For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிபிஐ விசாரணையால் மன உளைச்சல்-தற்கொலை கடிதத்தில் சாதிக் பாட்சா

By Chakra
Google Oneindia Tamil News

சென்னை: எனது தற்கொலைக்கு குறிப்பிட்ட யாரும் காரணமல்ல என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் நண்பரான சாதிக் பாட்சா கடிதம் எழுதி வைத்துள்ளார்.

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உள்ளாகி வந்த நிலையில் நேற்று தனது வீட்டில் தூக்கு போட்டி அவர் தற்கொலை செய்து கொண்டதையடுத்து அவரது வீட்டிலிருந்து 4 கடிதங்களை போலீசார் கைப்பற்றினர்.

போலீசாருக்கு எழுதியுள்ள கடிதத்தில் ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிபிஐ சோதனை நடத்தியது, அது தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியானதால் தனக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டது பற்றி குறிப்பிட்டு, தற்கொலை முடிவை நானே எடுத்தேன். அதற்காக என்னை மன்னித்து விடுங்கள் என்று கூறியுள்ளார் பாட்சா.

குடும்பத்தினருக்கு எழுதியுள்ள 2வது கடிதத்தில் மனைவியையும், குழந்தைகளையும் நல்லபடியாக பார்த்துக் கொள்ளுங்கள், தங்கை சந்தோஷமாக இருக்க வேண்டும், தனக்கு நெருங்கிய நண்பர் ஒருவரின் பெயரை குறிப்பிட்டு அவர் இந்த குடும்பத்தாருக்கு உதவ வேண்டும், சகோதரர் திருமணம் புரிந்து புது வாழ்வைத் தொடங்க வேண்டும், மறு பிறப்பு இருந்தால் அமைதியான வாழ்க்கை கிடைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

தனது மனைவி ரெஹனா பானுவுக்கு எழுதியுள்ள 3வது கடிதத்தில், நீ சென்னையிலேயே தங்கியிருக்க வேண்டும், குழந்தைகளை நல்லபடியாக படிக்க வைக்க வேண்டும் என்றும், எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நீதான் எனக்கு மனைவியாக வரவேண்டும் என்றும் எழுதியுள்ளார்.

4வது கடிதத்தில், அமைச்சரும் (ஆ.ராசா), அவரது மனைவியும் நல்லவர்கள் என்று கூறி்யுள்ளார்.

மனைவி வாக்குமூலம்:

இந் நிலையில் ஸபெக்ட்ரம் வழக்கு விசாரணையால் ஏற்பட்ட மனஉளைச்சலால்தான், எனது கணவர் உயிரைவிட்டார் என்று சாதிக்பாட்சாவின் மனைவி ரெஹனா பானு போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

சாதிக் பாட்சா தற்கொலை செய்து கொண்ட தகவல் கிடைத்தவுடன் பிற்பகல் 2.30 மணிக்கு தேனாம்பேட்டை போலீசார் எல்லையம்மன் காலனியில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்றனர். ஆனால் வீடு பூட்டப்பட்டிருந்தது.

இதையடுத்து பாட்சாவின் மனைவி, மாமியார், 2 மகன்கள் மற்றும் வேலையாட்களை போலீசார் தேடினர். சிபிஐ குழுவும் அங்கு விரைந்து வந்தது.

ஆனால்மாலை 5 மணி வரை எந்தத் தகவலும் இல்லாததால் காத்திருந்தனர். 5 மணிக்கு சாதிக்பாட்சாவின் மனைவி ரெஹனா பானு, தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு வந்து வாக்குமூலம் கொடுத்தார்.

அதில், சாதிக் பாட்சாவுக்கும் எனக்கும் திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது. எனது கணவரின் சொந்த ஊர் பெரம்பலூர் மாவட்டம் லப்பகுடிகாடு கிராமம்.

தேனாம்பேட்டை எல்லையம்மன் காலனியில் கடந்த 3 வருடங்களாக நாங்கள் வசித்து வருகிறோம். நாங்கள் சந்தோஷமாக வாழ்ந்து வந்தோம். எனது கணவருக்கும் ரியல் எஸ்டேட் தொழில் நன்றாக நடந்தது.

இந்த நிலையில், ஸ்பெக்ட்ரம் வழக்கில் எங்கள் வீட்டில் சிபிஐ சோதனை நடத்திய பிறகுதான் எங்கள் வாழ்க்கையிலும் சோதனை ஏற்பட ஆரம்பித்தது. ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிபிஐ போலீசார், எனது கணவரை பலமுறை அழைத்து விசாரித்தனர். மீண்டும் விசாரணைக்காக டெல்லிக்கும் அழைத்திருந்தனர். எனது கணவர் பற்றிய செய்திகள் பத்திரிகைகளிலும், டி.வி. சேனல்களிலும் தாறுமாறாக வெளி வந்தன. இதனால் எனது கணவர் மிகவும் மனஉளைச்சலோடு காணப்பட்டார்.

இப்போது எங்களை எல்லாம் தவிக்க விட்டு, விட்டு எனது கணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணையால் ஏற்பட்ட மனஉளைச்சல்தான் எனது கணவரின் சாவுக்கு காரணம் என்று கூறியுள்ளார்.

நேற்று ரெஹனா பானு மகனை பள்ளியில் இருந்து அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தபோது படுக்கை அறையில்
சாதிக் பாட்சா தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். குழந்தைக்கு தொட்டில் போடக்கூடிய கொக்கியில் கயிறை மாட்டி அவர் தூக்கில் தொங்கினார்.

சாதிக் பாட்சா பட்டப்படிப்பு படித்துள்ளார். ஆரம்பத்தில் தனது சொந்த ஊரில் சைக்கிளில் சென்று துணிமணிகள் விற்கும் ஜவுளி வியாபாரம் செய்து வந்தார். பின்னர் ரியல் எஸ்டேட் புரோக்கராகி, பின்னர் நிலங்களை வாங்கி விற்க ஆரம்பித்தார். இதையடுத்து வசதியும், செல்வ செழிப்பும் ஏற்பட்டுள்ளது.

அவரது உடல் இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

அவரது செல்போனை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.

வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்-தமிழக அரசு அறிவிப்பு:

இந் நிலையில்
தமிழக அரசின் உள்துறை முதன்மைச் செயலாளர் கு.ஞானதேசிகன் நேற்று இரவு வெளியிட்ட அறிக்கை ஒன்றில், தேனாம்பேட்டை எல்லையம்மன் காலனியில் வசித்து வந்த சாதிக்பாட்சா என்பவர், தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது மனைவி ரேகாபானு கொடுத்த புகாரின் பேரில் தேனாம்பேட்டை போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சாதிக் பாட்சா 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் மத்திய புலனாய்வு துறையினரால் (சி.பி.ஐ.) விசாரிக்கப்பட்டு வந்தார். இந்த பின்னணியை கருத்தில் கொண்டு இந்த தற்கொலை வழக்கினை மேல் விசாரணைக்காக சி.பி.ஐக்கு மாற்றம் செய்வதென தமிழக அரசு முடிவு செய்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

English summary
Police have recovered a suicide note from the Chennai residence of 2G scam suspect Sadiq Batcha, who died under mysterious circumstances on Wednesday. The suicide note has said Batcha, who was a close aide of former telecom minister A. Raja, 'was embarrassed by the CBI raid and enquiry'.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X