For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெயலலிதா வெற்றி பெற வாழ்த்துக்கள்: தா.பாண்டியன்

By Chakra
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் மின் வெட்டினைத் தளர்த்தவும், முழுமையாக நீக்கவும் உடனடி நடவடிக்கைகளைத் தொடர்ந்துள்ள முதல்வர் ஜெயலலிதா வெற்றி பெற வாழ்த்துகிறோம் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தின் முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்றவுடன், மக்களுக்குத் தேர்தல் அறிக்கையின் மூலம் தந்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் அளித்துள்ள பல திட்டங்கள் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது.

குடும்ப அடையாள அட்டைகள் மூலம் அரிசி பெறுவோர் அனைவர்க்கும் 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கவும், இளம் பெண்களின் திருமணத்திற்கு உதவும் வகையில் நான்கு கிராம் தங்கமும், பண உதவியும் வழங்கிடவும், மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் செல்லத் தடை விதிக்கப்படும் காலத்திற்கு வழங்கப்படும் தொகையை உயர்த்திக் கொடுத்தமைக்காகவும்,

மாற்றுத் திறனாளிகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், ஆகியோருக்கான மாத ஊதியத்தை உயர்த்தியமைக்காகவும், பட்டம் அல்லது பட்டயம் பெற்ற பெண்களுக்கு திருமண உதவித் தொகையை ஐம்பதாயிரமாக உயர்த்தியமைக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மின் வெட்டினைத் தளர்த்தவும், முழுமையாக நீக்கவும் உடனடி நடவடிக்கைகளைத் தொடர்ந்துள்ள முதலமைச்சர் வெற்றி பெற வாழ்த்துகிறோம்.

சட்டம், ஒழுங்கு நிலைநாட்டப்படும் என்றும், குறிப்பாகப் பள்ளிக் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என்றும் அறிவித்துள்ளதையும் வரவேற்கிறோம்.

இலங்கைத் தமிழர்களின் மனித உரிமைகளை மீட்டுக் கொடுப்பதற்காகத் தமிழக அரசு உரிய நடவடிக்கைகள் எடுக்கும் என அறிவித்திருப்பதற்கும். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தனது முழு ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது.

எல்லாவற்றிற்கும் மேலாக சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை எனும் ஒரு புதிய துறையைத் தொடங்கியதையும் வாழ்த்தி வரவேற்கிறோம் என்று கூறியுள்ளார்.

7 நலத் திட்டங்களுக்கு முதல் கையெழுத்து-மார்க்சிஸ்ட் வரவேற்பு:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அதிமுகவின் புதிய அமைச்சரவை பொறுப்பேற்ற அன்றே தமிழக முதல்வர் ஏழு நலத் திட்டங்களுக்கு அனுமதியளித்து அதற்கான கோப்பில் கையெழுத்திட்டுள்ளார். ரேஷனில் 20 கிலோ அரிசி இலவசம், படித்த ஏழைப் பெண்களுக்கு ரூ.25 ஆயிரம் உதவியுடன் தாலிக்கு 4 கிராம் தங்கம் இலவசம், பட்டம் அல்லது பட்டயம் பெற்ற பெண் திருமணத்துக்கு ரூ.50 ஆயிரத்துடன் தாலிக்கு 4 கிராம் தங்கம் இலவசம் என்பது உள்பட 7 நலத்திட்டங்களை அரசு அறிவித்துள்ளது. இது நல்ல துவக்கம். தமிழக முதல்வர் அறிவித்த திட்டங்களை மார்க்சிஸ்ட் வரவேற்கிறது.

இதேபோன்று தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள அம்சங்களை அமலாக்குவதோடு குவிந்து கிடக்கும் இதர மக்கள் பிரச்சனையை தீர்ப்பதற்கும் தொடர்ந்து நடவடிக்கை எடுத்திட மாநில அரசை கேட்டுக் கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.

English summary
CPI state secretary D. Pandian has praised CM Jayalalithaa for the schemes she had launched just after taking the charge
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X