For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தொடர்ந்து இலவசங்களை வழங்கிக் கொண்டேதான் இருப்போம்-கருணாநிதி

Google Oneindia Tamil News

சென்னை: இந்த ஆட்சியில் எல்லாமே இலவசம்தான் என்று சில பத்திரிகைகள் கேலி, கிண்டல் செய்கிறார்கள். ஆனால் அவர்களே இலவச இணைப்பு வெளியிட்டு பொருளாதாரத்தை பெருக்கிக் கொள்கிறார்கள். அவர்கள் இலவசங்களை எதிர்க்கவில்லை. அதை கொடுக்கின்ற நம்மைத்தான் எதிர்க்கின்றனர். திமுகவை பொறுத்தவரை தமிழ்நாட்டில் ஏழைகள் உள்ளவரை அவர்களுக்கு தேவையான இலவசங்களை தொடர்ந்து வழங்கிக்கொண்டுதான் இருப்போம் என்றார் முதல்வர் கருணாநிதி.

பொங்கல் பண்டிகையையொட்டி ரேஷன்கார்டுதாரர்களுக்கு பொங்கல் பொருட்கள் அடங்கிய பையை தமிழக அரசு இலவசமாக வழங்குகிறது. இத்திட்டத்தையும், ஏழைகளுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தையும் முதல்வர் கருணாநிதி நேற்று சென்னை பல்லாவரத்தில் நடந்த நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதி பேசுகையில்,

தமிழர்களின் மொழியையும், கலையையும் பாதுகாக்க இனிய நாளாம் பொங்கல் திருநாளை நாம் கொண்டாடி மகிழ்கிறோம். நமக்கு முந்தைய இன உணர்வாளர்கள் பொங்கல் திருநாளை கொண்டாடியது போல நாமும் இப்போது கொண்டாடுகிறோம்.

மறைமலையடிகள், திருவிக, சோமசுந்தர பாரதியார் போன்ற தமிழ்ச் சான்றோரும், ஆன்றோரும் ஒன்று கூடி தமிழர்களான நமக்கு தனி ஆண்டு வேண்டும் என்று முடிவெடுத்து மாமல்லபுரத்தில் 500 பெரும் புலவர்கள் கலந்துகொண்ட ஆய்வுக்கூட்டத்தை நடத்தி அதில் தை முதல் நாளை தமிழர்களின் ஆண்டு பிறந்தநாளாக முடிவு செய்து அறிவித்தார்கள்.

ஏற்கனவே 60 ஆண்டுகளை கொண்ட ஆண்டை தமிழ் வருடப் பிறப்பாக கொண்டாடி வந்தார்கள். இதில் குழப்பம் நிலவியதால் தமிழ்ச் சான்றோர்கள் இந்த மாற்றத்தை செய்தனர்.

வரும் தை திங்கள் முதல் நாளான புத்தாண்டு தினத்தில் ஒவ்வொரு தமிழரின் வீட்டிலும் விளக்கேற்றி கொண்டாட வேண்டும். வணிக நிறுவனங்கள் சர விளக்குகளை தொங்க விட வேண்டும். அனைவரும் தமிழர் என்ற உணர்வோடு தமிழர் திருநாளை கொண்டாடி மகிழ வேண்டும்.

ஏழை, எளிய மக்கள் பொங்கல் திருநாள்போன்ற விழாக்களை கொண்டாட முடியாத நிலை உள்ளதால் அனைவரும் தமிழர் திருநாளை கொண்டாடி மகிழ பச்சரிசி அரைகிலோ, வெல்லம் அரைகிலோ பாசிப் பருப்பு 100 கிராம், முந்திரி, திராட்சை, ஏலம் 20 கிராம் என இலவசமாக பொங்கல் பொருட்கள் வழங்கப்படுகிறது.

இந்த ஆட்சியில் எல்லாமே இலவசம்தான் என்று சில பத்திரிகைகள் கேலி, கிண்டல் செய்கிறார்கள். ஆனால் அவர்களே இலவச இணைப்பு வெளியிட்டு பொருளாதாரத்தை பெருக்கிக்கொள்கிறார்கள். அவர்கள் இலவசங்களை எதிர்க்கவில்லை. அதை கொடுக்கின்ற நம்மைத்தான் எதிர்க்கின்றனர். திமுகவை பொறுத்தவரை தமிழ்நாட்டில் ஏழைகள் உள்ளவரை அவர்களுக்கு தேவையான இலவசங்களை தொடர்ந்து வழங்கிக்கொண்டுதான் இருப்போம்.

இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டத்தால் 11 ஆயிரம் கைத்தறி நெசவாளர்களும், 40 ஆயிரம் விசைத்தறி நெசவாளர்களும் பயன்பெற்றுள்ளனர். 3 கோடியே 17 லட்சம் பேருக்கு இலவச வேட்டி சேலை வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் அரசுக்கு 256 கோடி ரூபாய் கூடுதலாக செலவு ஏற்பட்டுள்ளது,

இந்த விழாவில் பேசிய சட்டமன்ற காங்கிரஸ் துணைத் தலைவர் யசோதா, ஏழை எளிய மக்களுக்காக இந்த அரசு செயல்படுத்திய திட்டங்களை அடுக்கி ஆணித்தரமான கருத்துக்களை எடுத்துக் கூறினார். அந்த அடிப்படையில் ஒரு கோடியே 59 லட்சம் பேருக்கு இலவச சேலைகளும், ஒரு கோடியே 58 பேருக்கு இலவச வேட்டிகளும், 256 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படுகின்றன.

இந்த திட்டத்தின் வாயிலாக 3 கோடியே 17 லட்சம் பேர் பயன் அடைவதுடன் 11,000 கைத்தறி நெசவாளர்களும் 40 ஆயிரம் விசைத்தறி நெசவாளர்களும் பயன் அடைகின்றனர். எல்லோருக்கும் எல்லாமும் கிடைத்திட வேண்டும் என்ற நோக்கத்தில் திமுக அரசு பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. நாட்டில் ஏழைகள் இருக்கும்வரை இது போன்ற இலவச திட்டங்கள் தொடரும். இந்த திட்டங்களை செயல்படுத்த திமுக ஆட்சியும் தொடர வேண்டும் என்றார் கருணாநிதி.

பொங்கல் பையில் என்ன இருக்கு?

தமிழக அரசு வழங்கியுள்ள பொங்கல் பையில், அரை கிலோ பச்சரிசி, அரை கிலோ வெல்லம், பாசிப் பருப்பு 100 கிராம், முந்திரி10 கிராம், திராட்சை, ஏலம் தலா 5 கிராம் ஆகியவை இடம் பெற்றுள்ளன. சர்க்கரைப் பொங்கல் வைக்கத் தேவையான பொருட்கள் இவை என்பது குறிப்பிடத்தகது.

ஜனவரி 15ம் தேதி வரை இவற்றைப் பெற்றுக் கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது. கூட்ட நெரிசல் ஏற்படுவதைத் தடுக்க ஒரு நாளைக்கு 150 கார்டுகளுக்கு இவற்றை வழங்குமாறும் ரேஷன் கடைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

English summary
TN govt welcomed the New year with the distribution of free Pongal bags and free dhotis and sarees. CM launched both the schemes in Pallavaram, Chennai yesterday. Each pongal bag contains half-a-kg each of raw rice and jaggery, green dal 100 gram, cashew 10 gram and five gram each of raisins and cardamom. These are ingredients used to make 'chakkarai pongal'. The pongal bags will be distributed to 1.94 crore ration card holders while the sarees and 'dhothis' will be given to all the poor.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X