For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காங்-அதிமுக கூட்டணிக்கு வாய்ப்பு: இளங்கோவன்

By Chakra
Google Oneindia Tamil News

கோபிச்செட்டிப்பாளையம்: வரும் சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ்- அதிமுக கூட்டணி ஏற்பட வாய்ப்புள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.

காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அவர், ராகுல் காந்தி தமிழகம் வந்து சென்ற 15 நாட்களில் நல்ல வழி பிறக்கும்.
ராகுல் காந்தி படியேறிச்சென்று யாரையும் சந்திக்க மாட்டார் என்றார்.

பின்னர் நிருபர்களிடம் பேசுகையில், திமுக கூட்டணியில் இருப்பது நல்லதல்ல என்பதை காங்கிரஸ் தலைவர் அன்னை சோனியாவிடம் தெரிவித்திருக்கிறோம். தமிழகத்தை ஆளுபவர்கள் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கின்றனர்.
தை பிறந்தால் வழி பிறக்கும். திமுகவுடன் கூட்டணி முறியும் காலகட்டத்தில், திமுகவைத் தவிர்த்து மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைக்கவும் வாய்ப்பு உள்ளது. அதிமுகவுடன் கூட்டணி அமைக்கவும் வாய்ப்புண்டு.

ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ராசா வீட்டில் சோதனை நடந்துள்ளது. இப்போது விசாரணையும் நடைபெற்று வருகிறது. திமுக மீது பொதுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் ராசாவுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. விரைவில், அவர் சிபிஐ முன் ஆஜராக வேண்டும். விசாரணைக்கு பிறகு சரியான தகவல் கிடைக்கவில்லை என்றால் ராசா கைது செய்யப்பட்டாலும் ஆச்சர்யமில்லை.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முதல்வர்கள், அமைச்சர்கள் மீது ஊழல் புகார் கூறப்பட்டால், அவர்கள் மீது கட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. திமுகவில் அந்த பழக்கம் கிடையாது. கேட்டால் சுயமரியாதைக்காரன் என சொல்லிக் கொள்வர்கள்.

கலைஞர் இலவச வீடு வழங்கும் திட்டத்தால், இப்போது மணலை கிலோ கணக்கிலும், செங்கல்லை எண்ணிக்கை அடிப்படையிலும் விற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆளும் கட்சியுடன் தொடர்புள்ளவர்கள் ரேஷன் அரிசியை பாலீஷ் செய்து மற்ற மாநிலங்களுக்குக் கடத்தி வருகின்றனர்.

எனது பிறந்த நாளையொட்டி தேமுதிக தலைவர் விஜயகாந்த், அதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிப் பிரமுகர்கள் வாழ்த்துத் தெரிவித்தனர். ஆனால் திமுக தரப்பில் இருந்து யாரும் வாழ்த்தவில்லை, அதை நான் எதிர்பார்க்கவும் இல்லை.

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில், கோபிசெட்டிபாளையத்தில் போட்டியிட காங்கிரஸ் மேலிடம் வாய்ப்பளித்தால் போட்டியிடுவேன் என்றார்.

கூட்டணி-காங்கிரஸ் மவுனம்:

இந் நிலையில் தமிழகம், மேற்கு வங்கம், கேரளம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் விரைவில் சட்டசபைத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், சமீபத்தில் நடந்து முடிந்த காங்கிரஸ் கட்சியின் மாநாட்டில், கூட்டணி குறித்து எந்தத் தீர்மானமும் நிறைவேற்றாமல் காங்கிரஸ் தலைமை மெளனம் சாதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பல்வேறு அரசியல் விஷயங்கள் குறித்து தீர்மானம் நிறைவேற்றிய காங்கிரஸ் தலைமை, கூட்டணி குறித்து எந்த தீர்மானமும் நிறைவேற்றவில்லை.

மாநாட்டில் பேசிய கட்சியின் தலைவர் சோனியா காந்தி, நாம் கூட்டணியில் இருக்கும் மாநிலங்கள் உட்பட அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸை பலப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X