For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெயலலிதாவை சோனியா டீ-பார்ட்டிக்கு அழைத்தாரா? இல்லையா?

By Chakra
Google Oneindia Tamil News

Jayalalitha
சென்னை: நாங்கள் வெற்றி பெற்றதற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி டெலிபோனில் வாழ்த்து தெரிவித்தார். அவர் டீ-பார்ட்டிக்கு அழைத்ததாக பத்திரிகைகளில்தான் படித்தேன் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இதன்மூலம் அவரை சோனியா காந்தி டீ-பார்ட்டிக்கு அழைத்தாரா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

முதல்வர் ஜெயலலிதா கோட்டையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம்:

கடந்த வாரம் நான் உங்களை சந்தித்தபோது வாரம் ஒரு முறை உங்களை சந்திப்பதாக கூறினேன். நேற்று சந்திப்பதாக இருந்தேன். ஆனால் எதிர்பாராதவிதமாக அமைச்சர் மரியம் பிச்சை இறந்ததால் திருச்சி செல்ல வேண்டியதாகிவிட்டது. எனவே இன்று உங்களை சந்திக்கிறேன்.

கேள்வி: மின் தட்டுப்பாடு எப்போது நீங்கும்?.

பதில்: தமிழக மக்களைப் பொறுத்த வரையில் அவர்களுக்கு ஒரு நல்ல செய்தி சொல்ல விரும்புகிறேன். மின் தட்டுப்பாட்டை நீக்க எங்கள் அரசு துரித நடவடிக்கை எடுத்து வருகிறது. விரைவில் நல்ல மாற்ற வரும். இதற்கு மேல் சொல்ல விரும்பவில்லை.

கேள்வி: பெட்ரோல் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், மக்கள் மீதான சுமையைக் குறைக்க விற்பனை வரியை தமிழக அரசு ரத்து செய்யுமா?.

பதில்: மத்திய அரசு திரும்ப திரும்ப பெட்ரோலியப் பொருட்களின் விலைகளை உயர்த்தி வருவதால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி இருக்கிறார்கள். நான் ஆட்சி பொறுப்பேற்று ஒருவாரம்தான்ஆகிறது. விற்பனை வரி குறித்து விரைவில் பேசி நல்ல முடிவெடுக்கப்படும்.

கேள்வி: அடுத்து டீசல், எரிவாயு விலையும் உயர்த்தப்படும் என்று பிரணாப் முகர்ஜி கூறியிருக்கிறாரே?.

பதில்: பெட்ரோலிய பொருட்களின் விலைவாசி உயர்வே எல்லா விலைவாசி உயர்வுக்கும் காரணம். இந்த விலை உயர்வால் தமிழக மக்கள் மட்டுமின்றி இந்தியா முழுவதுமே மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி இருக்கிறார்கள். இந்த நிலையில் பெட்ரோலிய பொருட்களின் விலை மீண்டும் உயர்த்தப்படும் என்று அறிவித்திருப்பது மிகவும் கண்டத்திற்குரியது. இதனை கைவிட வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக் கொள்கிறேன்.

கேள்வி: கட்டுமானப் பொருட்களின் விலையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்குமா?.

பதில்: ஒட்டுமொத்த விலைவாசியையும் குறைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

கேள்வி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் தற்போது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை திருப்தி அளிக்கிறதா?.

பதில்: தற்போது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளால் நீதித்துறையின் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

அரசின் நிதி நிலை குறித்து ஆய்வு:

கேள்வி: தமிழ்நாட்டின் நிதி நிலை அறிக்கை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படுமா?.

பதில்: நாங்கள் பதவி ஏற்று சில நாட்கள்தான் ஆகி இருக்கிறது. அரசின் நிதி நிலை குறித்து பல்வேறு துறைகள் மூலம் ஆய்வு செய்து வருகிறோம். ஆய்வு முடிந்த பிறகுதான் நிதி நிலைமை பற்றி தெரிய வரும். தேவைப்பட்டால் வெள்ளை அறிக்கை வைக்கப்படும்.

மேலவை வராது.. ரத்து செய்வோம்:

கேள்வி: தமிழகத்தில் மேலவை மீண்டும் வருமா?.

பதில்: ஒவ்வொரு முறையும் திமுக ஆட்சிக்கு வரும்போது மேலவை கொண்டு வர முயற்சி எடுக்கிறது. அதிமுக ஆட்சிக்கு வரும்போது மேலவை வேண்டாம் என்று ரத்து செய்கிறது. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ஆட்சியில் இருந்த போதுதான் மேலவை தேவை இல்லை என்று கலைத்தார். அது தேவை இல்லை என்பதுதான் அதிமுகவின் கொள்கை. அதில் மாற்றம் இல்லை. மேலவை வராமல் இருக்க என்ன செய்ய வேண்டுமோ அதை நாங்கள் செய்வோம்.

விரைவில் அரசு கேபிள்:

கேள்வி: கேபிள் டிவி அரசுடமையாக்கப்படுமா, அரசு கேபிள் வருமா?.

பதில்: நிச்சயம் செய்வோம். பதவி ஏற்று 8 நாட்கள்தான் ஆகிறது. வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். மற்ற மாநிலங்களில் இன்னும் பதவி ஏற்பு விழாக்கள்தான் நடந்து கொண்டு இருக்கின்றன. நாங்கள் மிகவும் விரைவாக செயல்படுகிறோம். இந்த அளவுக்கு யாரும் செயல்பட முடியுமா?.

கேள்வி: பள்ளி கல்வி கட்டணம் சீரமைக்கப்படுமா?.

பதில்: பள்ளிகளுக்கு கல்வி கட்டணம் நிர்ணயிப்பதில் அரசுக்கு நேரடி தொடர்பு இல்லை. பள்ளிகளுக்கு கல்விக் கட்டணம் நிர்ணயிக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுதான் கட்டணத்தை நிர்ணயிக்கிறது. அதனை பள்ளிகள் அமல்படுத்துகின்றன. எனவே இந்தப் பிரச்சனை அவர்களுக்கு இடையேதான் உள்ளது. இதில் தலையிட வேண்டும் என்று பள்ளிகள் விரும்பினால் அரசு அது குறித்து ஆராயும்.

கேள்வி: சமச்சீர் கல்வி அடுத்த ஆண்டு அமல்படுத்தப்படுமா?.

பதில்: இதற்காக குழு அமைக்கப்படும். அந்தக் குழு இதுபற்றி ஆராய்ந்து முடிவை அறிவிக்கும். அதன் பிறகு அது செயல்படுத்தப்படும். அதற்கு கெடு விதிக்க முடியாது. பிளஸ்2 மாணவர்களுக்கு நல்ல செய்தி இருக்கிறது. நாளை அவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படுகிறது. அப்போதே சிரமம் இல்லாமல் ஆன்லைன் மூலம் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 15 நாட்களில் பதிவு மூப்பு வழங்கப்படும்.

கனிமொழியின் தவறான வாதம்:

கேள்வி: முன்னாள் முதல்வர் கருணாநிதி கூறுகையில், கனிமொழி கலைஞர் டி.வியில் ரூ. 2 கோடி முதலீடு செய்ததை தவிர வேறு எந்த குற்றமும் செய்யவில்லை என்று கூறியிருக்கிறாரே?.

பதில்: நீதிமன்றம்தான் ஒருவர் குற்றவாளியா?, நிரபராதியா? என்பதை முடிவு செய்யும். தற்போது இந்த வழக்கு விசாரணையில் உள்ளது.

கேள்வி: கனிமொழி கைது செய்யப்பட்டதன் மூலம் ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு சரியான திசையில் செல்கிறதா?. அவரது குடும்பத்தைச் சேர்ந்த மற்றவர்களும் இந்த வழக்கில் சேர்க்கப்படுவார்களா?.

பதில்: காலதாமதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. என்றாலும் எடுக்கப்படும் நடவடிக்கைகள் மூலம் நீதிமன்றத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. சட்டம் தனது கடமையை செய்து வருகிறது.

கேள்வி: தான் ஒரு பெண் என்பதால் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கனிமொழி கோரியுள்ளாரே...?

பதில்: அது தவறான வாதம். அரசியலில் பெண் என்பதற்காக சலுகை காட்டப்பட வேண்டும் என்று கோருவது தவறு. கிரிமினல் குற்றங்களைப் பொறுத்தவரை பெண் என்பதற்காக சட்டம் வளைந்து செல்ல முடியாது.

புலிகளின் கொலை திட்டம்:

கேள்வி: ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டபோது, உங்களையும் கொலை செய்ய முயன்று நீங்கள் தப்பித்ததாக குமரன் பத்மநாபன் கூறியதாக இன்று செய்தி வெளியாகி இருக்கிறதே?.

பதில்: 1991ம் ஆண்டிலிருந்தே நான் இந்த அபாயத்தி்ல் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். ஆனாலும், நான் தப்பித்து உங்கள் முன் இருக்கிறேன். எனவே இது புதிய செய்தி அல்ல.

கேள்வி: மதுரை மேலூரைச் சேர்ந்த என்ஜினீயர் தீவிரவாத செயலில் கைதானது பற்றி மத்திய அரசு உங்களிடம் ஏதாவது கருத்து பரிமாற்றம் செய்துள்ளதா?.

பதில்: இல்லை.

கேள்வி: திராவிட இயக்க கொள்கைதான் ராஜீவ் கொலைக்கு காரணமாக இருந்ததாக பத்மநாபன் கூறியிருக்கிறாரே?.

ராஜீவ் கொலையில் திமுகவுக்கு மறைமுக பங்கு உண்டு:

பதில்: ராஜீவ் காந்தி கொலையில் திமுகவுக்கு மறைமுகமாக பங்கு உண்டு என்பதுதான் பொதுவான குற்றச்சாட்டு.

கேள்வி: பழைய சட்டமன்றத்தில் இருந்த செம்மொழி ஆய்வு நூலகம் அண்ணா நூற்றாண்டு நூலகத்துக்கு மாற்றப்படும் என்று கூறப்படுகிறதே?.

பதில்: முடிவு எடுக்கவில்லை.

கேள்வி: புதிய சட்டசபை கட்டிடம் எதற்கு பயன்படுத்தப்படும் என்பது அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்று கூறியிருந்தீர்களே?.

பதில்: முடிவு எடுக்கும்போது தெரிய வரும்.

மத்திய அரசுக்கு ஆதரவு தருவீர்களா?:

கேள்வி: மத்திய அரசுக்கு தேவைப்பட்டால் அதிமுக ஆதரவு கொடுக்கும் என்று முன்பு நீங்கள் கூறியிருந்தீர்களே?.

பதில்: நீங்கள் ஏன் அதை கேட்கிறீர்கள். கேட்க வேண்டியவர்கள் கேட்க வேண்டும்.

கேள்வி: மாணவர்களுக்கு லேப்-டாப் எப்போது வழங்கப்படும்?.

பதில்: கவர்னர் உரை வரும் வரை காத்திருங்கள். தேர்தலில் அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற தனி இலாகா உருவாக்கி அமைச்சரை நியமித்து இருக்கிறேன். அந்த இலாகா மூலம் அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

தேநீர் விருந்துக்கு சோனியா அழைத்தாரா:

கேள்வி: சோனியா உங்களை தேநீர் விருந்துக்கு அழைத்தாரா?.

பதில்: நாங்கள் வெற்றி பெற்றதற்கு டெலிபோனில் வாழ்த்து தெரிவித்தார். தேநீர் விருந்துக்கு அழைத்ததாக பத்திரிகைகளில்தான் படித்தேன்.

கேள்வி: மெட்ரோ ரயில் திட்டம் நிறைவேற்றப்படுமா?.

பதில்: அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றுவது குறித்து அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.

கேள்வி: டாஸ்மாக் கொள்கையில் மாற்றம் உண்டா?.

பதில்: பொதுவாக எந்த மாற்றமும் இல்லை. கவர்னர் உரையில் இதுபற்றி தெரிவிக்கப்படும்.

கேள்வி: உள்ளாட்சி தேர்தல் முன்கூட்டியே நடத்தப்படுமா?.

பதில்: அதற்கு அவசியம் இல்லை. உரிய நேரத்தில் நடத்தப்படும்.

கேள்வி: கடந்த ஆட்சிக் காலத்தில் திமுகவினர் அடாவடியாக சொத்துக்களை சேர்த்துள்ளனர். அவற்றை மீட்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுமா?

பதில்: திமுகவினர் முறைகேடாக சேர்த்த சொத்துக்களை மீட்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் பேட்டியளித்தார்.

குறுவை சாகுபடி-உரம் கோரி பிரதமருக்கு ஜெ கடிதம்:

இந் நிலையில் தமிழகத்துக்கு குறுவை சாகுபடிக்கு போதுமான உரத்தை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று கோரி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

அதில், எனது தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு விவசாயத் துறைக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. இந்திய வானிலை மையத்தின் கணிப்புப்படி தென்மேற்கு பருவ மழை குறித்த காலத்தில் துவங்க உள்ளது. மாநிலத்தில் தற்போது முக்கிய அணைக்கட்டுகளில் உள்ள நீரின் அளவு திருப்திகரமாக உள்ளது.

இந்த சாதகமான அம்சங்களால் மாநிலம் கரிப் பருவத்தில் சிறப்பான பயிர்களை எதிர்நோக்கி உள்ளது. 2011 குறுவை பருவத்திற்காக தமிழகத்துக்கு 2 லட்சம் டன் அளவிலான டிஏபி உரத்தை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது என்பதை தங்களது கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன். மே 2011 வரையிலான காலத்திற்கான ஒதுக்கீடான 47 ஆயிரம் டன்கள் டிஏபியை பொறுத்தவரை தமிழகம் இதுவரை 20 ஆயிரம் டன்களை மட்டுமே பெற்றுள்ளது.

ஏற்கனவே 27 ஆயிரம் டன்கள் பற்றாக்குறை உள்ளது. குறுவை சாகுபடிக்காக ஜூன் மாதத்தில் 30 ஆயிரம் டன்கள் டிஏபி உரம் கூடுதலாக தேவைப்படும். எனவே தமிழகத்துக்கு போதுமான அளவு உரம் உடனடியாக கிடைக்க தாங்கள் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

English summary
To a question on whether Congress president Sonia Gandhi had invited her to Delhi for tea, CM Jayalalithaa said she had come across such reports only in the media. “I keep reading it and seeing it in media... She spoke to me over phone and congratulated me for the ADMK’s victory, she said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X