• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்றும் இளைஞராக கருணாநிதி என்ற இளைஞனுக்கும் துணை நிற்கும் அன்பழகன்-கருணாநிதி புகழாரம்

|

Karunanidhi and Anbalagan
சென்னை: இடையிலே எத்தனையோ நிகழ்ச்சிகள் - சம்பவங்கள் - கழகத்திலே உயர்வு தாழ்வுகள் - ஆட்சிக்கு வந்த நேரங்களும் உண்டு - ஆட்சியை இழந்து சோதனையிலே நடைபோட்ட நாட்களும் உண்டு - அத்தனையிலும் சளைக்காமல், சோர்வடையாமல் அன்று போலவே இன்றும் இளைஞராக, கருணாநிதி என்ற இளைஞனுக்கும் துணை நிற்கும் அன்பழக உடன்பிறப்பாக விளங்கி வருகிறார். நமது கழகத்திற்கு துயரங்கள், துன்பங்கள் வந்த நேரத்தில் எல்லாம் அதைப்பற்றி சிறிதும் கலங்காமல் கழக வளர்ச்சிக்குத் தூணாக விளங்கியவர்தான் நம்முடைய பேராசிரியர் அன்பழகன் என்று அவருடைய 89வது பிறந்த நாளையொட்டி முதல்வர் கருணாநிதி புகழாரம் சூட்டியுள்ளார்.

இதுகுறித்து முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:

1942-ம் ஆண்டு திருவாரூர், விஜயபுரத்தில் இஸ்லாமிய இளைஞர்கள் இணைந்து நடத்திய சிக்கந்தர் விழா ஒன்றில் கலந்துகொள்ள அண்ணா வந்திருந்தார். அண்ணாவின் பேச்சினைக் கேட்பதற்காக இளைஞனாக இருந்த நானும் சென்றிருந்தேன்.

விழாவில் மற்றவர்கள் பேசிய பிறகு, இறுதியாக அண்ணாவைப் பேசுவதற்காக அழைத்த நேரத்தில், அண்ணா எழுந்து, "நான் பேசுவதற்கு முன்பு, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலிருந்து மாணவர் ஒருவரை நான் அழைத்து வந்திருக்கிறேன், அவர் உங்கள் முன்னால் பேசுவார்'' என்ற அறிமுகத்தோடு ஒரு இளைஞரை அங்கே பேச வைத்தார். அந்த இளைஞர் தான் இன்று 89வது பிறந்த நாள் காணும் பேராசிரியர் அன்பழகனார்! முதன்முதலாக அங்கேதான் நான் அவரை சந்தித்து அறிமுகம் செய்து கொண்டேன்.

நான் 18 வயது இளைஞனாக "மாணவ நேசன்'' என்ற பெயரில் கையெழுத்து ஏடு ஒன்றினை நடத்திக் கொண்டிருந்தபோது கதர் சட்டை அணிந்த கண்ணாடிக்காரர் ஒருவர் திருவாரூரில் என்னைச் சந்தித்து "மாணவர்களை எல்லாம் ஒன்றுபடுத்தி சுதந்திரம், சமாதானம், சமத்துவம் ஆகியவைகளுக்காக அணி வகுத்துக் குரலெழுப்ப முன்வரவேண்டும். அதற்குப் பாசறையாக "மாணவர் சம்மேளனம்'' என ஒன்று தோற்றுவிக்கப்பட்டுள்ளது. அதன் அமைப்பாளராக நீங்கள் இருந்து திருவாரூர் பள்ளியில் உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும்'' என்று கேட்டுக் கொண்டார்.

அப்படி வந்தவர் ஒரு கம்யூனிஸ்ட் என்பது எனக்கு அப்போது தெரியாது. சுதந்திரம் - சமாதானம் - சமத்துவம் என்ற வார்த்தைகள் என் உள்ளத்தில் பல உணர்ச்சிகளை ஏற்படுத்தியதால், மாணவர் சம்மேளனத்தின் அமைப்பாளனாக நான் ஆனேன். அதிலே 200 உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டார்கள். ஆனால் சம்மேளனத்தின் கோஷமாக "தமிழ் வாழ்க! இந்தி வளர்க'' என்று வலியுறுத்தப்பட்டபோது நான் அதற்கு மறுத்து விட்டேன்.

உறுப்பினர்களிடமிருந்து பெற்றிருந்த 100 ரூபாயை திருப்பிக் கொடுக்க முனைந்தேன். ஒரு சிலர் அதனைப் பெற்றுக் கொண்டார்கள். பெரும்பாலோர் சம்மேளனத்தைக் கலைத்து விடலாம், கட்டணம் உன்னிடமே இருக்கட்டும் என்றனர். அன்று மாலையே "தமிழ் மாணவர் மன்றம்'' என்ற ஓர் அமைப்பை உருவாக்கி, ஏற்கனவே கட்டணத்தொகையை திரும்பப் பெற்றுக் கொள்ளாதவர்களையெல்லாம் தமிழ் மாணவர் மன்றத்தின் உறுப்பினராக ஆக்கினேன். அந்த மன்றத்தின் ஆண்டு விழா 1942ல் திருவாரூரில் சிறப்பாக நடைபெற்றது. அந்த விழாவிற்கு அழைக்கப்பட்டிருந்தவர்கள் பெரும்பாலோர் வரவில்லை.

அவர்கள் எல்லாம் வருவார்கள் என்று ஆவலோடு எதிர்பார்த்து, அவர்களை வரவேற்க திருவாரூர் புகைவண்டி நிலையத்திலே காத்திருந்தபோது, அவர்களில் பலர் வரவில்லை என்று தெரிந்து கண்களிலே நீர் பெருக கலங்கி நான் நின்று கொண்டிருந்த போதுதான் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருந்த - இன்றைய பேராசிரியர், அன்றைய மாணவர் அன்பழகனும், மதியழகனும் அங்கு வந்து எனக்கு ஆறுதல் வழங்கினார்கள்.

எனக்குத் துணையாக 1942-ல் அங்கே பேராசிரியர் வந்தபோது என்னுடைய வயது 18. அப்போது என் துணைக்கு வந்த பேராசிரியர், தற்போது எனக்கு 87 வயது நடக்கின்ற நிலையிலும், அவர் இன்று 89வது வயதில் அடியெடுத்து வைக்கின்ற நிலையிலும் எனக்குத் துணையாக இருக்கின்றார் என்பதை எண்ணும்போது இடையிலே எத்தனையோ நிகழ்ச்சிகள் - சம்பவங்கள் - கழகத்திலே உயர்வு தாழ்வுகள் - ஆட்சிக்கு வந்த நேரங்களும் உண்டு - ஆட்சியை இழந்து சோதனையிலே நடைபோட்ட நாட்களும் உண்டு - அத்தனையிலும் சளைக்காமல், சோர்வடையாமல் அன்று போலவே இன்றும் இளைஞராக, கருணாநிதி என்ற இளைஞனுக்கும் துணை நிற்கும் அன்பழக உடன்பிறப்பாக விளங்கி வருகிறார். நமது கழகத்திற்கு துயரங்கள், துன்பங்கள் வந்த நேரத்தில் எல்லாம் அதைப்பற்றி சிறிதும் கலங்காமல் கழக வளர்ச்சிக்குத் தூணாக விளங்கியவர்தான் நம்முடைய பேராசிரியர்.

மணவழகர் ஈன்றெடுத்த செல்வன் - மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை - எமை மாட்ட நினைக்கும் சிறைச்சாலை எனக்கூறி மாத்தமிழ் காக்கும் அரிமா - பெரியாரின் பெரும் தொண்டர் - அண்ணாவின் அன்புத்தம்பி - எனது உயிரனைய உடன்பிறப்புதான் இனமானப் பேராசிரியர்.

இந்த வயதிலும் நிமிர்ந்த நடை, நேர்கொண்ட பார்வை, நிதானமான போக்கு, நேர்மையான சிந்தனை, தன் மனதில்பட்ட கருத்தை மறைக்காது எடுத்துரைக்கும் திறந்த நெஞ்சம், ஆபத்து தமிழுக்கோ, தமிழ் இனத்துக்கோ என்றால் அனலாகக் கொதிக்கின்ற உள்ளம், எதிர்த்தரப்பினரை சுழற்றி அடிக்கும் வாள் வீச்சென வாயிலிருந்து பிறக்கும் "சுளீர்! சுளீர்!'' என்ற வார்த்தைகள் பேராசிரியருக்கே சொந்தமானவை! உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசத் தெரியாதவர் பேராசிரியர். சாதி மத பேதங்களில் சிக்கித்தவித்த இந்தச் சமுதாயத்தை தலைநிமிரச் செய்ய வேண்டுமென்பதற்காக அவரது பேச்சும், எழுத்தும் பயன்பட்டது என்றால் அது மிகையல்ல.

ஈழத் தமிழர்களுக்காக என்னுடன் சேர்ந்து தனது சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போரில் கலந்து கொண்டார் என்பதற்காக இவருடைய சட்டப் பேரவை உறுப்பினர் பதவியே அ.தி.மு.க. ஆட்சியில் பறிக்கப்பட்ட வரலாற்றுக்கு இவர் சொந்தக்காரர்.

ஒரு பெரும் இயக்கத்திற்குப் பொதுச் செயலாளர் - தமிழகத்தின் நிதி அமைச்சர் என்றெல்லாம் பாராது எளிமையான பொது வாழ்வினை இன்றளவும் நடத்தி வருபவர்.

"நன்றாண்ட மூவேந்தர் நாகரிக மேமாற்றி வென்றாண்ட ஆரியத்தை வென்றாளத் தோன்றியவர் குன்றா மறவக் குரிசிலார் அன்பழகர் என்றோழர் என்னல் எனக்குப் பெருமையதே'' என்று பாவேந்தர் பாரதிதாசனாரும், "சாதி சமய வேற்றுமைகளைக் களைந்து தமிழ் மக்கள் அனைவரும் ஒரு குலத்தாராக வாழ்தல் வேண்டும் என்னும் உயர்ந்த குறிக்கோள் பேராசிரியர் அன்பழகனாரின் இளமைப் பருவத்திலேயே நன்கு வேரூன்றியிருந்தது'' என்று பேராசிரியர் க.வெள்ளை வாரணனாரும்'', "உலகக் கடல்களெல்லாம் ஓரிடஞ் சேர்ந்தாலும் ஒப்பாகா என்று சொல்லக்கூடிய அத்துணைத் தமிழன்பு மிக்கவர் அன்பழகனார்'' என்று முனைவர் வ.சுப.மாணிக்கனார், "மாணவப் பருவத்தில் விரும்பி ஏற்றுக்கொண்ட பகுத்தறிவுப் போக்கினை சமத்துவச் சிந்தனையை, தமிழ்ப் பற்றினை இன்றும் சிறிதும் நழுவவிடாமல் அரும்பாடுபட்டு வரும் சிலரில் பேராசிரியர் அன்பழகனாரும் ஒருவர்'' என்று நெ.து.சுந்தரவடிவேலுவும் பேராசிரியரை மனமாரப் பாராட்டியிருக்கிறார்.

தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தைக் கண்டு, தமிழர் நலம் காக்கப் பாடுபட்டு உழைத்த திராவிட இயக்க முன்னோடிகளாம் பெரியார், அண்ணா, டி.எம்.நாயர், டாக்டர் நடேசனார், தியாகராயர், பனகல் அரசர் போன்ற கொள்கைத் தங்கங்களை இன்றைக்கும் மேடைகளிலே நினைவுபடுத்திப் பேசிக் கொண்டிருக்கும் கொள்கைக் கோமான் தான் நம்முடைய பேராசிரியர். பேராசிரியருக்கும் கோபம் வரும். உதாரணமாக சாதியைப் பற்றி பேசப்பட்டபோது, "நாமெல்லாம் திராவிடர்கள், நாமெல்லாம் தமிழர்கள் என்று திரும்பத்திரும்ப ஏன் சொல்கிறோம் என்றால், நம்மிலே ஏற்றத்தாழ்வு கிடையாது. இருப்பதாகச் சொல்லுபவன் ஏமாற்றுவதற்காகச் சொல்பவன். நால்வகைச் சாதி என்று சொன்னவன் பித்தலாட்டக்காரன்'' என்று கடுமையாகக் கூறினார்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அண்ணா கண்டெடுத்த கொள்கை முத்துக்களில் ஒன்றே பேராசிரியர் அன்பழகன். அவருடைய கருத்தழகும், கனிவான சொல்லழகும், தமிழ்க் கட்டழகும் மேடையில் கண்டு மகிழ்ந்திருக்கிறோம் பலமுறை. பேராசிரியரைப் பற்றி ஒருமுறை நான் கூறும்போது, "நான் மக்களுக்காக எழுதுகிறேன், பேராசிரியர் அன்பழகனோ என் போன்றோருக்காக எழுதுகிறார்'' என்று சொன்னேன். அத்தகைய அறிவும் ஆற்றலும் அனுபவமும் உள்ளவர் பேராசிரியர்.

பேராசிரியர் அன்பழகனார் தற்போது இந்தக் கழகத்தைக் கட்டிக்காக்கின்ற பெருந்தலைவர்களில் ஒருவராக இருக்கிறார். அவருடைய 89-வது பிறந்த நாள் தமிழுக்கு முடி சூட்டுகின்ற நாள் - தன்மான உணர்வுக்கு மகுடம் புனைகின்ற நாள் - திராவிட இனப் பெருங்குடி மக்கள் மட்டுமல்ல - உலகமெங்கும் வாழ்கின்ற தமிழர்கள் ஒவ்வொருவரும் தமிழர்களின் உரிமைக்காகப் போராடுவோம் என்று சூளுரைக்கின்ற நாள் இந்த நாள் என்று கூறி - மேலும் பல்லாண்டுகள் பேராசிரியப் பெருந்தகை நல்ல உடல்நலத்தோடு வாழ்ந்து கழகத்தின் வளர்ச்சிக்கும், தமிழர்களின் மேன்மைக்கும் தொடர்ந்து பாடுபட வேண்டுமென்று வாழ்த்துகின்றேன், போற்றுகின்றேன். வயதில் ஈராண்டு இளையோன்; அதனால் வணங்குகிறேன் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
Minister Anbalagan turns 89. CM Karunanidhi has hailed Anbalagan as a brave leader. In a statement Karunanidhi has elaborated his friendship with Anbalagan from the beginning and reminded his importance to the dravidian movement.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more