For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அதிமுக அதிரடி வேட்பாளர் பட்டியல்-தேமுதிக, சிபிஎம், சிபிஐ, புதிய தமிழகம் கடும் அதிருப்தி

Google Oneindia Tamil News

Jayalalitha and Vijayakanth
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தன்னிச்சையாக 160 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்து விட்டது கூட்டணிக் கட்சிகளான சிபிஎம், சிபிஐ, புதிய தமிழகம் ஆகியவற்றுக்கு கடும் அதிருப்தியையும், அதிர்ச்சியையும் அளித்துள்ளது.

இதையடுத்து கூட்டணியில் பிளவு ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

நம்பகத்தன்மை இல்லாதவர் என்ற பெயரை மீண்டும் ஜெயலலிதா நிரூபித்துள்ளார். கூட்டணிக் கட்சிகளுடன் நீண்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த அதிமுக, சிபிஎம், சிபிஐ, மதிமுக ஆகிய கட்சிகளை பெரும் பரிதவிப்புக்குள்ளாக்கியது.

பின்னர் ஒரு வழியாக சிபிஎம்.முக்கு 12, சிபிஐக்கு 10 சீட்களை ஒதுக்கினார் ஜெயலலிதா. ஆனால் மதிமுகவை தொடர்ந்து கிடப்பில் போட்டு வைத்திருந்தார். ஆனால் நேற்று 160 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அதிரடியாக அறிவித்தார் ஜெயலலிதா. இதனால் மதிமுக முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு விட்டது.

ஜெயலலிதாவின் இந்த அதிரடியான அறிவிப்பு சிபிஎம், சிபிஐ, புதிய தமிழகம் ஆகிய கட்சிகளுக்குப் பெரும் அதிர்ச்சியும், அதிருப்தியும் அளித்துள்ளது. அதிமுகவின் செயல் மிகவும் ஏமாற்றமளிப்பதாக அக்கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

உண்மையில் நேற்று காலைதான் கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிகள் ஒதுக்கீடு குறித்து அதிமுக தலைமை இறுதிக் கட்ட ஆலோசனையை நடத்தி வந்தது. தேமுதிக, சிபிஎம், சிபிஐ, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் பேச்சுவார்த்தையில் பங்கேற்றன. ஓரிரு நாளில் தொகுதிகள் முடிவாகும் என்று அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தையும் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் திடுதிப்பென்று நேற்று இரவில் தனது கட்சி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு ஒட்டுமொத்த கூட்டணிக் கட்சிகளையும் அதிர வைத்துள்ளார் ஜெயலலிதா.

அதாவது கூட்டணிக் கட்சியினர் பேசி முடித்து விட்டுக் கிளம்பிச் சென்றதும், பின்னாலேயே அதிமுக வேட்பாளர் பட்டியலும் வெளியாகியது. இது பெரும் அவமானச் செயலாக கூட்டணிக் கட்சியினர் மத்தியில் பார்க்கப்படுகிறது.

மேலும் ஜெயலலிதா அறிவித்துள்ள பல தொகுதிகள் கடந்த தேர்தலில் கூட்டணிக் கட்சிகள் போட்டியிட்டு வென்ற இடங்களாகும். அதாவது திமுக கூட்டணியில் போட்டியிட்டு வென்றவை.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற திண்டுக்கல், பெரம்பூர், அரூர், திருப்பூர், நாகப்பட்டினம், மதுரை (தெற்கு) ஆகிய 6 தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்களை ஜெயலலிதா நிறுத்திவிட்டார். மேலும் அந்தக் கட்சி கேட்டிருந்த கீழ்வேளூர் உள்ளிட்ட 9 தொகுதிகளுக்கும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடந்த தேர்தலில் திருத்துறைப்பூண்டி, நன்னிலம், சிவகங்கை, ஆலங்குடி, மன்னார்குடி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய தொகுதிகளில் வென்றிருந்தது. ஆனால் இப்போது இந்தத் தொகுதிகள் அனைத்திலும் அதிமுக வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

புதிய தமிழகம் கட்சி வலுவாக உள்ள ஒட்டபிடாரம் மற்றும் அந்தக் கட்சி கோரிய இன்னொரு தொகுதியான வாசுதேவநல்லூர் அல்லது சங்கரன்கோயில் அல்லது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

பார்வர்ட் பிளாக் கட்சி வழக்கமாக போட்டியிடும் உசிலம்பட்டியைக் கேட்டிருந்தது. ஆனால் அங்கும் அதிமுக போட்டியிடுகிறது.

இப்படி கூட்டணிக் கட்சிகள் கேட்ட, போட்டியிட்ட, ஏற்கனவே வென்ற அனைத்துத் தொகுதிகளையும் ஜெயலலிதா பிடுங்கி விட்டார். இதனால் அனைத்துக் கட்சிகளும் கடும் அதிருப்தி அடைந்துள்ளன.

அதிர்ச்சி அளிக்கிறது-சிபிஎம்:

இதை சிபிஎம் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் அறிக்கை விட்டு பகிரங்கமாக கண்டித்துள்ளார். அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியான சில நிமிடங்களில் ராமகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில்,

அதிமுக நிர்வாகிகளுடன் புதன்கிழமை நடத்திய பேச்சின்போது, கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற தொகுதிகளோடு, மேலும் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளையும் ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். அவர்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுடன் கலந்தாலோசித்து விட்டு, புதன்கிழமை இரவே மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்துக்கு வந்து தொகுதிகள் பற்றி இறுதி செய்வதாகக் கூறினர்.

ஆனால், அடுத்த ஒரு மணி நேரத்தில் வெளியிடப்பட்ட அதிமுக வேட்பாளர் பட்டியலில், கடந்த தேர்தலில் எங்கள் கட்சி வெற்றி பெற்ற 6 தொகுதிகள், நாங்கள் கேட்டு வரும் பிற தொகுதிகளுக்கும் சேர்த்து வேட்பாளர்களை அறிவித்துள்ளனர்.

இது மிகவும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இந்நிலையில், இப்போதைய நிலைமை குறித்து விவாதித்து முடிவுகளை மேற்கொள்ள, மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம் அவசரமாக சென்னையில் நடைபெறும் என்று ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட்....

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளர் சி. மகேந்திரனிடம் கேட்டபோது, அதிமுகவின் இந்த அறிவிப்பு சற்றும் எதிர்பாராதது. எனவே, இது பற்றி விவாதிக்க எங்கள் கட்சியின் மாநில நிர்வாகக் குழுக் கூட்டத்தை அவசரமாக சென்னையில் கூட்டியுள்ளோம் என்றார்.

புதிய தமிழகமும்...

இதேபோல புதிய தமிழகம் கட்சியும் கடுப்பாகியுள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறுகையில், 4 தொகுதிகளின் பெயர்களை கூறுமாறு எங்களிடம் கேட்ட அதிமுக நிர்வாகிகள், அதிலிருந்து 2 தொகுதிகளை எங்களுக்கு ஒதுக்குவதாகக் கூறியிருந்தனர்.

இதன்படி, வாசுதேவநல்லூர், ஒட்டபிடாரம், சங்கரன்கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய 4 தொகுதிகளின் பெயர்களைக் கொடுத்திருந்தோம். இப்போது, 4 தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் எங்கள் கட்சியின் மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை கூட்டியுள்ளோம் என்றார்.

விஜயகாந்த்தும் எரிச்சலில்:

அதிமுகவின் இந்த புல்டோசர் அறிவிப்பால், தேமுதிக தலைவர் விஜயகாந்த்தும் எரிச்சலடைந்துள்ளார். இந்த அம்மா இப்படி அதிரடியாக செயல்பட்டால் எப்படி நாம் அவருடன் இணைந்து கூட்டணியாக செயல்பட முடியம் என்று எரிச்சலுடன் தனது கட்சி நிர்வாகிகளிடம் கேட்டாராம் விஜயகாந்த்.

தேமுதிக கோரியதில் 21 தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்களை ஜெயலலிதா அறிவித்துவிட்டதால் கடுப்பான விஜய்காந்த், நாம் கோரியதில் ஒரு தொகுதி கிடைக்காவிட்டால் கூட அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறுவோம் என்று தனது கட்சி நிர்வாகிகளிடம் கூறியுள்ளார்.

இந் நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க இன்று கட்சியின் உயர் மட்டக் கூட்டத்தை விஜய்காந்தும் கூட்டினார்ளா.

அதே போல அதிமுக கூட்டணியில் ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ள பார்வர்ட் பிளாக் கட்சி உசிலம்பட்டியைக் கோரியிருந்தது. ஆனால் அங்கும் அதிமுக வேட்பாளரை ஜெயலலிதா நிறுத்திவிட்டதால் அந்தக் கட்சியும் அதிருப்தியில் உள்ளது.

English summary
ADMK's candidates list has created a ruckus among alliance parties. DMDK, CPM, CPI and Puthiya Tamilagam have expressed shock over the list. CPM has convened a discussion meeting with party functionaries.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X