For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விஞ்ஞானப் பூர்வமான ஊழல்-கருணாநிதி பாராட்டப்பட வேண்டியவர்-ஜெயலலிதா

By Chakra
Google Oneindia Tamil News

Jayalalitha
சென்னை: சர்க்காரியா ஆணையத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பணப் பரிமாற்றமும், கலைஞர் டி.வி. பணப் பரிவர்த்தனையும் மிகவும் ஒத்திருக்கிறது. அதே குழப்பமான கணக்கு முறை, பணம் எங்கிருந்து வருகிறது என்பதை கண்டறிய முடியாத அளவுக்கு நேர்மையற்ற முறை கையாளப்பட்டுள்ளது. அதே மூளை தானே இந்த சதித் திட்டத்தையும் தீட்டி இருக்கிறது!. இதன்மூலம் விஞ்ஞானப் பூர்வமான ஊழல் என்று வரும்போது 1969-ம் ஆண்டு முதல்வராகப் பதவி ஏற்றதில் இருந்து இன்று வரை ஒரு மாதிரியான கொள்கையை முதல்வர் கருணாநிதி கடைப்பிடித்து வருகிறார் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக அரசின் முதல்வர் கருணாநிதி ஒரு விஷயத்தில் மட்டும் பாராட்டுப் பெற தகுதியுடையவர் ஆகிறார். விஞ்ஞானப் பூர்வமான ஊழல் என்று வருகிற போது, 1969ம் ஆண்டு முதன் முறையாக முதல்வராகப் பதவி ஏற்றதில் இருந்து இன்று வரை, அனைவரும் வியக்கும் வகையில் ஒரே மாதிரியான கொள்கையை கடைபிடித்து வருகிறார் கருணாநிதி. ஒரு சிறிய உதாரணத்தை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ராசாத்தி என்று தற்போது அழைக்கப்படும் கருணாநிதியின் மனைவி திருமதி தர்மா வாங்கிய வீடு தொடர்பான ஏழாவது குற்றச்சாட்டு குறித்து சர்க்காரியா விசாரணை ஆணைய அறிக்கையின் முதல் தொகுப்பில், பக்கம் 52 மற்றும் 53லிருந்து ஒரு சில பகுதிகளை குறிப்பிட விரும்புகிறேன்.

கதவு எண். 9, முதல் குறுக்குத் தெரு, ராசா அண்ணாமலைபுரம், சென்னை என்ற முகவரியைக் கொண்ட வீட்டினை திருமதி இ.எல்.விஸ்வாசம் என்பவரிடமிருந்து 20.1.1969 அன்று ரூ 57,000 விலை கொடுத்து வாங்கி இருக்கிறார் தர்மா. இந்த வீட்டை 21.8.1970 தேதியிட்ட ஆவண எண் 1523/70 மூலம் தன்னுடைய பாதுகாவலர் டி.கே. கபாலிக்கு விற்றுவிட்டார் தர்மா. இந்த வீட்டை வாங்கிய டி.கே. கபாலி, விற்பனையாளரான ராசாத்தி என்கிற தர்மாவுக்கு ரூ 14 ஆயிரத்தைத்தான் தன் முன் கொடுத்தார் என்று பதிவாளர் மேற்படி ஆவணத்தில் குறிப்பினை எழுதியுள்ளார். அதே நாளன்று, டி.கே. கபாலியின் பெயரில் பதிவு செய்யப்படாத குத்தகை ஆவணத்தை தயாரித்து இருக்கிறார் தர்மா. இதன்படி, மாதாந்திர வாடகை ரூ. 300 என்கிற அடிப்படையில் அதே வீடு தர்மாவிற்கு வாடகைக்கு விடப்படுகிறது.

அதாவது, தான் விற்ற வீட்டிலேயே தர்மா தொடர்ந்து வாடகைக்கு குடியிருந்து வருகிறார். 30.1.1972 அன்று மேற்படி வீட்டை கபாலி, திருமதி சிவபாக்யம் என்பவருக்கு ரூ 45 ஆயிரத்துக்கு விற்றுவிட்டார். அதாவது, ரூ 12,000 நஷ்டத்திற்கு விற்றுவிட்டார். தர்மாவின் தாயார் தான் இந்த சிவபாக்யம்!!. இந்த விற்பனைக்கு பதிவு செய்யப்பட்ட ஆவணம் இருக்கிறது.

20.3.1972 அன்று இதே வீட்டை தனது மகள் தர்மா மற்றும் பேத்தி கனிமொழி பெயரில் எழுதி வைத்துவிட்டார் சிவபாக்யம். தனது காலத்திற்குப் பிறகு இந்த வீடு தனது மகளுக்கும், பேத்திக்கும் போய் சேரும் என்று மேற்படி ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

13.3.1973 அன்று தாக்கல் செய்யப்பட்ட தன்னுடைய வருமான வரி அறிக்கையில், இந்த வீட்டை வாங்குவதற்காக கபாலியிடம் இருந்து ரூ 40,000 கடனாகப் பெற்றேன் என்றும், சொந்த சேமிப்பு ரூ 23,000 என்றும், மொத்தம் ரூ 63,000 என்றும் தர்மா குறிப்பிட்டு இருக்கிறார். ஆனால், பதிவு செய்யப்பட்ட ஆவணத்தின்படி, ரூ. 57,000 கொடுத்து தான் வீடு வாங்கப்பட்டு இருக்கிறது. கடனாக பெற்றதற்கு 11.1.1970 தேதியிட்ட பதிவு செய்யப்படாத ஆவணம் ஆதாரமாக காட்டப்பட்டு இருக்கிறது.

இந்த ஆவணத்தின்படி, கடன் வாங்கப்பட்ட பணம், ரூ. 15,000, ரூ. 15,000 மற்றும் ரூ. 10,000 என்று மூன்று தவணைகளில் திருப்பி செலுத்தப்பட வேண்டும். இவ்வாறு திருப்பி செலுத்தப்படவில்லையெனில், மேற்படி வீடு கபாலிக்கே விற்கப்பட வேண்டும். இது சம்பந்தமான வாக்குறுதி பத்திரம் தயாரிக்கப்பட்டு அதில் 21.8.1970 அன்று தர்மா கையெழுத்து இட்டு இருக்கிறார். பின்னர், அந்த வாக்குறுதி சீட்டில் தர்மாவிடமிருந்து ரூ 40 ஆயிரத்தை பெற்றுக்கொண்டு விட்டேன் என்று எழுதியிருக்கிறார் கபாலி. இந்த வாக்குறுதி சீட்டு 23.3.1976 அன்று வருமான வரித் துறையினரால் கைப்பற்றப்பட்டது.

11.4.1973 அன்று கபாலியால் தாக்கல் செய்யப்பட்ட வருமான வரி அறிக்கையில், தர்மாவிற்கு ரூ 40,000 கொடுப்பதற்காக சிவபாக்கியத்திடமிருந்து ரூ 20,000 கடனாகப் பெற்றேன் என்று குறிப்பிட்டு இருக்கிறார் கபாலி. அதாவது, ராசாத்திக்கு கடன் கொடுப்பதற்காக ராசாத்தியின் தாயாரிடமிருந்து பணம் வாங்கியதாக ராசாத்தியின் பாதுகாவலர் கபாலி குறிப்பிட்டு இருக்கிறார்!!.

நீதிபதி சர்க்காரியா மீது அனுதாபப்படத் தான் முடியும். 28 குற்றச்சாட்டுகளில் இது போன்ற குழப்பமான புள்ளிவிவரங்களை அலசி ஆராய வேண்டிய நிலைமை நீதிபதிக்கு ஏற்பட்டது! எனவே, “விஞ்ஞானப் பூர்வமாக ஊழல் செய்வதில் வல்லவர்" என்று கருணாநிதிக்கு நீதிபதி சர்க்காரியா சான்றிதழ் கொடுத்ததில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

2ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல் விசாரணையிலும் இதே போன்ற விஞ்ஞான பூர்வமான ஊழல்கள் தான் வெளி வந்து கொண்டிருக்கின்றன. மும்பை கட்டுமானத் துறையைச் சேர்ந்த டைனமிக்ஸ் பால்வா என்ற நிறுவனத்தால் புதிதாக தொடங்கப்பட்ட ஸ்வான் டெலிகாம் என்ற நிறுவனத்திற்கு, அரிதான 2ஜி அலைக்கற்றையை அடிமாட்டு விலையான ரூ. 1,537 கோடிக்கு முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ராசா அளித்தார். இதற்குப் பிறகு, டைனமிக்ஸ் பால்வா என்ற நிறுவனம் தன்னுடைய 45 விழுக்காடு பங்குகளை யுஏஇ நாட்டைச் சேர்ந்த எடிசலாட் என்ற நிறுவனத்திற்கு ரூ 4,200 கோடிக்கு விற்றது.

இந்த அளவுக்கு லாபம் பெற உதவி புரிந்ததற்காக, ராசாவின் எஜமானரும், குருவுமான கருணாநிதிக்கு டைனமிக்ஸ் பால்வா அதிபர் லஞ்சம் கொடுத்தார். ஆனால், இந்தப் பணம் நேரடியாக கொடுக்கப்படவில்லை. வருமான வரித் துறையினரின் கண்களிலிருந்து தப்புவதற்காக, தன்னுடைய கட்டுப்பாட்டில் வரும் 11 நிறுவனங்களிலிருந்து ரூ 25 லட்சம் முதல் ரூ 100 கோடி வரை, ஆக மொத்தம் ரூ 209.25 கோடியை ஆசிப் பால்வா மற்றும் ராஜிவ் அகர்வால் ஆகியோருக்கு சொந்தமான குசேகான் ஃப்ரூட்ஸ் மற்றும் வெஜிடெபிள்ஸ் என்ற நிறுவனத்திற்கு பால்வா மாற்றியிருக்கிறார்.

குசேகான் நிறுவனம் இதிலிருந்து ரூ. 206.25 கோடியை பால்வாஸ் மற்றும் மொரானிக்கு சொந்தமான சினியுக் ஃபிலிம்ஸ் என்ற நிறுவனத்திற்கு கொடுத்து இருக்கிறது. இந்த சினியுக் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் 2009-2010ம் ஆண்டைய இருப்பு நிலைக் குறிப்பை பார்க்கும் போது, கருணாநிதியின் மனைவி தயாளு மற்றும் மகள் கனிமொழியும் சேர்ந்த 80 விழுக்காடு பங்குகளை பெற்றுள்ள சென்னையைச் சேர்ந்த கலைஞர் டி.வி.க்கு உத்திரவாதமற்ற கடனாக ரூ. 206 கோடி கொடுக்கப்பட்டு இருப்பது தெரிய வருகிறது.

சர்க்காரியா ஆணையத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பணப் பரிமாற்றமும், கலைஞர் டி.வி. பணப் பரிவர்த்தனையும் ஒத்திருப்பது தான் இதில் விசேஷமான ஒன்று. அதே குழப்பமான கணக்கு முறை. பணம் எங்கிருந்து வருகிறது என்பதை கண்டறிய முடியாத அளவுக்கு நேர்மையற்ற முறை. அதே மூளை தானே இந்த சதித் திட்டத்தையும் தீட்டி இருக்கிறது!.

கருணாநிதி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் 2ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழலில் குற்றவாளிகளாக சேர்க்கப்படுவதற்கு தகுதியானவர்களே. இதைச் செய்தால் மட்டுமே அனைத்து உண்மைகளும் வெளிவரும். அப்பொழுது தான் நீதி நிலைநாட்டப்படும் என ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

English summary
AIADMK chief Jayalalithaa in her statement said, Tamil Nadu's Chief Minister M Karunanidhi deserves to be complimented for one thing at least. When it comes to scientific corruption, he has shown remarkable consistency right from his very first term as chief minister in the late 1960s. Let me cite a small example. I quote from pages 52 and 53 of The Sarkaria Commission Report (Vol 1) on Charge no 7 relating to the purchase of a house by Mrs. Dharma, now known as Rajathi, wife of Karunanidhi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X