For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மக்கள் மீது வரிச்சுமையை ஏற்படுத்தாமல் கருணாநிதி கவனமாக இருக்கிறார்-அன்பழகன்

Google Oneindia Tamil News

Anbalagan
சென்னை: தமிழக சட்டசபையில் இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்து பேசிய நிதியமைச்சர் அன்பழகன், கடந்த ஐந்தாண்டுகளில் பல திட்டங்களை இந்த அரசு புதிதாக அறிவித்து செயல்படுத்தி வந்தாலும் மக்களுக்குக் கூடுதல் வரிச்சுமை எதையும் ஏற்படுத்தி விடாமல் முதல்வர் கலைஞர் தலைமையிலான இந்த அரசு கவனமாக செயல்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

தமிழக சட்டசபையில் இன்று இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்து நிதியமைச்சர் அன்பழகன் பேசியதாவது:

2011-2012-ம் ஆண்டுக்கான முன்னளி மானிய அனுமதி கோரி இந்த இடைக்கால வரவு- செலவுத் திட்ட அறிக்கை இந்தப் பேரவையின் முன் வைக்கப்படுகிறது. இதனால் புதிய திட்டங்கள் பற்றிய அறிவிப்புகள் இல்லை என்றாலும், ஏற்கனவே அறிவித்து செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்களை கருத்தில் கொண்டு இந்த இடைக்கால நிதி நிலை அறிக்கை வகுக்கப்பட்டு உள்ளது.

வலுவான பொருளாதார வளர்ச்சி:

வருகிற சட்டசபைத் தேர்தலுக்குப் பின் புதிய சட்டசபை அமைக்கப்பட்டு ஆண்டின் முழுமையான வரவு- செலவு திட்டம் தாக்கல் செய்யப்படும். மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி வலுவான நிலையில் உள்ளது. உலக அளவில் ஏற்பட்ட பொருளாதார தேக்க நிலையின் காரணமாகத் தொழில் மற்றும் சேவைத்துறை ஆகியவற்றின் வளர்ச்சியும் வெகுவாகக் குறைந்தது.

2010-2011 ஆம் ஆண்டில் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி 10 சதவீதத்திற்கும் கூடுதலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2007-2008 ஆம் ஆண்டிலிருந்த உலகப் பொருளாதார மந்த நிலையின் காரணமாக, இந்தியாவில் பொருளாதாரத் தேக்கநிலை ஏற்பட்டு, அரசின் வரி வருவாய் குறைந்ததால், 2008-2009 ஆம் ஆண்டில் வருவாய் உபரி ரூபாய் 1,452 கோடியாக குறைந்தது.

உபரி வருவாய் இருக்கும் :

நடப்பு ஆண்டில் ரூபாய் 3 ஆயிரத்து 129 கோடி என்ற அளவில் வருவாய்ப் பற்றாக்குறை இருந்தாலும், 2011-2012 ஆம் ஆண்டில் மத்திய நிதிக்குழு வரையறுத்துள்ளவாறு தமிழ்நாட்டின் வருவாய் பற்றாக்குறை முழுவதும் நீக்கப்பட்டு, வருவாய் உபரி ரூபாய் 439 கோடியாக இருக்கும்.

சட்டப் பேரவை தேர்தலுக்குப் பின் 2011-2012 ஆம் ஆண்டுக்கான திட்ட ஒதுக்கீடு, மத்திய திட்டக் குழுவுடன் கலந்தாலோசிக்கப்பட்டு முடிவு செய்யப்படும் என்ற போதிலும், 2011-2012 ஆம் ஆண்டிற்கான இடைக்கால வரவு- செலவுத் திட்டப்படி உத்தேச ஒதுக்கீடான ரூபாய் 22,000 கோடியையும் சேர்த்து பதினோராவது ஐந்தாண்டுத் திட்ட காலத்தில், தமிழ்நாடு எய்த உள்ள திட்ட ஒதுக்கீடு ரூ. 90,403 கோடியாக இருக்கும்.

எனவே பதினோராவது ஐந்தாண்டுத் திட்ட காலத்தில், திட்டப் பணிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட ரூ. 5,059 கோடி கூடுதலாக நிதி ஒதுக்கியுள்ளோம். 2010-2011 ஆம் ஆண்டு வரவு- செலவு திட்ட மதிப்பீட்டில் மூலதனச் செலவு திட்டங்களுக்கு, முன் எப்போதும் இல்லாத அளவாக ரூ. 13,575 கோடி நிதி உயர்த்தி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2001-2002 முதல் 2005-2006 ஆம் ஆண்டு வரை செய்யப்பட்ட மூலதனச் செலவு ரு. 15,614 கோடியாகும். ஆனால், இந்த அரசு பொறுப்பேற்றபின் 2006-2007 முதல் 2010-2011 ஆம் ஆண்டு வரை ரூ. 44,667 கோடி மூலதனப் பணிகளுக்கு ஒதுக்கீடு செய்துள்ளது.

மழையால் பெருத்த பயிர்ச்சேதம்:

நடப்பாண்டில் வட கிழக்குப் பருவமழையினால் கடலோர மாவட்டங்களில், பெருத்த பயிர்ச் சேதமும், பொருட்சேதமும் ஏற்பட்டன. இந்த அரசு உடனடி வெள்ள நிவாரணத்திற்காக ரூபாய் 600 கோடி நிதி ஒதுக்கீடு செய்து நிவாரணப் பணிகளை விரைவாக மேற்கொண்டது.

உயிர்ச் சேதத்திற்கும், பயிர்ச் சேதத்திற்கும், சேதமடைந்த வீடுகளுக்கும் ஏற்கனவே இருந்த நிவாரணத் தொகையின் அளவைக் கணிசமாக உயர்த்தி வழங்கியுள்ளது. நிரந்தர நிவாரணப் பணிகளுக்காக ரூபாய் 500 கோடி அனுமதிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஜாதி, சமயப் பூசல் இல்லை:

தமிழகத்தில் கடந்த ஐந்தாண்டுகளில் சாதிப் பூசல்களோ, மதப்பூசல்களோ, பயங்கரவாதமோ, நக்சலைட் தீவிரவாதமோ தலையெடுக்கா வண்ணம் இந்த அரசு விழிப்புடன் இருந்து செயல்பட்டு வருகிறது. சென்னை மாநகரக் காவல் துறையின் பணிச் சுமையைக் குறைக்கவும், காவல் பணியைச் செம்மை யாக்கவும், சென்னை புறநகர் காவல் ஆணையரகம் 2008 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் இரண்டு புதிய காவல் மாவட்டங்கள், 76 காவல் நிலையங்கள் மற்றும் 56 போக்குவரத்து காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் 24,415 இரண்டாம் நிலைக் காவலர்களும், 2,048 உதவி ஆய்வாளர்களும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தை தீவிரவாதத்திலிருந்து காத்திட, ஒவ்வொரு மாவட்டத்திலும் விரைவு பதிலடிக் குழுக்கள் நிறுவப்பட்டுள்ளன. காவல் துறைக்காக 2001-2002 ஆம் ஆண்டு முதல் 2005-2006 ஆம் ஆண்டு வரை ரூபாய் 6,198 கோடியாக இருந்த மொத்த ஒதுக்கீடு, கடந்த ஐந்தாண்டுகளில் ரூ. 11,416 கோடியாக உயர்ந்துள்ளது. இந்த இடைக்கால வரவு- செலவுத் திட்டத்தின் காவல்துறைக்கு ரூ. 3,239 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சிறைகளை நவீனபடுத்தும் திட்டத்தின் கீழ் நாகர்கோவில், விருதுநகர், ராமநாதபுரம், நாகப்பட்டினம், ஆத்தூர், கோபிசெட்டிபாளையம் ஆகிய கிளைச் சிறைகள் மாவட்ட சிறைச் சாலைகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.

திண்டுக்கல், நாகர்கோவில், விருதுநகர், ஆத்தூர் ஆகிய சிறைகளுக்கு ரூபாய் 11 கோடி செலவில் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. 500 பெண் சிறைக் கைதிகள் அனுமதிக்கப்படும் வகையில், ரூ. 10 கோடி செலவில் திருச்சியில் பெண்களுக்கென தனிக் கிளைச் சிறை கட்டப்பட்டுள்ளது.

இந்த இடைக்கால வரவு- செலவுத் திட்டத்தில் சிறைத் துறைக்காக ரூ. 140 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினை நவீனப்படுத்தி, தொழில் நுட்ப செயல் திறனை மேம்படுத்த கடந்த ஐந்தாண்டுகளில் ரூபாய் 522 கோடி செலவிட்டுள்ளது. இந்த ஆண்டில் அம்பத்தூரை தலைமையிடமாகக் கொண்டு, புறநகர் கோட்டமும் அமைக்கப்பட்டுள்ளது.

இத்துறைக்கென இடைக்கால வரவு- செலவுத் திட்டத்தில் ரூபாய் 169 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சாலைப் பாதுகாப்பு நிதிக்கென நடப்பு நிதியாண்டில் ரூ. 40 கோடி வழங்கப்பட்டுள்ளது. பதின்மூன்றாவது நிதிக்குழுவின் பரிந்துரைப்படி மாலை நேர நீதிமன்றங்கள் மற்றும் விடுமுறை நாள் நீதி மன்றங்கள் அமைக்கப்பட்டு, நிலுவையிலுள்ள வழக்குகளைக் கணிசமாகக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நீதி நிர்வாகத்திற்காக இந்த இடைக்கால வரவு- செலவுத் திட்டத்தில் ரூ. 633 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த அரசு பொறுப்பேற்ற பின்பு நிலவரி வசூல் செய்யும் முறையை எளிமைப் படுத்தி தீர்வை ஜாஸ்தி, பசலி ஜாஸ்தி, கூடுதல் தண்ணீர் தீர்வை மற்றும் பாசன மேம்பாட்டு வரி ஆகியவற்றை நீக்கி விவசாயிகளின் நில உடைமைக்கு சான்றாக விளங்கத்தக்க வகையில் பெயரளவிற்கு மட்டுமே “நிலவரி" என்று வசூலிக்கப்படும் என ஆணையிட்டது.

இதன்படி நிலவரியாக நஞ்சை நிலத்திற்கு ஏக்கர் ஒன்றுக்கு ஐந்து ரூபாயும், புஞ்சை நிலத்திற்கு ஏக்கர் ஒன்றுக்கு இரண்டு ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு இலவச நிலம் வழங்கும் திட்டம் 17.9.2006ல், திருவள்ளூர் மாவட்டத்தில் முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டு, இதுவரை தமிழ்நாட்டில் ஒரு லட்சத்து 78 ஆயிரத்து 976 நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு, 2 லட்சத்து 12 ஆயிரத்து 946 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டுள்ளது.

இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கும் திட்டத்தின் மூலம், இந்த அரசு பொறுப்பேற்றபின் 8 லட்சத்து 21 ஆயிரத்து 3 வீட்டு மனைப்பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. இலவச வண்ணத் தொலைக்காட்சி வழங்கும் திட்டத்தின் கீழ் இதுவரை ரூ. 3,716 கோடி செலவில் ஒரு கோடியே 62 லட்சத்து 80 ஆயிரம் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் கொள்முதல் செய்யப்பட்டு ஒரு கோடியே 58 லட்சத்து 8 ஆயிரத்து 285 பெட்டிகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. மேலும் ரூ. 249 கோடி மதிப்பீட்டில் 10 லட்சம் வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகள் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஏழை எளிய மக்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளையொட்டி, இலவச வேட்டி- சேலை வழங்கப்பட்டு வருகிறது. 2010-2011 ஆம் ஆண்டில் ரூ. 269 கோடி ஒதுக்கீட்டில் ஒரு கோடியே 59 லட்சத்து 4 ஆயிரம் பயனாளிகளுக்கு சேலைகளும், ஒரு கோடியே 58 லட்சத்து 19 ஆயிரம் பயனாளிகளுக்கு வேட்டிகளும் வழங்கப்பட்டுள்ளன.

ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் ரூ. 1,092 கோடி மதிப்பீட்டில் சட்டமன்ற வளாகம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சட்ட மேலவை அமைக்கும் பணிகளும் தலைமைச் செயலகக் கூடுதல் கட்டிடங்கள் கட்டும் பணிகளும், கலைவாணர் அரங்கம் கட்டும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இப்பணிகளுக்காக ரூ.244 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.

அகதிகள் முகாம்களுக்கு ரூ. 100 கோடி:

இலங்கை தமிழர் முகாம்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கு ரூ. 100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு முதல் கட்டமாக ரூ. 30 கோடிக்கான பணிகள் முடியும் தருவாயில் உள்ளன.

உயிர்காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம், இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகள் வழங்கும் திட்டம், மூவலூர் ராமாமிருதம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம் முதலான பல்வேறு திட்டங்களும், இந்த முகாம்களில் வாழும் இலங்கை தமிழர்களுக்கு விரிவு படுத்தப்பட்டு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இலங்கையில் நடைபெற்ற போரின் காரணமாகத் தமிழர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை கருத்தில் கொண்டு ரூ. 40 கோடிக்கான நிவாரணப் பொருட்கள் இந்த அரசு வழங்கியது. மத்திய அரசும் இலங்கை தமிழர் நிவாரணப் பணிகளுக்காக, ரூபாய் 500 கோடியை வழங்கியுள்ளது. இலங்கை தமிழர்களின் மறுவாழ்வு நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட வேண்டும் என்றும், அவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் இந்த அரசு தொடர்ந்து வலியுறுத்தும்.

2011-2012 ஆம் ஆண்டில் தொடங்கி 6 ஆண்டுகளுக்கு, ரூ. 745 கோடி மதிப்பில் “அணைகள் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டம்" உலக வங்கி நிதியுதவியுடன் 104 அணைகளில் மேற்கொள்ளப்பட உள்ளது.

இது தவிர, சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் ஜவகர்லால் நேரு தேசிய நகர்ப்புர புனரமைப்புத் திட்டத்தின் கீழ் ரூ. 1,448 கோடி செலவில், வெள்ள நீர் வடிவதற்கான சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. காவிரி, முல்லைப் பெரியாறு மற்றும் பாலாறு போன்ற பன்மாநில நதிநீர் பிரச்சினைகளுக்கு தீர்வு காணத் தமிழக அரசு தக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

பாலாறு அணை-முல்லைப் பெரியாறு அணை:

பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை கட்டுவதை எதிர்த்து, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் 2006 ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்துள்ளது. அதனை அடுத்து மத்திய நீர்வளக் குழுமம் பாலாறு படுகையில் கிடைக்கும் நீர்வளம் மற்றும் நீர் உபயோகம் பற்றி, ஒரு ஆய்வறிக்கையைத் தயாரித்து இரு மாநில பொறியாளர்களுடனும் விவாதித்து ஒரு சுமூகமான தீர்வு காண முயன்று வருகிறது.

கடலில் மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை சிங்கள ராணுவம் தொடர்ந்து வேட்டையாடும் நிலையினைக் கண்டு, தமிழக அரசின் சார்பாக பலமுறை கடிதங்கள் வாயிலாகவும், நேரடியாகவும் மத்திய அரசுக்கு கோரிக்கைகளை வைத்து- மத்திய அரசும் நமது வேதனையிலே பங்கு கொண்டு, இலங்கை அரசுக்கு எடுத்துக்கூறிய போதிலும், சிங்களக் கடற்படையினர், அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் தொடர்ந்து மனிதாபிமான மற்ற செயலிலே ஈடுபட்டு, நமது மீனவர்களைக் கொன்று வருவதை நிறுத்தியபாடில்லை.

இதற்கொரு முற்றுப்புள்ளி வைக்கப்படாமல், தமிழக மீனவர்கள் இனியும் கொல்லப்படும் நிலை வராமல் இருக்க இறுதி முடிவினை மத்திய அரசு எடுத்தே தீர வேண்டுமென்று தமிழக அரசின் சார்பில் வலியுறுத்தி வருகிறோம். பொது விநியோகத் திட்டத்தில் வழங்கப்படும் அரிசியின் விலையை, ஒரு கிலோ ஒரு ரூபாய் என அறிவித்து செயல்படுத்தி வருகிறது.

குறைந்த விலையில் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, செறிவூட்டப்பட்ட கோதுமை மாவு, செறிவூட்டப்பட்ட பாமாயில் போன்ற பொருள்களையும், அதைத் தொடர்ந்து 10 மளிகை பொருட்கள் அடங்கிய பொட்டலத்தையும், மானிய விலையில் வழங்கும் திட்டத்தை இந்த அரசு தொடங்கி சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.

இடைக்கால வரவு- செலவு திட்டத்தில் உணவு மானியத்திற்காக ரூ. 4,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

விலை ஏற்றத்திலிருந்து ஏழை எளிய மக்களை காத்திட நியாய விலை கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வரும் துவரம் பருப்பு, உளுத்தம் உருப்பு ஆகியவற்றின் விலை கிலோ ஒன்றுக்கு ரூ. 40-லிருந்து 30 ஆகவும், பாமாயில் லிட்டர் ரூ.30-லிருந்து ரூ.25 ஆகவும் மேலும் குறைத்து 1.2.2011 முதல் விற்பனை செய்து வருகிறது.

2006-ம் ஆண்டிலிருந்து இதுவரை ரூ.523 கோடி செலவில் ஆலயத் திருப்பணிகளும், கட்டுமானப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 4,724 கோவில்களுக்கு திருப்பணிகள் செய்யப்பட்டு குடமுழுக்கு விழா நடந்துள்ளது. அர்ச்சகர் மற்றும் பூசாரிகளுக்கு ரூ.277 லட்சம் மதிப்பீட்டில் 10 ஆயிரம் மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன. 2011-2012ம் ஆண்டில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் ஆயிரம் கோவில்களின் திருப்பணிகளை முடித்து குடமுழுக்கு விழாக்கள் நடத்தப்பட உள்ளன.

வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்காவில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில், பட்டாம் பூச்சி பூங்கா ரூ.5 கோடி செலவில் ஏற்படுத்த ஆணையிடப்பட்டுள்ளது.

இந்த அரசின் சிறப்பு திட்டமான உயிர்காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 70 ஆயிரத்து 265 பயனாளிகள் ரூ.702 கோடி செலவில் சிகிச்சையை பெற்றுள்ளனர். கிராமப்புறங்களில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பயன்பெற, கலைஞர் கண்ணொளி காக்கும் திட்டம், பள்ளிச்சிறார் இருதய பாதுகாப்புத் திட்டம், 3 முதல் 8-ம் வகுப்பு வரையிலுள்ள மாணவர்களுக்கு பற்கள் நலப் பாதுகாப்பு திட்டம் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

குழந்தை இறப்பு விகிதத்தை குறைப்பதற்காக சென்னையில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் இயங்கி வரும் இருதய சிகிச்சைப் பிரிவை நவீன வசதிகளுடன் கூடிய ஒரு சிறப்பு மையமாக ரூ.25 கோடியில் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சென்னை நகரில் புதிதாக 35,804 ஆட்டோ ரிக்ஷாக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவற்றுள் சென்னை பெருநகர பகுதியில் இயங்கும் 16,380 ஆட்டோ ரிக்ஷாக்கள் திரவ வாயுவில் இயங்குகின்றன.

மெட்ரோ ரெயில் திட்டத்திற்கான மொத்த மதிப்பீடான ரூ.14,600 கோடியில் இதுவரை ரூ.1,452 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. பணிகள் திட்டமிட்டபடி விரைவாக நடைபெற்று வருகின்றன. 2011- 2012-ம் ஆண்டிற்கு இத்திட்டத்திற்கென ரூ.750 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

முதல்வர் கலைஞரின் கனவுத் திட்டமான குடிசைகளற்ற கிராமங்களை உருவாக்கச் செயல்படுத்தப்பட்டு வரும் கலைஞர் வீடு வழங்கும் திட்டத்திற்கு 2011-2012ம் ஆண்டிற்கு ரூ.2,250 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

2008-2009 ஆம் ஆண்டு முதல் இதுவரை 95 சமத்துவ புரங்கள் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 2011-2012 ஆம் ஆண்டிற்கு ரூ.411 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒகேனக்கல் கூட்டுத் குடிநீர் திட்டத்திற்காக இந்த இடைக்கால வரவு- செலவுத் திட்டத்தில் ரூ.400 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சத்துணவுத் திட்டத்தின் மூலம் வாரத்திற்கு மூன்று முட்டைகள் வழங்கப்பட்டு வந்தது. தற்போது ஐந்து முட்டைகளாக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவுத் திருமண உதவித் திட்டம், டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதியுதவித் திட்டம், ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு ஏழை விதவைகளின் மகள் திருமண நிதியுதவித் திட்டம், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்களுக்கான திருமண நிதியுதவித் திட்டம் மற்றும் அஞ்சுகம் அம்மை யார் நினைவு கலப்புத் திருமண நிதியுதவித் திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் ரூ.10 ஆயிரமாக வழங்கப்பட உதவித் தொகை ரூபாய் 25,000 ஆக உயர்த்தப்பட்டு, இந்த இடைக்கால வரவு- செலவுத் திட்டத்தில் திருமண உதவித் திட்டங்களுக்கு ரூ. 337 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு மகப்பேறு நிதியுதவித் திட்டத்தின் கீழ் இதுவரை 25 லட்சத்து 20 ஆயிரத்து 186 கர்ப்பிணிப் பெண்களுக்கு ரூ.1,470 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. இந்த இடைக்கால வரவு- செலவு திட்டத்தில் ரூ. 360 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்தவ, இஸ்லாமிய, சீக்கிய, பவுத்த மற்றும் பார்சி இனங்களைச் சார்ந்த மாணவ, மாணவியருக்கு மாநில மற்றும் மத்திய அரசுகளின் நிதியுதவியுடன் கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டத்துக்கு ரூ.40 கோடியே 68 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சமூக நலம் மற்றும் சத்துணவுத் துறையிலிருந்து பிரித்து, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. 2011-2012-ம் ஆண்டிற்கு மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக ரூ.221 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 80 வயதைக் கடந்த ஓய்வூதிய தாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு, அவர்களின் வயதிற்கு ஏற்ப மத்திய அரசில் உள்ளதை போல் அடிப்படை ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியத்தில் 20 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

வரிச்சுமை இல்லாமல் பார்த்துக் கொண்ட கருணாநிதி:

கடந்த ஐந்தாண்டுகளில் பல திட்டங்களை இந்த அரசு புதிதாக அறிவித்து செயல்படுத்தி வந்தாலும் மக்களுக்குக் கூடுதல் வரிச்சுமை எதையும் ஏற்படுத்தி விடாமல் முதல்வர் கலைஞர் தலைமையிலான இந்த அரசு கவனமாக செயல்பட்டுள்ளது என்பதை நினைவுகூற விரும்புகிறேன்.

விரைவில் வர இருக்கும் சட்டப்பேரவை தேர்தலின் காரணமாக 2011-2012 ஆம் ஆண்டுக்கு இடைக்கால வரவு- செலவு திட்டமாக இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதால் புதிய வரிகள் விதிப்பது பற்றியோ, வரிவிலக்குகள் அறிவிப்பது பற்றியோ அறிவிப்புகள் ஏதும் செய்யப்படவில்லை என்று நிதியமைச்சர் அன்பழகன் தனது பட்ஜெட் உரையில் தெரிவித்திருந்தார்.

English summary
The interim budget for 2011-12 presented by Finance Minister K Anbazhagan in the assembly today showed a revenue surplus of more than Rs 430 crore. Presenting the last budget of the DMK government before the forthcoming assembly polls in the state, Anbazhagan in his budget estimates said revenue deficit will be "completely wiped out" at the end of the 2011-12 fiscal. He also said a sum of Rs 100 crore was allocated for improving amenities in refugee camps for Sri Lankan Tamils. The government would continue to press for expeditious rehabilitation of Sri Lankan Tamils and finding a lasting political settlement, he said. CM Karunanidhi has taken extra care in taxation, was keen not to burden the people of Tamil Nadu, he added.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X