For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மாற்றுத் திறனாளிகளுக்கு 3% வேலைவாய்ப்பு வழங்கப்படவில்லை-வைகோ, விஜயகாந்த்

Google Oneindia Tamil News

சென்னை: 70 சதவீதம் உடல் நல பாதிப்புக்கு பதிலாக 50 சதவீத உடல் நல பாதிப்பு இருந்தாலே அவர்கள் மாற்றுத் திறனாளிகளாக அங்கீகரிக்கப்பட்டு அவர்களுக்கு உரிய உதவிகள் வழங்கப்பட வேண்டும் என்று தமிழக அரசுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில், மாற்றுத் திறனாளிகள் தினமான இன்று, அவர்களுக்கு ஏற்பட்ட குறைபாட்டை உணர்ந்து அவற்றை நிவர்த்திக்க நாம் பாடுபட வேண்டும்.

தமிழகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 3 சதவீதம் என்று ஆணையிருந்தும் அது அமலாக்கப்படவில்லை.

70 சதவீதம் பாதிப்புக்கு பதிலாக 50 சதவீதம் இருந்தாலே மாற்றுத் திறனாளிகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டு அவர்களுக்கு உதவிட வேண்டும்.

மன வளர்ச்சி குன்றியோருக்காக சிறப்பு பள்ளிகளை நடத்தும் கல்விக் கூடங்களில் காலமுறை ஊதியத்துடன் கூடிய சிறப்பாசியர்கள் நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படவில்லை.

மாற்றுத் திறனாளிகளுக்கு இருக்கின்ற குறைபடுகளை ஒவ்வொன்றாக களைய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் எல்லாவித உயர்வும் பெற்று வாழ எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

இன்று விஜய்காந்துக்கு அமெரிக்காவின் இறையியல் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்குவது நினைவுகூறத்தக்கது.

வைகோ கோரிக்கை:

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில், தங்கள் கோரிக்கைகள் ஏற்கப்பட்டு நிறைவேற்றப்படும் என்று காத்திருந்து காலம் உருண்டோடியதுதான் மிச்சம் என்று மீண்டும் தங்களின் உரிமைகளை வென்றெடுக்கப் போராட்டக் களத்திற்கு வந்து விட்டனர் மாற்றுத் திறனாளிகள்.

சென்னையில் இயங்கி வரும் மாற்றுத் திறனாளிகளின் சிறப்பு ஆணையர் அலுவலகம் மின் தூக்கி வசதி இல்லாமல் மூன்றாவது மாடியில்- மாற்றுத் திறனாளிகள் எளிதில் அணுக முடியாத இடத்தில் உள்ளது துரதிர்ஷ்டவசமானது.

நான்கரை ஆண்டு கால ஆட்சியில் 4 லட்சத்து எண்பதாயிரம் பணி நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீத அடிப்படையில் பணி நியமனம் செய்திருந்தால் கூட குறைந்தது 14,000 பேர் பயனடைந்து இருப்பார்கள். ஆனால், 580 மாற்றுத் திறனாளிகளுக்கு மட்டுமே வேலை வழங்கப்பட்டுள்ளது.

இருபால் மாற்றுத் திறனாளிகளைத் திருமணம் செய்து கொண்டவர்களுக்குத் திருமண உதவித் தொகையை உயர்த்தியும், அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கியும், இலவச வீடு வழங்கியும் ஊக்குவிக்க வேண்டும்.

தேசிய சுய வேலைவாய்ப்புத் திட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் கட்ட வேண்டிய 5 சதவீத பங்குத் தொகையை அரசுகளே கட்டி, சுய தொழிலை ஊக்கப்படுத்திட வேண்டும். அரசுப் பேருந்துகளில் தாழ்தள படிக்கட்டு மற்றும் கூடுதல் இருக்கைகள், பொதுக் கழிப்பிடங்களில் தனி இட வசதி வேண்டும்.

முதன் முதலாக தமிழக மாற்றுத் திறனாளிகள் மட்டுமே நடித்துள்ள பல விருதுகளைப் பெற இருக்கின்ற மா திரைப்படத்தை அரசின் சார்பில் வெளியிட்டு விருதுகளை வழங்கி ஊக்கப்படுத்திட வேண்டும். விளையாட்டுத் துறையில் சாதிக்கத் துடிக்கின்ற மாற்றுத் திறனாளிகளைத் தேர்வு செய்து அரசின் மூலம் அவர்களுக்குப் பயிற்சி வழங்கி ஊக்கப்படுத்திட வேண்டும்.

உடல் ஊனமுற்றோர் மறுவாழ்வு மக்கள் மன்றம் உருவாக்கப்பட்டு என்னுடைய தலைமையில் இயங்கி வருகிறது. அதன் மூலமாக ஆயிரக்கணக்கான மாற்றுத் திறனாளிகளுக்கு நல உதவிகளையும், தேவைப்பட்டவர்களுக்கு திருப்பதி தேவஸ்தான பாலாஜி மருத்துவமனை மூலமாக அறுவை சிகிச்சை செய்து மறுவாழ்வுப் பணிகளை மனநிறைவுடன் செய்து கொண்டு வருகிறோம்.

மத்திய- மாநில அரசுகள் காலம் தாழ்த்திடாமல் நடவடிக்கை எடுத்து, மாற்றுத் திறனாளிகளின் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்பட்டு சுயமாகவும், சுயமரியாதையோடும் அவர்கள் வாழ்ந்திட உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தில் வேண்டுகோள் விடுக்கிறேன் என்று கூறியுள்ளார் வைகோ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X