For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சினிமாவில் போணியாகாததால் அரசியலுக்கு வந்தவர் விஜயகாந்த்: வடிவேலு தாக்கு

By Siva
Google Oneindia Tamil News

Vadivelu
சென்னை: சினிமாவில் போணியாகாததால் அரசியலுக்கு வந்தவர் விஜயகாந்த் என்று நடிகர் வடிவேலு ஆவேசமாக பேசினார்.

நேற்று கொளத்தூரில் திமுக சார்பில் போட்டியிடும் துணை முதல்வர் மு.க. ஸ்டாலினை ஆதரித்து நடிகர் வடிவேலு பிரசாரம் செய்தார். வழக்கம் போல விஜயகாந்த்தை ஒருமையில் விளித்து வாரிப் பேசினார்.

ஆயிரம் விளக்கு ஜேஜே!

டி.கே.பிரதர்ஸ் அருகில் பிரசாரத்தை துவங்கினார். அவரைப் பார்க்க திரளான மக்கள் வந்திருந்தனர். அப்போது அவர் பேசியதாவது,

மு.க.ஸ்டாலின் ஆயிரம் விளக்கு தொகுதியை ஜெ, ஜெ என ஆக்கிவிட்டார். தற்போது கொளத்தூரை சொர்க்க பூமியாக மாற்றுவதற்காகத் தான் இங்கே போட்டியிடுகிறார். கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு நலத்திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தி இருக்கிறது.

இப்போதும் கூட மிக்சி, கிரைண்டர் தருவதாக தேர்தல் அறிக்கையில் வெளியிட்டுள்ளனர். கருணாநிதி ஆட்சியில் கருவில் இருக்கும் சிசுவிற்கு கூட திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கருணாநிதி தாய் உள்ளம் கொண்டவராக இருக்கிறார்.

12 வயதிலேயே அரசியலுக்கு வந்தவர் தான் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின். அரசியல் வாழ்க்கையில் பல போராட்டங்களையெல்லாம் பார்த்துவிட்டு முன்னுக்கு வந்திருக்கிறார். இன்னும் 12 வயது போலவே துருதுருவென இருக்கிறார். அவர் சென்னை மேயராக இருக்கையில் சென்னையை சிங்காரச் சென்னையாக மாற்றுவேன் என்று கூறியதற்கு பலரும் கேலி செய்தனர். ஆனால் இன்றோ பல பாலங்கள், பூங்காக்கள், குப்பையில்லா கூவம் என்று சென்னை ஜெ, ஜெ என காட்சி அளிக்கிறது.

என்னையே சிரிக்க வைத்தவர் விஜயகாந்த்

செம்மொழி பூங்கா அமைத்து, அதை சொர்க்க பூமி பூங்காவாக மாற்றியிருக்கிறார். ஆனால், நேற்று கட்சி ஆரம்பித்தவர்கள் எல்லாம் நாங்கள்தான் முதல்வர் என்று கூறுகிறார்கள். சினிமாவில் ஏராளமானவர்களை சிரிக்க வைத்துள்ள என்னை சிரிக்க வைத்தவர் விஜயகாந்த்.

கடந்த தேர்தலில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் போட்டியிட்டு ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றார். அந்த ஒரு தொகுதி (விருதாச்சலம்) மக்கள் கூட நாங்கள் ஏமாந்துவிட்டோமே என்று வருத்தப்படுகின்றனர். சினிமாவில் வீரமாக வில்லன்களை அடித்து துவைப்பார் விஜயகாந்த். அதெல்லாம் டூப். உண்மையில் அடி வாங்குவது நாங்கள்தான்.

தன்னை கருப்பு எம்.ஜி.ஆர். என்று கூறுகிறார். ஆனால் அவருக்கு எம்.ஜி.ஆரின் குணமில்லையே.

சிவனேன்னுதானே இருந்தேன்

சிவனே என்று இருந்த எனது வீட்டில் கல் எரிந்தனர். அது என் மகள் மீது பட்டது. ஊரையே சிரிக்க வைக்கும் என்னை அழவைத்தவர் விஜயகாந்த். அவர் கொடூரமனம் படைத்தவர். பண்பாடு தெரியாதவர். அவருக்கு புரட்சி கலைஞர் என்று பெயர் வைத்தவர் என் கலைஞர். அவருடைய திருமணத்தை நடத்தி வைத்தவர் கலைஞர். அப்படிப்பட்ட அப்பாவுக்கு நிகரானவரையே ஒழிப்பேன் என்று பிரசாரம் செய்து வருகிறார்.

சினிமாவில் எனக்கு மாஸ் இருந்து கொண்டே தான் இருக்கிறது. அந்த மாஸ் உடன் நான் உங்களை சந்திக்க வந்திருக்கிறேன். ஆனால் விஜயகாந்தோ சினிமாவில் போணியாகாததால் உங்களை தேடி வந்திருக்கிறார். அவரை நம்பாதீர்கள். பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வரும் திமுக அரசுக்கு வாக்களியுங்கள்.

உங்களுக்கு அனைத்தும் செய்திருக்கிறேன். அதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், மறவாதீர்கள் என்று நேற்று கூட கலைஞர் கூறினார். நீங்கள் நன்றி மறவாமல் உதய சூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

அதனை தொடர்ந்து லட்சுமி அம்மன் கோவில், பெரவள்ளூர், காமராஜர் சாலை, திரு.வி.க.நகர் பேருந்து நிலையம், மாதவரம் நெடுஞ்சாலை, பந்தர் கார்டன் தெரு, அயனாவரம் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் பிரசாரம் மேற்கொண்டார்.

English summary
Actor Vadivelu was campaigning in Kolathur supporting deputy CM MK Stalin. At that time he told that Vijayakanth has come to politics because he doesn't have a market at all in the cinefield. Vijayakanth who calls himself as black MGR doesn't even have his noble qualities, he added.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X