For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆரிய மாயை வஞ்சம் தீர்த்து விட்டதே-வைகோவுக்கு வீரமணி கடிதம்

Google Oneindia Tamil News

Veeramani and Vaiko
சென்னை: வைகோவை ஆரிய மாயை வஞ்சம் தீர்த்து விட்டதாக கூறியுள்ளார் தி.க. தலைவர் கி.வீரமணி.

இதுகுறித்து வைகோவுக்கு வீரமணி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் வீரமணி கூறியிருப்பதாவது:

அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து அதன் பொதுச் செயலாளர் ஜெயலலிதா தங்கள் கட்சியை தொகுதிப் பங்கீடு என்ற ஒரு சாக்கைப் பயன்படுத்தி, திட்டமிட்டே வெளியேற்றியது கண்டு - தங்களுக்கும், தங்களை நம்பி தொடர்ந்து பின்பற்றும் உடன்பிறப்புகளுக்கும் ஏற்பட்டுள்ள அவமரியாதை கண்டு எங்கள் மனம் வேதனைப்படுகிறது.

தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடக்கூடிய அளவுக்கு கொள்கை லட்சிய முறையில் தந்தை பெரியார் என்ற மூல வேரிலிருந்து கிளைத்தவர்கள் அல்லவா நாம் அனைவரும்? தங்களுக்குத் தொகுதிகளைக் குறைத்துக் கொடுத்ததைவிடக் கொடுமை, தங்களை அக்கூட்டணியிலிருந்து அவமானப்படுத்தி, அதன் மூலம் ஆத்திரம் கொப்பளிக்க தாங்கள் இரவெல்லாம் பேசி முடிவு எடுக்க வைத்ததன் “ஆரிய மாயை" பற்றி எம்மைப் போன்ற - அவரை அணுஅணுவாக உணர்ந்தவர்களுக்கு இதில் வியப்போ, அதிர்ச்சியோ ஏற்படவில்லை. இது தங்களுக்கு என்றோ ஒரு நாள் நடைபெறும் என்பதை எதிர்பார்த்தவர்கள் நாங்கள் - விரும்பியவர்கள் அல்லர்.

வெளியிலிருந்து முதலாளித்துவ சக்திகள் தங்களை வெளியேற்ற எவ்வளவு முழு முயற்சி எடுத்துக் கொண்டுள்ளன என்கிற செய்திதான் மேலும் ஓர் அதிர்ச்சியாக உள்ளது! கடந்த காலத்தில் அந்த அம்மையாரோடு தாங்கள் ஒத்துப்போன முறை - அவர்கள் கட்சிக்காரர்கள்கூட அந்த அளவுக்குச் செய்திருக்க மாட்டார்கள் என்ற அளவு பேசப்பட்ட ஒன்று.

திருமங்கலத்தில் உங்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் மறைந்ததால் ஏற்பட்ட இடைத் தேர்தலில், அந்த அம்மையார் தன் கட்சிக்குக் கேட்டு வாங்கி, தான் ஏதோ வெற்றியின் முகப்பில் உள்ளதாக ஒரு படம் காட்டச் செய்த முயற்சிக்கு நீங்கள் ஒத்துழைப்புத் தந்ததோடு, தமிழக சட்டமன்றத்திலும் - அ.தி.மு.க.வோடு இணைந்தே இடைத் தேர்தல் புறக்கணிப்பு, சட்டமன்ற வெளிநடப்பு போன்றவற்றிலும் ஒன்றிய நிலையிலேயே செயல்பட்டீர்கள்!

என்றாலும் ஆரியம் தனது வஞ்சத்தைத் தங்கள்மீது சமயம் பார்த்துக் காட்டி, தங்களை அழித்துவிட தனது அஸ்திரத்தை ஏவிவிட்டு வேடிக்கை பார்க்கிறது.

தங்களது முடிவை மறுபரிசீலனை செய்யும்படி அந்த அம்மையார் வற்புறுத்தும் கடிதமாக அவர் எழுதிய கடிதத்தின் வாசகங்கள் அமையாது, தங்களுக்கு நிரந்தர வழியனுப்பு உபசாரப் பத்திரமாகவே காட்சி அளிப்பது - “அவாளின்" இயல்பின் இலக்கணத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது!

அவரிடம் உள்ள அகந்தை, ஆணவம், தன்முனைப்பு இவைபற்றிக் கூறியிருக்கிறீர்கள். இது ஒன்றும் தோண்டித் துருவிக் கண்டுபிடிக்க வேண்டியவை அல்ல. அவரிடம் கூட்டுச் சேர்ந்திருந்த பா.ஜ.க. தலைவர்கள், இடதுசாரிகள், காங்கிரஸ் கட்சியினர் முதலிய பலரும் ஏற்கெனவே பட்டு அனுபவித்தது அறிந்த செய்தியாகும்.

அவரது தற்போதைய ஆலோசகர் சோ. இராமசாமி அய்யர்களும், சுப்ரமணிய சுவாமி அய்யர்களும்தான் - அதன் இனம் இனத்தோடு என்ற உண்மைக்கேற்ப, இவர்கள் இருவருக்கும், அம்மையாருக்கும் தங்கள் கட்சி நிலைப்பாட்டில் - குறிப்பாக ஈழத் தமிழர் பிரச்சினையில் எந்த சிந்தனைப் போக்கு என்பது உலகறிந்த உண்மையல்லவா? தங்களுக்கு அம்மையார் ஆட்சியில் இழைக்கப்பட்ட “பொடா" கொடுமையை தாங்கள் அரசியல் காரணமாக மறந்திருக்கலாம்; ஆனால் இன உணர்வு, நியாய உணர்வோடு நாங்கள் என்றும் மறந்ததில்லை - சகோதர பாசம் என்பது தேவை வரும்போது பீறிட்டுக் கிளம்பும் என்பதும் இயல்பானதே!

அரசியலில் இன்னொரு தேர்தல் வரும்வரை நாங்கள் சும்மா இருப்போம் என்கிற நிலைப்பாடு சரியாக அமையுமா என்பதை சற்று நிதானமாக யோசியுங்கள். என்றைக்கிருந்தாலும் நாம் ஒரே வேரிலிருந்து கிளைத்தவர்கள் என்பதால் தாங்கள் தங்களது கட்சியின் எதிர்காலத்தைப்பற்றி சற்று உணர்ச்சி வயப்படாமல் யோசியுங்கள். அரசியல் கட்சி நடத்துவோர் ஜனநாயகத்தில் வாக்களிக்காமல் புறக்கணிப்பது நல்லதா?

சுயமரியாதை உணர்வோடு தீர்மானம் நிறைவேற்றியுள்ளீர்கள்; என்றாலும், மேலும் தங்கள் அரசியல் பாதை எப்படி அமைந்தால் சிறப்பானதாக அமையும் என்பதற்கு தி.மு.க.வோடு ஒன்றாக இணைந்துவிட வேண்டும் என்று கூடச் சொல்ல மாட்டேன்; தனி அரசியல் கட்சியானாலும் தி.மு.க. என்ற தங்களின் தாய்க் கழகத்தின் கொள்கை, லட்சியங்களில்தான் அதிகமான ஒத்துப் போகின்ற தன்மைகள் “பளிச்சிடும்" நிலை உண்டு. அதையொட்டி தாங்கள் 2004இல் நாடாளுமன்றத் தேர்தலில் கடுமையாகப் பிரச்சாரம் செய்தீர்கள். சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் போன்றவற்றைப் பற்றி வற்புறுத்தினீர்கள்.

- இவைபோன்ற பல்வேறு பிரச்சினைகளில் நெருக்கமாக இருக்கும் ஒரே அரசியல் கட்சி, தி.மு.க.வாகவும் - அதன் தலைவருமாகத்தான் இருப்பார்கள். ஆயிரம் கோபதாபங்கள் நமக்குள் இருப்பினும் “நீரடித்து நீர் விலகாது" என்னும் பழமொழிக்கொப்ப, நாம் அனைவரும் ஓர் அணியில் நிற்க லட்சிய ரீதியான உணர்வு படைத்தவர்கள். தி.மு.க. கூட்டணியை ஆதரிக்கும் நிலைப்பாட்டினை எடுங்கள். எனவே, நிதானமாக யோசியுங்கள். துணிந்து ஒரு நிலைப்பாட்டினைத் தோழர்களோடு கலந்து எடுங்கள். ஆட்சிக்கு வருமுன்னரே இப்படித் தங்களை அலட்சியப்படுத்திய ஜெயலலிதா, தப்பித் தவறி வந்தால் எப்படி “விசுவரூபம்" எடுத்து அழிக்க முற்படக் கூடும் என்பதையும் எண்ணுங்கள்.

தேர்தலில் மீண்டும் (திமுக) ஆட்சிக்கு வருவது கொள்கை ரீதியாக நமக்குத் தேவையானது. உரிமையுடன் அவரிடம் ஈழப் பிரச்சினை உள்பட அனைத்துக்கும் வற்புறுத்தி வாதாடலாம், செயல்பட வைக்கலாம். வேகாத வெயிலையும் பொருட்படுத்தாது, பல மணி நேரம் நீதிமன்றங்களில் வந்து காத்திருந்த தலைவர் - தங்களை அம்மையார் “பொடா"வில் போட்டு வதைத்தபோது!

அது மட்டுமல்ல; அண்மையில்கூட அவரது ஆட்சியில் கைது செய்த நிர்ப்பந்த நிலை ஏற்பட்டபோதுகூட தங்களை சிறையில் வைத்திருப்பதை விரும்பாது, மனிதநேயத்தோடு அரசு வழக்குரைஞருக்கே சொல்லி, மறுப்புச் சொல்லாதீர்கள் என்று கூறிய மனித நேயத்தைக் கொட்டியவர். தங்களுக்குரிய மரியாதையை இந்த அணியில் எப்போதும் நீங்கள்பெற முடியும்.

நாம் ஒன்றுபட்டு ஓரணியில் நிற்பதால் நம் தமிழினம் உலகம் முழுவதும் உரிமைக் களத்தினில் வெற்றி பெற உதவிடும். இது வெறும் அரசியல் வியூகம் அல்ல - நல்லெண்ணத்தோடும், கவலையோடும் ஒரு சகோதரரின் அறிவுப்பூர்வமான வேண்டுகோள். எந்த உள்நோக்கமோ, அரசியல் லாபங்களைக் கருதியோ அல்ல - இந்த வேண்டுகோள். மனதிற்பட்டது - தங்களது மனப் புண்ணுக்கு மருந்து என்று கருதியே இந்த யோசனை. பகுத்தறிவாளர்களாகிய நாம் தொலைநோக்குப் பார்வையோடும் சிந்திக்கக் கடமைப்பட்டவர்கள்
என்பதால்தான் இந்த வேண்டுகோள் என்று அவர் கூறியுள்ளார்.

English summary
DK leader K.Veeramani has written a letter to Vaiko. He has chided Jayalalitha's attitude towards Vaiko and MDMK.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X