For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எதிர்க்கட்சியை ஆளும் கட்சியாக்கும் தேர்தல் ஆணையம்! - முதல்வர் கருணாநிதி

Google Oneindia Tamil News

Karunanidhi
திருச்சி: விதிமுறைகள் எனும் பெயரில் எதிர்க்கட்சியை ஆளும் கட்சியாக்க முற்படுகிறது தேர்தல் ஆணையம் என குற்றம்சாட்டினார் தமிழக முதல்வர் மு.கருணாநிதி.

தி.மு.க. தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணி சார்பில் திருச்சியில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தில் அவர் மேலும் பேசியதாவது:

தி.மு.க. தேர்தலில் போட்டியிடுவது என்ற முடிவு 1956-ல் திருச்சியில்தான் எடுக்கப்பட்டது. அந்தத் தீர்மானத்தின்படி 1957 தேர்தலில் தி.மு.க. போட்டியிட்டது. அப்போது நான் குளித்தலையில் போட்டியிடுவதாக நம்நாடு பத்திரிகையில் அறிவித்தார் அண்ணா.

அறிமுகம் இல்லாத தொகுதியில் எப்படிப் போட்டியிடுவது என்று அண்ணாவிடம் கேட்டேன். அண்ணா நிற்கச் சொன்னார். நின்றேன். இதுவே வேறொரு கட்சியாக இருந்தால், கட்சிக்குள் இருக்கும் இன்னொரு கட்சியாக இருந்தால் என்ன நடந்திருக்கும்?

அண்ணாவின் சொல்லைத் தம்பி தட்டக் கூடாது என்பதற்காகவே குளித்தலையில் போட்டியிட்டேன். குளித்தலையில் பசுமை நிறைந்த பகுதி ஒருபுறம், பாலைவனம் போன்ற பகுதி மறுபுறம். வென்றேன். சட்டப் பேரவைக்குச் சென்றேன்.

பல இடங்களுக்கும் சென்று இப்போது நீண்ட காலமாக நான் போட்டியிட முடியாத இடமாக இருந்த திருவாரூரில் இப்போது போட்டியிடுகிறேன்.

என்னை கட்சியினர் புகழ்ந்து பேசுவது பெரிய விஷயமல்ல. ஆனால், பேராசிரியர் காதர் மொய்தீனும், திருமாவளவனும் பேசுவதைப் பார்க்கும்போது, "அந்தளவுக்குப் பெரியவனா நான்?" என எண்ணத் தோன்றுகிறது. பெரியவனல்ல நான், மிகமிகச் சாதாரணமானவன். திருக்குவளையில் சாதாரண குடும்பத்தில் பிறந்தவன்.

பணத் திமிர், ஜாதி, மத ஆதிக்கம் சூழ்ந்த இடத்தில் பிறந்தவன். பெரியாரின் கருத்து கேட்டு, அண்ணாவைப் பார்த்து இப்போது ஓர் இயக்கம் நடத்தும் அளவுக்கு வலிமை பெற்றிருக்கிறேன். இத்தனை வலிமையை எனக்கு யார் வழங்கினார்களோ அவர்களுக்காக இந்த வலிமையைப் பயன்படுத்த வேண்டும் என்று இன்று வரை பணியாற்றி வருகிறேன்.

எனது அரசியல் பணி, சமுதாயப் பணி தொடங்கிய இடம் திருச்சி. இங்கு எனது நண்பர்கள் அன்பில் தர்மலிங்கம், து.ப. அழகுமுத்து, எம்.எஸ்.மணி, பராங்குசம், நாகசுந்தரம், காமாட்சி, ராபி, முத்துக்கிருஷ்ணன், கிருஷ்ணமூர்த்தி, எம்.எஸ்.வெங்கடாசலம், குளித்தலை முத்துக்கிருஷ்ணன், வெற்றிகொண்டான் போன்றோருக்கு வெறும் கண்ணீரால் அனுதாபம் தெரிவித்து விட முடியாது.

இப்போது 6-வது முறையாக முதல்வராக்குங்கள் என்று கேட்டு போட்டியில் இறங்கியிருக்கிறேன். எனக்குப் போட்டி யார்? எதிரி என்று சொல்லமாட்டேன்; எதிர்ப்பாளர் என்றும் சொல்லமாட்டேன். என்னைப் பிடிக்காதவர் என்று சொல்லலாம்.

முதல் முறையாக சட்டப் பேரவைக்குள் சென்றபோது சிலரை மட்டும் அவர் இவர் என்றும், பலரை அவன் இவன் என்றும் கூறி இருக்கும் ஆவணங்கள் பற்றிப் பேசினேன். அமைச்சர் கக்கன் உணர்ந்து கொண்டார். முதல்வர் காமராஜரிடம் தெரிவித்தார். அந்த வரிகளை மாற்ற உத்தரவிட்டார். பெரியார் விதைத்த விதை, அண்ணா விதைத்த விதை அது.

குளித்தலையில் போட்டியிட்டு வென்ற என்னிடம் அப்பகுதி மக்கள் வைத்த கோரிக்கை குளித்தலை- முசிறிக்கு பாலம் அமைக்க வேண்டும் என்பது. அந்தக் கோரிக்கையை எம்.எல்.ஏ.வாக இருக்கும்போது செய்ய முடியவில்லை. முதல்வராகித்தான் செய்ய முடிந்தது.

மக்கள் பிரச்னை, சமுதாயப் பிரச்னைக்கு தீர்வு காண்பதில் எனது பொதுவாழ்வின் பெரும் பகுதியைச் செலவழித்திருக்கிறேன். இவற்றைப் பட்டியலிட வேண்டுமானால் நேரம் போதாது.

இப்போது இருக்கும் தேர்தல் ஆணையம் மிகவும் கண்டிப்பான தேர்தல் ஆணையம். எதிர்க்கட்சியை ஆளும் கட்சியாக்க முற்படும் தேர்தல் ஆணையம். ஏனென்றால், அந்த ஆணையத்தில் உறுப்பினர்களாக, அதிகாரிகளாக இருப்பவர்கள் அப்படி.

சென்னை உயர் நீதிமன்றமே எச்சரித்திருக்கிறது. கட்சி சாராதவர்களாக, சார்பில்லாத அமைப்பாக தேர்தல் ஆணையம் இருக்க வேண்டும். நடுநிலையான அமைப்பால் நடத்தப்படும் தேர்தலில் வெற்றி பெறுவதைத்தான் விரும்புகிறேன். உயர் நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்தாவது தேர்தல் ஆணையம் நடுநிலையாகச் செயல்பட வேண்டும்.

பெரியாரால் வளர்க்கப்பட்ட தமிழ்நாடு; அண்ணாவால் வளர்க்கப்பட்ட தமிழ்நாடு. கேரளத்தில் மஹாபலி மன்னன் கொல்லப்பட்டதைப் போல, தமிழ்நாட்டிலும் ஒரு ஓணம் பண்டிகையைக் கொண்டாட முற்படுகின்றனர். நான் முதல்வராக வரக் கூடாது என்று கூறுவதற்கு ஒரே காரணம், ஒரு பகுத்தறிவாளன், மறுமலர்ச்சியை விரும்புகிறவன், இன உணர்வு கொண்டவன் முதல்வராக வரக் கூடாது என்பது மட்டும்தான்," என்றார் கருணாநிதி.

இந்தக் கூட்டத்தில், அமைச்சர்கள் கே.என்.நேரு, செல்வராஜ், எம்.பி. திருச்சி என்.சிவா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலர் காதர் மொய்தீன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்டோரும் பேசினர்.

English summary
Tamil Nadu chief minister M Karunanidhi slammed the election commission for its unnecessary restrictions during campaign. He also alleged that the EC is helping the opposition party to become as ruling party.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X