For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வெளிநாடு வாழ் தமிழர்கள் நலவாரியம்! - கருணாநிதி அறிவிப்பு

Google Oneindia Tamil News

சென்னை: வெளிநாடு வாழ் தமிழர்களுக்காக நலவாரியம் அமைக்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில மாநாடு, சென்னை தாம்பரத்தில் நேற்று நடந்தது. இதில், முதல்வர் கருணாநிதிக்கு, "நானிலம் போற்றும் நல்லிணக்க நாயகர்'' என்ற விருது வழங்கப்பட்டது.

விழாவில் முதல்வர் பேசியதாவது:

இந்த 'நானிலம் போற்றும் நல்லிணக்க நாயகர்' விருதைப் பெறும்போது, எனக்கொரு குறை. பெரியாருடைய பெரும் தொண்டன், அண்ணாவின் அருமை தம்பி நான் என்பதையும் அந்த வாழ்த்திலே எழுதியிருக்கிறார்கள். ஆனால், ஒன்றை விட்டுவிட்டார்கள். ஏன் என்று தெரியவில்லை? காயிதே மில்லத்தினுடைய அடியொற்றி நடந்தவன் நான் என்ற அந்த வாசகத்தை ஏன் விட்டு விட்டார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. ஒருவேளை தன்னுடைய இயக்கத்தைப் பற்றிச் சொன்னால், அது சுய விளம்பரமாகி விடும் என்று கருதி விட்டுவிட்டார்களோ - என்னவோ தெரியவில்லை. ஆனாலும், எனக்கு பெரிய மனக்குறை அது.

பெரியாரை, அண்ணாவை தமிழகத்திலே நினைவுபடுத்துகிற நேரத்தில் காயிதே மில்லத்தை மறந்து விட்டால் நான் நம்முடைய பேராசிரியர் பெரியவர் என்பதால் இந்த வார்த்தைகளை ஜாக்கிரதையாகச் சொல்லுகிறேன் - மன்னிக்க முடியாத குற்றம்.

இரவு வீட்டுக்குச் சென்றாலும் அவருக்கு தூக்கம் வராது. எவ்வளவு பெரிய தவறு செய்து விட்டோ ம் என்பதை நினைத்து நினைத்து மனம் உருகுவார் என்பதும் எனக்குப் புரியும். அதனால் தான் அவர் படிக்கும்போது மாத்திரமல்ல - படித்து முடித்த பிறகும்கூட - எடுத்து திரும்பத் திரும்ப பார்த்தேன். காயிதே மில்லத் பெயர் இருக்குமா; என்று. இல்லை என்பதற்காக நான் மீண்டும் என் வருத்தத்தை தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

இதற்கிடையே 'நல்லிணக்க நாயகர்' என்கின்ற பெயர் எனக்கு வைக்கப்பட்டிருக்கின்றது. பட்டங்களை அளித்தவர்கள் என்ன உள்ளத்தோடு, எத்தகைய நம்பிக்கையோடு இதை வழங்கியிருக்கிறார்கள் என்பதை எண்ணிப் பார்த்து அவர்களுடைய உள்ளமும் மகிழ்கின்ற அளவிற்கு நடந்து காட்ட விரும்புகின்றவன் நான். அப்படி நடந்து காட்டுவேன் என்பதை இந்த நேரத்திலே, இந்த மாபெரும் மாநாட்டிலே உறுதியோடு நான் சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன்.

இந்த மாநாட்டில் சில கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. அவைகளையெல்லாம் நிறைவேற்றித் தர வேண்டும் என்று பேசியவர்கள் குறிப்பிட்டார்கள். அதை நிறைவேற்றுவேன் என்ற நம்பிக்கையோடுதான் நீங்கள் இந்தத் தீர்மானங்களையெல்லாம் இன்றைக்கு எனக்கு அளித்திருக்கிறீர்கள். முதல் தீர்மானம் - சமச்சீர் கல்வியில் உருது மொழிக்கு உரிய பாதுகாப்பு வேண்டும் என்ற தீர்மானமாகும்.

நமது' மொழியான உருது மொழிக்கு பெருமை சேர்க்க அதைச் சிறப்பு செய்ய, அதற்கு உரிமைகளைப் பெற்றுத் தர எத்தகைய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமோ அவற்றையெல்லாம் இந்த அரசு அல்ல - இன்றைக்கு இந்த அரசு இருக்கலாம், நாளைக்கு வேறு அரசு வரலாம். நான் வரவேண்டுமென்பது உங்களுடைய ஆசை. 40 ஆண்டுகள் நான்தான் முதல்வராக இருப்பேன் என்று இங்கே மாநாட்டுத் தலைவர் கூட சொன்னார். நான் அதை சாபமாகத்தான் கருதுகிறேன்.

40 ஆண்டுகள் முதல்வராக இருந்து நான் இன்னும் கஷ்டப்பட வேண்டும் - படாதபாடுபட வேண்டும் என்று நம்முடைய மாநாட்டினுடைய தலைவர் அவர்கள் விரும்புகிறார் என்றால், நான் என்ன சொல்வது?

என் மீது என்ன கோபம் உங்களுக்கு? இன்னும் 40 ஆண்டு காலம் கஷ்டப்படு என்கிறீர்களே என்றால், இயலாது - இயற்கை இடம் தராது - இடம் தருகின்ற வரையிலே மட்டும் சில காலம் இருந்து இந்த மக்களுக்கு, சமுதாய மக்களுக்கு என்னலான பணிகளைத் தொடர்ந்து செய்து கொண்டேயிருப்பேன்.

தலையில் குப்பை கொட்ட தயாராக இருக்கும் அம்மையார்!

ஒரு சில அம்மையார்கள் எங்கள் தலையிலே குப்பை கொட்டத் தயாராக இருக்கிறார்கள். அப்படிக் கொட்டப்படுகிற குப்பையையெல்லாம் நாங்கள் எங்களுக்கு அளிக்கப்படுகின்ற பன்னீர்க் குளியல் என்றுதான் எண்ணிக் கொண்டிருக்கின்றோம். அதை நாங்கள் பொருட்படுத்துவதில்லை - ஏற்றுக் கொள்கிறோம்.

எங்கள் தலையிலே குப்பை கொட்டியவர்களுக்கு அறிவு புகட்டுவோமே தவிர, நாங்கள் ஆத்திரப்பட்டு, எரிச்சல்பட்டு, அவர்கள் மீது கோபப்பட்டு, கொந்தளித்து, அதன் காரணமாக அமைதி இழந்து, நல்லெண்ணத்தை பரப்புவதற்கு பதிலாக, நச்சுக் கருத்துக்களைப் பரப்புகின்ற குற்றத்திற்கு ஆளாகி விடுவோம் என்பதை நாங்கள் மிக நன்றாக உணர்ந்தவர்கள்.

எனவேதான், இங்கே சொல்லப்பட்ட இந்தக் கருத்துக்கள் - கோரிக்கை வடிவிலே வந்திருக்கிறது. அதிலே ஒரு கோரிக்கைதான் - உருது மொழிக்கு உரிய பாதுகாப்பு வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது.

பாடத்திட்டத்தில் சிறுபான்மை மொழிகள் கற்பிப்பதற்கு 4 பாடவேளைகள் ஒதுக்கீடு செய்தல்; அனைத்து மொழிப் பாடங்கள் மற்றும் சிறுபான்மை மொழி வழியில் கற்பிக்கப்படும் பாடங்களுக்கான பாடநூல்கள் தயாரித்தல்; சிறுபான்மை மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடத்துதல்; மதிப்பெண் பட்டியலில் சிறுபான்மை மொழிப் பாடங்களுக்கான மதிப்பெண் இடம் பெறச் செய்தல் - இதன்மீது உரிய நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ளும் என்ற உறுதியை இந்த மாநாட்டிலே தெரிவித்துக் கொள்கிறேன்.

வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு வாரியம்:

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏராளமானோர் வெளிநாடுகளில் பணிபுரிவதால் அவர்களின் நலனுக்காகவும், வெளிநாடுகளில் பணிபுரிகின்றபோது அங்கு அவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளில் இருந்து அவர்களை மீட்டிடவும், வெளிநாடு வாழ் தமிழர் நலனுக்காகத் தனித்துறையை ஏற்படுத்திட வேண்டும் எனும் கோரிக்கையை ஏற்கும் வகையில், மறுவாழ்வுத்துறை இயக்குநரகத்தை, "அகதிகள் மறுவாழ்வு மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்களின் நல ஆணையரகம்'' எனப் பெயர் மாற்றம் செய்திடவும், அந்த ஆணையரகத்தின் கீழ், "வெளிநாடு வாழ் தமிழர்கள் நலவாரியம்'' ஒன்றை ஏற்படுத்திடவும் இந்த அரசு முடிவு செய்துள்ளது.

வெளிநாட்டிலே இருக்கின்ற - இங்கிருந்து சென்ற தமிழர்கள் கூட அல்ல, அங்கே உள்ள தமிழர்கள் - அவர்கள் தங்களுடைய உரிமைகளுக்காகப் போராடினால், தங்களுடைய நலன்களுக்காகப் போராடினால், அவர்களுக்காக குரல் கொடுக்கக்கூடிய இயக்கமாக இருந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் - அந்த அரசின் சார்பில் நான் இங்கே சொல்லுகின்றேன் - "அகதிகள் மறுவாழ்வு மற்றும் வெளிநாடுவாழ் தமிழர்களின் நல ஆணையரகம்'' எனப் பெயர் மாற்றம் செய்திடவும், அந்த ஆணையரகத்தின்கீழ், "வெளிநாடு வாழ் தமிழர்கள் நலவாரியம்'' ஒன்றை ஏற்படுத்திடவும் இந்த அரசு முடிவு செய்யும்.

அலிகார் பல்கலைக் கழக கிளை:

உலகப் புகழ் பெற்ற அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தின் கிளைகள் மேற்கு வங்கம், கேரள மாநிலங்களில் அமைப்பதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதைப்போல, தமிழகத்திலும் அமைக்க மத்திய அரசை, தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என்று ஒரு தீர்மானம். நிச்சயமாக மத்திய அரசை இதற்காக வலியுறுத்துவோம் - வெற்றி பெறுவோம் என்பதை தெரிவிக்க விரும்பு
கிறேன்.

தமிழ்வளர்த்த முஸ்லிம் தமிழறிஞர்களைக் கண்டறிந்து அவர்களின் நூல்களை நாட்டுடைமையாக்கி, அவர்கள் மரபுரிமையர்க்குப் பரிவுத் தொகை வழங்கி வருகிறது.

இவ்வகையில் கா.மு. ஷெரிப், புலவர் முகம்மது நயினா மரைக்காயர் ஆகியோரின் மரபுரிமையர்களுக்குத் தலா 5 லட்சம் ரூபாய்; புலவர் குலாம் காதிறு நாவலரின் மரபுரிமையர்க்கு 6 லட்சம் ரூபாய்; சதாவதானி செய்குத் தம்பிப் பாவலர், மணவை முஸ்தபாவின் மரபுரிமையர்களுக்குத் தலா 10 லட்சம் ரூபாய்; டாக்டர் எஸ்.எம். கமால் அவர்களின் மரபுரிமையர்க்கு 7 லட்சம் ரூபாய் என மொத்தம் 43 லட்சம் ரூபாய் பரிவுத் தொகையாக வழங்கப்பட்டு; 6 முஸ்லிம் தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக, மேலும் கோரிக்கைகள் வரப்பெறுமாயின் அதற்கும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தாம்பரம் மேம்பாலம் சாலை விரிவாக்கம் என்ற பெயரில் அனைத்து சிறுகடைகளையும் அப்புறப்படுத்தும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இச்சிறு கடை வியாபாரிகளுக்கு ஏற்படும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு இவர்களுக்கு மாற்று இடம் வழங்குவது குறித்து தனியே பரிசீலனை செய்யப்படும்.

மதம் மற்றும் மொழி வழி சிறுபான்மையினரில் சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவினரை இனம் கண்டறிவதற்கான அளவுகோல்கள் குறித்து ஆலோசனை வழங்குதல், பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் முன்னேற்றத்திற்காக கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு உள்ளிட்ட நடவடிக்கைகளை பரிந்துரை செய்தல் - இவைகளுக்காக மிஸ்ரா கமிஷன் பத்து சதவிகிதம் கொடுக்கலாம் என்று பரிந்துரை செய்திருக்கிறது. அந்தப் பரிந்துரையை நிறைவேற்ற வேண்டிய கடமை மத்திய அரசுக்கு இருக்கிறது.

5 சதவீத இடஇதுக்கீட்டுக்கு முயற்சி:

இப்போது முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடாக தி.மு. கழக ஆட்சியில் வழங்கப்பட்டிருப்பது 3.5 சதவிகிதம். பத்து சதவிகிதத்தை மத்திய அரசு கொடுக்குமேயானால், அந்த பத்து சதவிகிதத்துக்குள் இந்த 3.5 சதவிகிதமும் இருக்கும் என்பதை உங்களுக்குச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. ஆகவே பத்து சதவிகிதத்திற்காகவும் நாம் அணி வகுப்போம். அந்த அணி வகுப்பில் வெற்றி பெற்றால் பத்துக்குள் ஐந்து கிடைக்கும், அதையும் பெற்றுக் கொள்வோம். பத்து கிடைத்தால் நாங்கள் மகிழ்ச்சி அடைவோம், பெருமை அடைவோம்.

எனவே திராவிட முன்னேற்றக் கழகமும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கும் தோழமைக் கட்சிகள். இங்கே ஒரு நண்பர் பேசியதைப் போல இடையிலே பாரதிய ஜனதா கட்சியோடு நாங்கள் கூட்டணி அமைக்க வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டபோதுகூட, மத மாச்சர்யங்கள் இல்லாத, மத பேதமில்லாத மத உணர்வில்லாத, அரசாக மத்திய அரசு அமைய வேண்டும் என்பதைத்தான் குறைந்தபட்ச கோரிக்கையாக வைத்தோம். அது, நிறைவேறி நடைமுறையில் இருந்த வரையில் நாங்கள் பாரதிய ஜனதா அரசோடு, ஒட்டிக் கொண்டிருந்தோம். அதிலேயிருந்து அவர்கள் தவறி மறுபடியும் பாபர் மசூதி இடிப்பு, மறுபடியும் மதவாதம், மறுபடியும் ஜாதி பேதம் என்ற உணர்வுகளுக்கு அவர்கள் அடிமையானபோது, "இங்கே எங்களுக்கு இனி வேலையில்லை'' என்று அன்றைக்கே வெளியே வந்துவிட்டோம். அதுதான் திராவிட முன்னேற்றக் கழகம் என்பதை அன்றைக்கு உணர்த்தினோம். இன்று வரையில் அந்த மதவாத சக்திகளுக்கு நாங்கள் இடம் தராமல், இன்று வரையில் எங்கள் உறுதியைக் காப்பாற்றி வருகிறோம்.

அப்படிக் காப்பாற்றுவதிலே நாங்கள் கொண்ட அந்தப் பிடிவாதத்தை, புரிந்து கொண்ட காரணத்தினால்தான் இன்றைக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நண்பர்கள் என் பக்கத்தில் அமர்ந்திருக்கின்ற காட்சியை நீங்கள் காணுகிறீர்கள். என்றென்றும் நிலையாக இந்த அணி இருக்கும். இந்த அணியிலே எந்தக் கட்சி வந்து சேர்ந்தாலும், பிரிந்து சென்றாலும், இந்த அணி அப்படியே ஒட்டுமொத்தமாக நிலைத்து இருக்கின்ற அணி.

எந்த இடர் வரினும் அந்த இடரை இடறி எறிந்து விட்டு தொடரும் - தொடரும் தொடரும் என்பதை எடுத்து சொல்லி, வாழ்க உங்களது ஒற்றுமை - வளர்க உங்களுடைய உள்ள உறுதி என்று கூறி விடைபெறுகிறேன்...", என்றார்.

English summary
Tamil Nadu Chief Minister M Karunanidhi declared a Welfare Board for Non Resident Tamils soon. He announced this in a meeting organised by Muslim League yesterday. Karunanidhi also assures to take efforts for 5 percent reservation for Muslims soon.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X