For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆஸி.யில் தீவிரவாத குற்றச்சாட்டில் கைதான ஹனீப்புக்கு 10 லட்சம் டாலர் இழப்பீடு

Google Oneindia Tamil News

Dr Mohammed Haneef
மெல்போர்ன்: ஆஸ்திரேலிய அரசு தன்னை தீவிரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்து, சட்டவிரோதமாக சிறையில் அடைத்ததை எதிர்த்து அங்குள்ள கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்த இந்திய டாக்டர் முகம்மது ஹனீப், தற்போது ஆஸ்திரேலிய அரசுடன் சமரசமாகப் போக ஒப்புக் கொண்டுள்ளார். அவருக்கு பெரும் தொகையை இழப்பீடாக வழங்க ஆஸ்திரேலியா முன்வந்துள்ளதைத் தொடர்ந்து இதுதொடர்பாக உடன்பாடு ஏற்பட்டது.

ஹனீப்புக்கு ஆஸ்திரேலிய அரசு 10 லட்சம் டாலர் இழப்பீடுத் தொகையை வழங்கும் என்று தெரிகிறது.

பெங்களூரைச் சேர்ந்தவர் முகம்மது ஹனீப். டாக்டரான இவர் ஆஸ்திரேலியாவில் பணியாற்றி வந்தார். கடந்த 2007ம் ஆண்டு இங்கிலாந்தின் கிளாஸ்கோ நகரில் குண்டுவெடிப்பு நடந்தது. இந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. இதுதொடர்பான விசாரணையின்போது, டாக்டர் ஹனீப்பை ஆஸ்திரேலிய காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவருக்கும், கிளாஸ்கோ சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கும் தொடர்புடையதாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்தக் கைது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் ஹனீப்புக்கு எதிரான எந்த ஆதாரமும் ஆஸ்திரேலியாவுக்குக் கிடைக்கவில்லை. மேலும் அவர் மீது தவறான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதும் அம்பலமானது. இதையடுத்து ஆஸ்திரேலிய அரசுக்கு பெரும் அவமானமும், தர்மசங்கடமும் ஏற்பட்டது. இதையடுத்து ஹனீப் விடுவிக்கப்பட்டார்.

இதைத் தொடர்ந்து ஹனீப் நாடு திரும்பி விட்டார். ஆனால் தனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி, தவறான வழக்கில் கைது செய்து, தனது வாழ்க்கையையும், வேலையையும் கெடுத்த ஆஸ்திரேலிய அரசுக்கு எதிராக, அந்த நாட்டின் முன்னாள் குடியேற்றத் துறை அமைச்சர் கெவின் ஆண்ட்ரூஸ் மீது வழக்கு தொடர்ந்தார். இந்த நிலையில் தற்போது ஆஸ்திரேலிய அரசுக்கும், ஹனீப்புக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

இதற்காக கடந்த வாரம் ஆஸ்திரேலியா வந்தார் ஹனீப். 10 நாள் விடுமுறையில் வந்த ஹனீப், ஆஸ்திரேலிய தரப்புடன் தனது வக்கீல்கள் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாடு கண்டுள்ளார்.

இதுகுறித்து ஹனீப் கூறுகையில், இந்த உடன்பாடு எனது வேலையை திரும்பப் பெறும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. எனது கெளரவமும் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. மீண்டும் ஆஸ்திரேலியா திரும்புவது குறித்து பரிசீலிக்கவுள்ளேன் என்றார். ஹனீப்புடன் அவரது மனைவி பிர்தோஸ் மற்றும் 3 வயது மகள் ஹனியா ஆகியோரும் வந்துள்ளனர். ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட கசப்பான அனுபவத்திற்குப் பிறகு நாடு திரும்பிய ஹனீப் தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹனீப் தொடர்ந்து கூறுகையில், இந்த பிரச்சினை இத்துடன் முடிவுக்கு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. தவறான குற்றச்சாட்டின் பேரில் நான் கைது செய்யப்பட்டது எனக்கு பெரும் வேதனையான அனுபவத்தைக் கொடுத்தது. இன்று ஏற்பட்டுள்ள உடன்பாடு எனக்கு பெரும் நிம்மதியைக் கொடுத்துள்ளது. எனது குடும்பத்தினருடன் இனி நிம்மதியான வாழ்வைத் தொடர்வேன்.

விரைவில் ஆஸ்திரேலியாவுக்குத் திரும்புவோம் என்று கருதுகிறேன். அதுகுறித்து பரிசீலிக்கவுள்ளேன். ஏற்கனவே வேலை பார்த்து வந்த கோல்ட் கோஸ்ட் மருத்துவமனையில் மீண்டும் சேரும் வாய்ப்புகளை மறுக்க முடியாது. இதுகுறித்து எனது குடும்பத்தினருடன் விவாதித்த பின்னரே முடிவெடுப்பேன் என்றார்.

ஹனீப்புக்கு எவ்வளவு தொகை கிடைக்கும் என்பது குறித்து அவரது வக்கீல்கள் தெரிவிக்க மறுத்து விட்டனர். ஆனால் அவருக்கு கணிசமான தொகை கிடைக்கும் என்று மட்டும் தெரிவித்தனர். இருப்பினும் ஹனீப்புக்கு 10 லட்சம் அமெரிக்க டாலர்கள் இழப்பீட்டுத் தொகை கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

பிரிஸ்பேனில் அரசுத் தரப்புடன் கடந்த 2 நாட்களாக இறுதிக் கட்ட நஷ்ட ஈடு பேச்சுவார்த்தையில் ஹனீப்பும் அவரது வக்கீல்களும் ஈடுபட்டிருந்தனர். அது இன்று சமரசமாக முடிந்துள்ளது. இதையடுத்து முன்னாள் குடியேற்றத் துறை அமைச்சர் கெவின் ஆண்ட்ரூஸ் மீது ஹனீப் தொடர்ந்த வழக்கு கைவிடப்படுகிறது.

மன உளைச்சல், வேலை பறிபோனது, வருமானம் பாதிக்கப்பட்டது, கெளரவம் பாதிக்கப்பட்டது உள்ளிட்டவற்றுக்காக தற்போது ஹனீப்புக்கு இழப்பீடு தரப்படவுள்ளது. ஆஸ்திரேலிய சட்ட வரலாற்றில் இப்படி ஒரு இழப்பீடு விவகாரம் இதுவரை நடந்ததே இல்லை என்று ஹனீப்பின் வக்கீல்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் நீதிபதி டோனி பிட்ஜெரால்ட் முன்னிலையில் இந்த இழப்பீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடந்து வந்தன.

கிளாஸ்கோ விமான நிலையத்தைத் தாக்கி தகர்க்க கடந்த 2007ம் ஆண்டு முயற்சி நடந்தது. இதில் ஈடுபட்டவர்களில் இருவர் கபீல் அகமது, சபீல் அகமது. இவர்களது ஒன்று விட்ட சகோதரர்தான் முகம்மது ஹனீப். மேலும், அகமது சகோதரர்களுக்கு ஹனீப் உதவியதாக ஆஸ்திரேலியா குற்றம் சாட்டியது. இதற்கு முக்கியக் காரணம், இங்கிலாந்து சென்றிருந்த ஹனீப், அகமது சகோதரர்களைப் பார்த்துப் பேசினார். அப்போது தவறுதலாக தனது சிம் கார்டை அவர்களிடம் விட்டு விட்டு வந்து விட்டார். இதையடுத்தே ஹனீப் மீது தீவிரவாத பிரிவில் வழக்கு தொடர்ந்தது ஆஸ்திரேலிய அரசு.

அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். அங்கு தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார் ஹனீப். ஆனால் அவர் மீது கோர்ட்டில் குற்றச்சாட்டு எதையும் பதிவு செய்யவில்லை. காரணம், அதற்குரிய ஆதாரம் எதுவும் கிடைக்காததால். இதனால் விசாரணை மற்றும் குற்றம் சாட்டப்படாமல் நீண்ட காலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் ஹனீப். இதனால் இந்தியாவிலும், ஆஸ்திரேலியாவிலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஹனீப்புக்கு ஆதரவாக குரல்கள் எழுந்தன.

இதையடுத்து அவர் மீதான வழக்கை வாபஸ் பெற்ற ஆஸ்திரேலியா அரசு அவரை விடுவித்தது. மேலும் இதுதொடர்பாக நடந்த சுயேச்சையான விசாரணையிலும் ஹனீப் விடுவிக்கப்பட்டார். அவரது பாஸ்போர்ட் 2007ம் ஆண்டு ஜூலை 29ம் தேதி திருப்பிக் கொடுக்கப்பட்டது. அதன் பின்னர் அவர் நாடு திரும்பினார்.

English summary
Indian doctor Mohammad Haneef has struck a deal with the Australian government for receiving a "substantial" compensation for his wrongful detention, three years after the traumatic experience which he said had a serious impact on his life and career. Haneef, who was detained after being wrongly accused of having links to the failed Glasglow bombing attempt in 2007, returned to Australia last week to settle his compensation claim. The 31-year-old doctor said the settlement would help him re-establish his career and reputation and stated that he would consider returning to the country.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X