For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இப்படி ஒரு சிக்கலான நிலையை திமுகவோ, நானோ சந்தித்ததில்லை-கருணாநிதி

Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: திமுக கூட்டணியில் பிரச்சினைகள் உருவாக காங்கிரஸே காரணமாக அமைந்தது எனக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது. சட்டமன்றத் தேர்தல் ஆனாலும், நாடாளுமன்றத் தேர்தல் ஆனாலும் இதுவரையில் நடைபெற்ற எந்தவொரு தொகுதி பங்கீட்டுப் பேச்சுவார்த்தையிலும் இப்படியொரு நிலையை நானோ அல்லது திமுக தலைமையோ இதுவரை சந்தித்ததில்லை. இந்த பின்னணியில்தான் மத்திய ஆட்சிக்கு வெளியிலிருந்து ஆதரவு தருவது என்ற முடிவு எடுக்கப்பட்டது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

திமுக உயர் நிலை செயல் திட்டக் குழுவில் எடுக்கப்பட்ட முடிவு குறித்தும், அதற்கான காரணம் குறித்து விரிவாக விளக்கி முதல்வர் கருணாநிதி அறிக்கை விடுத்துள்ளார்.

அந்த அறிக்கை:

கொள்கை அடிப்படையில் செயல்படுகிறது திமுக

இந்திய திருநாட்டின் இறையாண்மை, ஒற்றுமை, ஒருமைப்பாடு, மதச்சார்பற்ற தன்மை இவற்றைக் கட்டிக் காக்கும் வகையில் செயல்பட்டு வருகின்ற திராவிட முன்னேறக் கழகம், தான் மேற்கொண்டுள்ள இந்தக் கொள்கைகளின் அடிப்படையில்தான் எந்தவொரு கட்சியுடனும் அணி சேர்ந்து பாடுபட்டு பணியாற்றி வருகிறது.

இந்த நிலைபாட்டிலிருந்து இம்மியும் மாறாமல்தான் கடந்த ஏழு ஆண்டுகளாக இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியுடனும், மற்ற தோழமைக் கட்சிகளுடனும் நல்லுறவு கொண்டு நாடாளுமன்றம், சட்டமன்றம் ஆகியவற்றில் நற்பணியாற்றி வருவதோடு - ஜனநாயக ரீதியில் நடைபெறும் தேர்தல்களிலும் அணி சேர்ந்து போட்டியிடும் கட்சிகளில் ஒன்றாக திராவிட முன்னேற்றக் கழகம் இயங்கி வருவது நாடறிந்த உண்மையாகும்.

புதுப் பிரச்சினைகளை உருவாக்கிய காங்.

அந்த வகையில், 2011 ஏப்ரல் திங்களில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் புதுவிதமான சில பிரச்சனைகள் உருவாக்கப்பட காங்கிரஸ் கட்சி காரணமாகியது என்பதுதான் திமுகவை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவரும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் வழிகாட்டியுமான தியாகத் திருவிளக்கு சோனியா காந்தி அவர்களை ஒவ்வொரு தேர்தலின் போதும் நான் சந்தித்து கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதைப் போல இந்தச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டும், என் உடல் நிலையைக் கூடப் பொருள்படுத்தாமல் டெல்லிக்கே சென்று இரண்டு நாள் தங்கியிருந்து சந்தித்து உரையாடியபோது அவர்கள் விரும்பியவாறு முதலில் திமுக காங்கிரஸ் பேச்சுவார்த்தையை நடத்த தீர்மானித்தது.

காங்கிரஸ் கட்சியின் சார்பில் குழுவினர் பேச்சுவார்த்தை நடத்த வருவதற்கு கால தாமதம் ஆகிய நிலையில் திமுக, பாமக மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தொடங்கியது. மற்ற கட்சிகளுடன் கலந்து பேசி அதுவரையில் இறுதி முடிவாக எத்தனை தொகுதிகள் - எந்தெந்த கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் என்பது பற்றி தீர்மானிக்காமல் இருந்து அதன் பிறகே சென்னையிலே 20.02.2011 அன்று இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் குழுவினரோடு பேச்சுவார்த்தை நடைபெற்றது.

காங்கிரஸ் கட்சியின் குழுவினரோடு பேச்சுவார்த்தை நடத்தியதில் எந்தவிதமான முடிவும் எய்த பெறாத நிலையில் இறுதி முடிவெடுக்க காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும், மத்திய அமைச்சருமான குலாம் நபி ஆசாத் அவர்கள் சென்னை வந்து பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டார்.

அவர் முன்னிலையில் நான் இருந்து நடத்திய பேச்சுவார்த்தையின்போது 57 தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்வதென ஒப்புதல் கொடுத்தோம். அதுபற்றி டெல்லி சென்று மேலிடத்தைக் கலந்து கொண்டு உடனடியாக அறிவிப்பதாக குலாம் நபி ஆசாத் கூறிவிட்டுச் சென்றார்.

டெல்லிக்குப் போய் 60 கேட்ட ஆசாத்:

பின்னர் டெல்லியில் இருந்து பேசிய குலாம் நபி ஆசாத் அவர்கள் 60 தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்குத் தேவை என்றும், அப்போதுதான் ஒப்பந்தத்தில் கையெழுத்திட முடியுமென்றும் அறிவித்ததைத் தொடர்ந்து - கழகத்தின் சார்பில் 60 தொகுதிகள் அளிக்கவும் ஒப்புக்கொண்டு, சென்னைக்கு வந்து கையெழுத்திட்டு ஒப்பந்தத்தை நிறைவு செய்யலாம் என்று நான் கேட்டுக் கொண்டேன்.

ஒப்பந்தத்தில் கையெழுத்திட வருவார்கள் என்று எண்ணியிருந்த நிலையில், அங்கிருந்து தொலைபேசியில் 60 இடங்கள் போதாது, 63 தொகுதிகள் காங்கிரசுக்கு ஒதுக்க வேண்டுமென்றும் - அந்தத் தொகுதிகளும் அவர்களால்தான் நிர்ணயம் செய்யப்படும் என்றும், எத்தனை இடங்கள் என்று ஒப்பந்தம் செய்யும்போதே, எந்தெந்த தொகுதிகள் என்பதும் குறிப்பிட வேண்டுமென்றும் நிபந்தனைகள் கூறப்பட்டது.

இப்படி ஒரு நிலை ஏற்பட்டதில்லை:

சட்டமன்றத் தேர்தல் ஆனாலும், நாடாளுமன்றத் தேர்தல் ஆனாலும் இதுவரையில் நடைபெற்ற எந்தவொரு தொகுதி பங்கீட்டுப் பேச்சுவார்த்தையிலும் இப்படியொரு நிலையை நானோ அல்லது திமுக தலைமையோ சந்தித்ததில்லை. இதைக் காணும்பொழுது, முதலில் கடந்த தேர்தலில் ஒதுக்கப்பட்ட 48இல் தொடங்கி, 51 என்றாகி, 55 என்றாகி, 57 என்றாகி, இறுதியில் 60 தொகுதிகளுக்கு திராவிட முன்னேற்றக் கழகம் ஒப்புதல் அளித்து - அதன் பிறகு இதுபோன்று நிபந்தனைகள் - 63 தொகுதிகள் வேண்டும் என்பதும் - அந்தத் தொகுதிகளின் பெயர்களை பரஸ்பரம் இரண்டு கட்சிகளும் கலந்து பேசி முடிவு செய்யாமல், அவர்கள் நிச்சயிப்பதையே ஒதுக்க வேண்டுமென்றும் நிபந்தனை விதித்தது, அதிர்ச்சி தரக் கூடியவைகளாக அமைந்திருப்பதைக் கண்டு தான் - இதை நானோ, பேராசிரியரோ மாத்திரம் முடிவெடுத்து அறிவிப்பதாக இருத்தல் ஆகாதென கருதி, கழகத்தின் உயர்நிலை செயல் திடடக் குழுவில் விவாதித்து முடிவெடுப்பதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்தல் உடன்பாட்டிற்காக தொடக்கத்திலிருந்து எடுக்கப்பட்ட முயற்சிகளையும், உருவாக்கப்பட்ட பிரச்சனைகளையும் எண்ணிப் பார்க்கும்போது, இரு கட்சிகளின் முன்னணி செயல் வீரர்களும், தொண்டர்களும் மன வேறுபாடின்றி நேச மனப்பான்மையோடு பணியாற்றும் நிலைக்கு, குந்தகம் ஏற்படுத்தி, தேர்தல் முடிவைப் பாதிப்பதற்கு இதுபோன்ற பிரச்சனைகள், செயல்பாடுகள், இழுத்தடிப்புகள் காரணமாகி விடக் கூடும் என்பதற்காக மட்டுமல்லாமல் - காங்கிரஸ் கட்சியின் இந்தப் போக்கு தேர்தல் உடன்பாட்டை சுமூகமாகச் செய்துகொள்ள வேண்டுமென்பதற்குப் பதிலாக இதையே சாக்காக வைத்து கழகத்தை அணியில் இருந்தே அகன்று விடச் செய்வதற்கான காரியமோ என்று ஐயுற வேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம்.

எனவே இந்த உயர்நிலை செயல் திட்டக் குழுவில் பின்வரும் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டிய நிலைக்கு நாம் உள்ளாகியிருக்கிறோம் என்பதை நான் தெரிவித்துக்கொள்கிறேன்.

காங்கிரஸ் எங்களை விரும்பவில்லை:

2011ஆம் ஆண்டில் ஏப்ல் திங்கள் 13ஆம் நாள் நடைபெறும் சட்டமன்றப் பொதுத் தேர்தலை முன்னிட்டு திமுக - காங்கிரஸ் கட்சியும் நடத்திய தேர்தல் பேச்சுவார்த்தையில் உடன்பாடு காண முடியாமைக்கும் - கடந்த 2006ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 48 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி இந்த முறை 60 இடங்கள் என்று கேட்டு, கழகமும் அதற்கு ஒப்புக்கொண்ட பிறகு -

தற்போது 63 இடங்கள் வேண்டுமென்பதும், அந்த இடங்களையும் அவர்களே நிர்ணயிப்பார்கள் என்பதும் வேண்டுமென்றே இந்த அணியில் தொடர அவர்கள் விரும்பவில்லை அல்லது நம்மை அவர்கள் விரும்பவில்லை என்பதையே தெளிவாகக் காட்டுவதாக திமுக உணருவதால் - இத்தகைய சூழ்நிலையில் மத்தியிலே ஆட்சியிலே திமுக தொடர வேண்டுமா என்பதை எண்ணிப் பார்த்து - மத்திய அரசிலே ஆட்சிப் பொறுப்பிலே இடம் பெற விரும்பாமல் கழகம் தன்னை விடுவித்துக் கொண்டு, மத்திய அரசுக்கு பிரச்சினையின் அடிப்படையில் மட்டும் ஆதரவு அளிக்கலாம் என்ற முடிவினை எடுக்கலாமென இந்த உயர்நிலை செயல் திட்டக் குழு தீர்மானிக்கிறது என்று கருணாநிதி தெரிவித்துள்ளார்.

English summary
CM Karunanidhi has clarified DMK's decision on Congress in its high level meeting. He has listed out the thantrums followed by Congress in seat sharing talks. Karunanidhi also said that he and his party never faced such a crisis in seat sharing talks.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X