For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழர்கள் கொடூரக் கொலை: சேனல் 4 வீடியோ ஆதாரங்கள் ஐ.நாவிடம் ஒப்படைப்பு-வைகோ

Google Oneindia Tamil News

சென்னை: இலங்கையில் இறுதிக் கட்டப் போரின்போது நிராயுதபாணியாக இருந்த ஏராளமான தமிழர்கள் கண்கள் கட்டப்பட்டு, நிர்வாண நிலையில் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக தன்னிடம் உள்ள வீடியோ ஆதாரங்களை இங்கிலாந்தின் சேனல் 4 தொலைக்காட்சி ஐ.நா. குழுவிடம் சமர்பித்துள்ளதாகத் தெரிகிறது.

ஈழத் தமிழர் படுகொலை குறித்தும், இலங்கை அரசின் போர்க் குற்றங்கள் குறித்தும் விசாரிக்க ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் அமைத்துள்ள மூவர் குழுவிடம் இந்த ஆதாரங்களை அந்தத் தொலைக்காட்சி அளித்துள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈழத் தமிழ் இனத்தை தன் முப்படைகளையும் ஏவி படுகொலை செய்த மகிந்த ராஜபட்ச லண்டன் மாநகரில் நட்சத்திர ஹோட்டலுக்குள்ளும் தங்க முடியாமல், வீதிக்கும் வர முடியாமல், தூதரகத்திலும் இருக்க முடியாமல், இங்கிலாந்து அரசாங்கத்திடம் கேட்டு மூடி மறைக்கப்பட்ட கவச வண்டியில் சென்றிருக்கிறார்.

லண்டனில் உறை பனி கொட்டிக் கொண்டிருந்த நிலையில் கடும் குளிரையும் பொருட்படுத்தாது 40,000க்கும் மேற்பட்ட ஈழத் தமிழர்கள் இலங்கைத் தூதரகத்தையும், ராஜபக்சே முதலில் தங்கியிருந்த ஹோட்டலையும் முற்றுகையிட்டிருக்கிறார்கள். கைகளில் புலிக் கொடிகளையும் பிரபாகரன் படத்தையும் ஏந்தியவாறு, ராஜபட்சவைக் கைது செய்! என்று என்று முழக்கமிட்டுள்ளனர்.

இதற்கு முதல்நாள் டிசம்பர் 1ம் தேதி ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகப் பேரவையில் ராஜபக்சே உரையாற்றுவதாக செய்யப்பட்ட ஏற்பாட்டினைப் பல்கலைக் கழகப் பேரவை நிர்வாகம் ரத்து செய்தது.

1823ம் வருடத்தில் தொடங்கப்பட்ட ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தின் வரலாற்றிலேயே ஒரு நாட்டின் அதிபர் பேச அழைக்கப்பட்டு, கூட்டத்தை ரத்து செய்து விட்டோம் என்று அறிவித்தது இதுவே முதல்முறை

தமிழர் நெஞ்சைப் பிளக்கும் துயரமான செய்தி நவம்பர் 30ம் தேதி இங்கிலாந்திலிருந்து ஒளிபரப்பாகும் சேனல் 4 தொலைக்காட்சியில் காட்டப்பட்டது. சிங்கள ராணுவத்தால் ஈழத் தமிழ்ப் பெண்கள் கற்பழிக்கப்பட்டு, நிர்வாண நிலையில் சுட்டுக் கொல்லப்பட்ட காட்சிகள் நம் ரத்தத்தைக் கொதிக்கச் செய்கிறது.

இலங்கையில் ராணுவத்தினரால் நடத்தப்பட்ட படுகொலைகள் குறித்து ஆய்வு செய்யும் ஐ.நா. விசாரணை அதிகாரியான பேராசிரியர் கிறிஸ்ட் ஆஃப் ஹேல்ஸ் தாங்க முடியாத அதிர்ச்சியுற்றதாகவும், இந்தக் கொடூரக் குற்றங்கள் முழுமையாக விசாரிக்கப்பட்டு முழு உண்மையும் உலகுக்குத் தெரியப்படுத்தப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இந்தக் கொடுமைக்கு உள்ளான தமிழ்ப் பெண்களில் 27 வயதான இசைப்பிரியா என்று அழைக்கப்படும் ஷோபா எனும் தமிழ்ப் பெண் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் செய்தியாளராகவும் இருந்த இந்தப் பெண் சிங்கள ராணுவத்தினரால் கற்பழிக்கப்பட்டு பின்னர் நிர்வாண நிலையிலேயே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். சிங்கள ராணுவம் தமிழ் ஈழப் பெண்களை கற்பழித்து சுட்டுத் தள்ளும் இன்னும் பல காட்சிகள் ஒளிபரப்ப முடியாத அளவுக்குக் கொடூரமானவை என சேனல் 4 நிர்வாகமே அறிவித்துள்ளது.

இதற்கு மத்தியில் உலகத்தையே பரபரப்பாக்கி வரும் விக்கிலீக்ஸ் வெளியிட்ட செய்திகளில் இலங்கை ராணுவமும், அதிகாரிகளும் போர்க் காலத்தில் நடத்தினார்கள் என்று சொல்லப்படும் குற்றங்கள் ராஜபக்சேவுக்கு சிக்கலான பிரச்சனையாகியுள்ளது.

ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் ஈழத் தமிழர் படுகொலை குறித்தும், இலங்கை அரசின் போர்க் குற்றங்கள் குறித்தும் விசாரிக்க அமைத்துள்ள மூவர் குழுவிடம் சேனல் 4 நிறுவனம் தங்களிடம் உள்ள ஆதாரங்களை அளித்துள்ளதாகத் தெரிகிறது.

லட்சக்கணக்கான ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்த ராஜபக்சேச கூட்டம் போர்க் குற்றவாளிகளாக சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.

இந்தக் போர்க் குற்றத்துக்கு இந்தியாவில் மன்மோகன் சிங் தலைமையிலான அரசு பெரிதும் உதவியிருக்கிறது என்ற குற்றச்சாட்டும் அதன் பின்னால் இன்னும் மறைந்து இருக்கும் மர்மங்களும் செய்யப்பட்ட துரோகங்களும் வெளிச்சத்திற்கு வந்தே தீரும்.

இவ்வாறு வைகோ தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

எம்பியை அடிக்க முயன்ற இலங்கை அமைச்சர்கள்:

இந் நிலையில் இலங்கை அதிபர் ராஜபக்சே ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் நிகழ்த்த இருந்த உரை ரத்து செய்யப்பட்ட விவகாரம் இன்று இலங்கை நாடாளுமன்றத்தில் எதிரொலித்தது.

இன்று அவை கூடியதும் அமைச்சர் திணேஷ், லண்டன் ஆக்ஸ்போர்டில் ராஜபக்சே நிகழ்த்தவிருந்த உரை ரத்து செய்யப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார். லண்டனில் ராஜபக்சேவுக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டத்தில் எம்.பி. ஜெயலத் ஜெயவர்த்தனாவும் கலந்து கொண்டதால் அவர் மீது உடனடியாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றார்.

மேலும் ஜெயலத்தை நோக்கி தகாத வார்த்தைகளால் திட்டினார். அதே போல பிரதமர் ஜயரட்ண உட்ளிட்ட அமைச்சர்கள், ஆளும் கட்சி எம்பிக்கள் அனைவரும் ஜெயலத்துக்கு எதிராக வக்கிரமான கோஷங்களை எழுப்பினர்.

இதற்கு ஜெயலத் பதில் அளிக்க முயன்றபோது அவருக்கு எதிராக கோஷம் அதிகரித்தது. அவரைத் தாக்க சில அமைச்சர்களும் எம்பிக்களும் ஓடினர்.

அப்போது அவைக் காவலர்கள் ஓடிவந்து தடுத்ததால் ஜெயலத் தப்பினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X