ரூ.30,000 கோடி செலவில் ஒபாமாவின் வேலை வாய்ப்பு திட்டம்!

அமெரிக்க பொருளாதாரம் மிகப்பெரிய நெருக்கடியில் சிக்கியுள்ளது. கடன் தர வரிசையில் சறுக்கல், வேலையின்மை, பொருளாதார பின்னடைவு, சர்வதேச அரசியலில் ஆளுமை குறைந்தது போன்றவற்றால் அமெரிக்க மக்கள் ஒபாமாவின் தலைமை மீது நம்பிக்கை இழந்து வருகிறார்கள்.
வேலையில்லாத் திண்டாட்டம் இப்போது 9 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது. இதை குறைக்க வேண்டும் என்று ஒபாமா மிகுந்த பிரயத்தனம் செய்துவருகிறார். அப்படி குறைத்தால் மட்டுமே அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் நடக்க இருக்கும் அதிபர் தேர்தலில் தான் வெற்றி பெற முடியும் என்று ஒபாமா நம்புகிறார்.
ரூ.30 ஆயிரம் கோடி செலவில்
இதற்காக அவர் 30 ஆயிரம் கோடி செலவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கி தரும் திட்டம் ஒன்றை ஒபாமா இன்று வெளியிட இருக்கிறார். பாராளுமன்றத்தில் பேசும் போது இந்த திட்டத்தை அவர் வெளியிடுகிறார். அது டி.வி.சேனல்கள் மூலம் நேரடியாக ஒளிபரப்பப்படும்.
இந்த திட்டம் குறித்து ஒபாமா உதவியாளர்கள் எதுவும் தெரிவிக்க மறுத்து விட்டனர். இந்த திட்டம் உடனடியாக வேலைவாய்ப்புகளை அளிக்கும் என்று மட்டுமே தெரிவித்தனர்.
எதிர்க்கட்சியினரின் அவநம்பிக்கை
இந்த திட்டம் குறித்து அதிகாரிகள் சாதகமாக பேசினாலும் குடியரசு கட்சி எம்.பி.க்கள் அவநம்பிக்கையுடன் இருக்கிறார்கள். 'ஒபாமா பல நல்ல விஷயங்களை நாளை அறிவிப்பார். அவற்றை எல்லாம் தனித்தனியாக பார்த்தால் நன்றாக இருப்பது போல தோன்றும். ஆனால் ஒட்டுமொத்தமாக அவை நடைமுறைக்கு வரும் போது தோல்விதான் ஏற்படும்' என்கின்றனர் குடியரசு கட்சியினர்.












Click it and Unblock the Notifications