மருத்துவப் படிப்பு: 20,000க்கும் அதிகமான விண்ணப்பங்கள் விற்பனை
சென்னை: தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் சேர நேற்றுவரை 20,000க்கும் அதிகமான மாணவ- மாணவியர் விண்ணப்பங்கள் வாங்கியுள்ளனர்.
கடந்த 16-ம் தேதி முதல் எம்.பி.பி.எஸ்.,பி.டி.எஸ். படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அரசு பல் மருத்துவக் கல்லூரியில் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு பிளஸ் டூ தேர்வில் ஏராளமான மாணவ-மாணவியர் கணக்கு, அறிவியல் பாடங்களில் அதிக மதிப்பெண் பெற்றுள்ளனர். இதனால் மருத்துப் படிப்புகளுக்கான கட்-ஆப் மார்க் உயர்கிறது.
இந்நிலையில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகமான மாணவ-மாணவியர் மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வாங்கிய வண்ணம் உள்ளனர்.
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கு மட்டுமின்றி டிப்ளமோ (நர்சிங்), பி.எஸ்ஸி. (நர்சிங்), பி. ஃபார்ம்., பி.பி.டி. (பிஸியோதெரபி படிப்பு), பி.ஏ.எஸ்.எல்.பி. (காது மருத்துவம் தொடர்புடைய கேட்பியல்-பேச்சியல் பட்டப்படிப்பு) ஆகிய மருத்துவம் சார்ந்த படிப்புகளில் சேர ஏராளமானோர் ஆர்வம் காட்டுகின்றனர்.
டிப்ளமோ நர்சிங் படிப்புக்கு மட்டும் இதுவரை 15,000 பேர் விண்ணப்பங்கள் வாங்கிச் சென்றுள்ளனர். பி.எஸ்ஸி. (நர்சிங்), பி. ஃபார்ம். உள்ளிட்ட படிப்புகளில் சேர இதுவரை 9,000 பேர் விண்ணப்பங்கள் வாங்கியுள்ளனர்.
மாணவ-மாணவியர் காட்டும் ஆர்வத்தைப் பார்த்த மருத்துவக் கல்வி தேர்வுக் குழு கூடுதல் விண்ணப்பங்களை அச்சிட ஏற்கெனவே தீர்மானித்துள்ளது.
விண்ணப்பங்கள் வரும் ஜூன் மாதம் 2ம் தேதி வரை வழங்கபப்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்பிக்கவும் அன்று தான் கடைசி நாள்.
வரும் ஜூன் மாதம் 21ம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். இதையடுத்து ஜூன் 30ம் தேதி சென்னையில் முதல்கட்ட கவுன்சிலிங் துவங்கவுள்ளது.