற்றோர் இல்லம், அழகர்கோவில் சாலையில் உள்ள ஆக்சீலியம் ஆங்கிலப்பள்ளி, வில்லாபுரத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான பள்ளி, முத்துப்பட்டியில் உள்ள உபகார் மையம், ஆரப்பாளையத்தில் உள்ள ஆப்பிள் கிட் மையம் ஆகிய இடங்களில் உள்ள அனைவருக்கும் இலவச மதிய உணவு வழங்கப்படுகிறது.

மேலும், மீனாட்சி அம்மன் கோவில், அழகர்கோவில், திருப்பரங்குன்றம் முருகன் கோவில், ஒத்தக்கடையில் உள்ள நரசிங்கப் பெருமாள் கோவில் ஆகியவற்றிலும் பக்தர்கள் அனைவருக்கும் மதிய உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கலகலப்பான வரவேற்பு:

முன்னதாக நேற்று மாலை வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கோலாகலமாக நடந்த இந்தநிகழ்ச்சியில், முதல்வர் கருணாநிதி, ஆளுநர் பர்னாலா, நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

மாலை 6.35 மணியளவில் மணமகன் துரை தயாநிதி, மணமகள் அனுஷா ஆகியோரை கயல்விழி-வெங்கடேஷ், அஞ்சுக செல்வி-விவேக் தம்பதியினர் அழைத்துச் சென்று வரவேற்பு மேடையில் அமர வைத்தனர்.

இரவு 7.10 மணிக்கு முதல்வர் கருணாநிதி வந்தார். அவர் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்து விட்டு வரவேற்பு மேடை அருகே போடப்பட்டிருந்த நாற்காலியில் போய் அமர்ந்தார். இரவு 8 மணிக்கு கவர்னர் பர்னாலா வந்து மணமக்களை வாழ்த்தினார்.

தமிழக போலீஸ் டிஜிபி லத்திகா சரண், கூடுதல் டிஜிபி ராஜேந்திரன்,
தென்மண்டல ஐ.ஜி. கிருஷ்ணமூர்த்தி, மதுரை போலீஸ் கமிஷனர் பாலசுப்பிரமணியன், நடிகர்கள் எஸ்.எஸ்.ராஜேந்திரன், அஜீத், பாக்கியராஜ், பிரபு, அவருடைய அண்ணன் ராம்குமார், வடிவேலு, மாதவன், சூரியா, அவருடைய தம்பி கார்த்தி, சிவா, நடிகை குஷ்பு, தயாரிப்பாளர் சங்க தலைவர் ராம.நாராயணன், இயக்குனர் வெங்கட்பிரபு, இயக்குநர் பாலா, கவிஞர் பா.விஜய், இந்திய கிரிக்கெட் தேர்வு குழு தலைவர் ஸ்ரீகாந்த்,

மத்திய அமைச்சர்கள் பிரபுல் படேல், ஜி.கே.வாசன், நெப்போலியன், அனைத்து தமிழக அமைச்சர்கள் உள்ளிட்டோர் வந்திருந்தனர். இவர்கள் போக பல்துறைப் பிரமுகர்களும் வந்திருந்தனர்.

முதல்வர் குடும்பத்திலிருந்து மனைவி தயாளு அம்மாள், துணைவியார் ராஜாத்தி அம்மாள், பேரன் உதயநிதி ஸ்டாலின், மகள்கள் செல்வி, கனிமொழி, மகன்கள் மு.க.முத்து, மு.க.தமிழரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பாட்டுப் பாடிய சம்பந்திகள்:

அனைவரின் எதிர்பார்ப்பும் திருமணத்திற்கு முன்னாள் அமைச்சர் ராஜா வருவாரா என்பதில்தான் இருந்தது. இருப்பினும் முதல்வருடன் சேர்ந்து ராஜாவும் வந்திருந்தார்.

கோட், சூட்டில் படு கம்பீரமாக காணப்பட்டார் மு.க.அழகிரி. அதை விட ஆச்சரியமாக, மேடையேறி அவர் இரண்டு பாடல்களையும் பாடி அனைவரையும் வியக்க வைத்தார். இந்த பாடல்களை முதல்வர் கருணாநிதியின் விருப்பத்திற்கேற்ப பாடினார் அழகிரி. ஒரு பாடலோ சோலோவாகவும், இன்னொரு பாடலை, சம்பந்தி சீதாராமனுடன் இணைந்தும் பாடினார்.

கங்கை அமரன் குழுவினர் இசைக் கச்சேரியைக் கலக்கிக் கொண்டிருந்தபோது அழகிரியையும், சீதாராமனையும் அழைத்த முதல்வர் கருணாநிதி படித்தால் மட்டும் போதுமா படத்தில் வரும் பொன் ஒன்று கண்டேன் பாடலைப் பாடுமாறு கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து சம்பந்திகள் இருவரும் மேடையேறி மைக்கைப் பிடித்து அப்படியே பாடினார்கள். இதைப் பார்த்து முதல்வர் உள்பட அனைவரும் குஷியுடன் ரசித்தனர். அனைவரும் கரகோஷம் எழுப்பி ஆரவாரம் செய்தனர்.

பாடலை பாடி முடித்து விட்டுத் திரும்பிய அழகிரி மறுபடியும் மேடைக்கு வந்தார். இந்தமுறை தனக்கு மிகவும் பிடித்த பாடலான கண்ணெதிரே தோன்றினாள் பாடலைப் பாடி அசத்தினார். எழுதி வைக்காமல் அப்படியே அவர் பாடியதைக் கேட்டு வரவேற்புக்கு வந்திருந்தவர்களும், அழகிரி ரசிகர்களும் அசந்து போய் விட்டனர்.

இப்படியாக படு கோலாகலமாக, குஷியாக, ஜாலியாக நடந்து முடிந்தது அழகிரி மகன் திருமண வரவேற்பு.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X