For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மாமல்லபுரத்தில் பதுங்கியிருந்த 'போலீஸ்' பக்ருதீன் தப்பினார்- போலீஸார் ஏமாற்றம்!

Google Oneindia Tamil News

Aalampatti Bridge
மதுரை: பாஜக தலைவர் அத்வானியைக் குறி வைத்து மதுரை அருகே ஆலம்பட்டி தரைப்பாலத்தில் பைப் வெடிகுண்டு வைத்த வழக்கில் முக்கியப் புள்ளியான 'போலீஸ்' பக்ருதீன் மாமல்லபுரம் அருகே போலீஸ் பிடியிலிருந்து மயிரிழையில் தப்பினார். இதையடுத்து அவரைப் பிடிக்க போலீஸார் பல முனைகளில் முற்றுகையிட்டு தீவிரமாக தேடி வருகின்றனர்.

ஆலம்பட்டி வெடிகுண்டு வழக்கில் மதுரை நெல்பேட்டையைச் சேர்ந்த அப்துல் ரகுமா என்கிற அப்துல்லா மற்றும் சிம்மக்கல்லைச் சேர்ந்த இஸ்மத் ஆகியோரை போலீஸார் கைது செய்துள்ளனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் சதித் திட்டத்தின் பின்னணியில் அல் உம்மா அமைப்பு இருப்பது தெரிய வந்தது. மேலும் இந்தத் திட்டத்தை வகுத்துக் கொடுத்தது பக்ருதீன் என்பதும் தெரிய வந்தது. அல் உம்மா அமைப்பின் முக்கியப் புள்ளி பக்ருதீன் என்று கூறப்படுகிறது.

மேலும் பிலால் மாலிக், தென்காசியைச் சேர்ந்த ஹனீபா உள்ளிட்ட மேலும் பலருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இவர்களில் பக்ருதீன் உள்ளிட்ட சிலர் சென்னையில் பதுங்கியிருப்பதாகவும், சிலர் பெங்களூரில் பதுங்கியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இதையடுத்து இரு நகரங்களிலும் போலீஸார் முகாமிட்டு தீவிர தேடுதல் மற்றும் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

2 தனிப்படையினர் மதுரையிலிருந்து சென்னை வந்து பக்ருதீனைப் பிடிக்க தீவிரமாக தேடி வந்தனர். முக்கியத் துப்பின் அடிப்படையில் அவர்கள் மாமல்லபுரத்தை முற்றுகையிட்டனர். அங்கு ஒரு முக்கிய வீட்டை அவர்கள் சுற்றி வளைத்து நுழைந்தபோது அங்கு ஒருவர் மட்டுமே இருந்தார். அவரைப் பிடித்து விசாரித்தபோது அங்குதான் பக்ருதீன் பதுங்கியிருந்ததாகவும், போலீஸ் வருவதை அறிந்து அவர் தப்பி ஓடி விட்டதும் தெரிய வந்தது. இதனால் போலீஸார் பெரும் ஏமாற்றமடைந்தனர்.

எல்லைகளில் தீவிர கண்காணிப்பு

இதையடுத்து மாமல்லபுரத்தைச் சுற்றிலும் போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.மேலும் ஆந்திராவுக்கோ அல்லது கர்நாடகத்திற்கோ பக்ருதீன் தப்பி விடாத வகையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டஎல்லைப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கிடையே, இந்த வழக்கில் மதுரையைச் சேர்ந்த பழக்கடை ஏஜென்ட் கொடி வீரண்ணன் உள்ளிட்ட மேலும் 3 பேரை போலீஸார் பிடித்துள்ளனர். இவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

யார் இந்த பக்ருதீன்?

இதற்கிடையே, இந்த சதித் திட்டத்தின் பின்னணி குறித்து போலீஸ் தரப்பில் தகவல் வெளியிட்டுள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:

அத்வானியின் பாதையில் வெடிகுண்டு வைக்கும் திட்டத்தை உருவாக்கியவர் பக்ருதீன்தான். இவருக்கு போலீஸ் பக்ருதீன் என்ற பெயரும் உண்டு. இந்த போலீஸ் என்ற அடைமொழி பக்ருதீனுக்கு வந்ததற்கு ஒரு காரணம் உள்ளது.

பக்ருதீனுக்கு 32 வயதாகிறது. மதுரையைச் சேர்ந்தவர். எட்டாவது வகுப்பு வரை படித்துள்ளார். இவரது தந்தை பெயர் சிக்கந்தர். இவர் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர். தந்தை போலீஸ் பணியில் இருந்ததால் பக்ருதீனின் பெயருடன் போலீஸ் என்ற பெயரும் ஒட்டிக் கொண்டதாம்.

தனது தந்தை போலீஸாக இருந்தபோது பக்ருதீன் முரட்டுத்தனமாக நடந்து கொள்வாராம். போலீஸாரிடம் கூட அவர் மோதலில் ஈடுபட்டுள்ளார். சப் இன்ஸ்பெக்டர் ஒருவரை முன்பு தாக்கியுள்ளார். இதேபோல பல போலீஸாரிடம் தகராறு செய்து அதுதொடர்பாக வழக்குகளும் உள்ளன.

இந்து முன்னணி தலைவர் ராஜகோபாலன் முன்பு மதுரையில் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் இவருக்கும் தொடர்பு இருப்பதாக அப்போது சந்தேகிக்கப்பட்டது.

அல் உம்மா அமைப்பைச் சேர்ந்த இமாம் அலி மற்றும் ஹைதர் அலி ஆகியோர் மதுரை மேலூரில் நடந்த வெடிகுண்டு சம்பவ வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். கடந்த 2002ம் ஆண்டு மதுரையிலிருந்து பாளையங்கோட்டை சிறைக்குச் செல்லும் வழியில் திருமங்கலத்தில் போலீஸ் வேன் நின்றபோது, அதிரடியாக அங்கு வந்த இமாம் அலி, ஹைதர் அலியின் ஆதரவாளர்கள் போலீஸார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி விட்டு இருவரையும் மீட்டுச் சென்றனர்.

இந்த சம்பவத்தில் முதல் முறையாக ஈடுபட்டார் பக்ருதீன். பின்னர் இமாம் அலி பெங்களூரில் தமிழக போலீஸ் படையால் சுட்டுக் கொல்லப்பட்டார். அப்போது இப்ராகிம் என்பவரும் சுட்டுக்கொல்லப்பட்டார். இவரது மைத்துனர்தான் பக்ருதீன்.

இமாம் அலி மீட்கப்பட்ட வழக்கில் கைதான பக்ருதீன் கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்புதான் விடுதலையாகி வெளியே வந்தார். வந்தவர் முழு அளவில் மீண்டும் பழைய பாதைக்குத் திரும்பியுள்ளார். பக்ருதீன் மீது 22 வழக்குகள் உள்ளனவாம்.

பக்ருதீன் வெடிகுண்டுகள் தயாரிப்பில் நிபுணத்துவம் கொண்டவர் என்று கூறப்படுகிறது. இமாம் அலியிடமிருந்தே இவர் வெடிகுண்டுகள் தயாரிக்க கற்றுக் கொண்டார் என்று கூறப்படுகிறது. கோவை தொடர் குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகளை தயாரித்துக் கொடுத்தவர் இமாம் அலி என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய ஆலம்பட்டி சம்பவத்திலும் கூட பக்ருதீன்தான் வெடிகுண்டுகளைத் தயாரித்துக் கொடுத்துள்ளார்.

அத்வானி பாதையில் வெடிகுண்டு வைக்க தீர்மானித்த அவர் தனது செயலுக்கு அப்துல்லா மற்றும் பிலால் மாலிக்கை நாடி உதவி கோரியுள்ளார். அவர்களும் சம்மதிக்கவே திட்டத்தை விரைவுபடுத்தினர்.

டூவீலர்-ஆட்டோவைப் பயன்படுத்தினர்

வெடிகுண்டு வைக்க ஆலம்பட்டி பாலத்தைத் தேர்வு செய்த பக்ருதீன், தனது பைக் மூலம் ஆலம்பட்டிக்கு அடிக்கடி சென்று இடத்தைப் பார்த்துள்ளார்.மேலும் அதே பைக்கிலேயே வெடிமருந்துகளையும் வாங்கியுள்ளார்.

அடிக்கடி ஒரே பைக்கில் போனால் யாரேனும் சந்தேகப்படுவார்களோ என்று கருதி வில்லாபுரத்தைச் சேர்ந்த செல்வம் என்பவரின் ஆட்டோவை வாடகைக்கு எடுத்து ஓட்டி வரும் இஸ்மத், தென்காசியைச் சேர்ந்த ஹனீபா ஆகியோரையும் துணைக்குச் சேர்த்துக் கொண்டார். பின்னர் இவர்கள் மாறி மாறி பைக், ஆட்டோவில் ஆலம்பட்டிக்குச் சென்று வெடிகுண்டை தயார் செய்துள்ளனர்.

அக்டோபர் 25ம் தேதியிலிருந்து தொடர்ந்து 3 நாட்களுக்கு அதிகாலையில் பக்ருதீனின் பைக் ஆலம்பட்டி பாலத்தில் நின்றதை அந்தப் பகுதியைச் சேர்ந்த 3 பேர் பார்த்துள்ளனர். போலீஸ் விசாரணையின்போது இவர்கள் பைக்கின் எண்ணை போலீஸாரிடம் தெரிவித்ததால் போலீஸாரின் வேலை எளிதானது.

மேலும் சம்பந்தப்பட்ட ஆலம்பட்டி பாலப் பகுதியில் சம்பவ தினத்தன்றும் அதற்கு முன்பும் யாரெல்லாம் செல்போனில் பேசினார்கள் என்பதை செல்போன் டவர் மூலமாக பரிசோதித்தபோது 20 பேர் பாலத்தில் பேசியது தெரிய வந்தது. செல்போன் டவரில் பதிவான கிட்டத்தட்ட 3000 எண்களைப் பரிசோதித்து இந்த 20 பேரை வடிகட்டினர் போலீஸார். அதில் இஸ்மத் மற்றும் அப்துல்லாவின் செல்போன் எண்களும் வந்ததைத் தொடர்ந்து இவர்கள்தான் குற்றவாளிகள் என்று போலீஸார் முடிவு செய்தனர்.

சென்னை-பெங்களூரில் வேட்டை

முதலில் பக்ருதீனைத் தேடி போலீஸார் சென்றனர். ஆனால் அவர் தப்பி விட்டார். ஆனால் இஸ்மத்தும், அப்துல்லாவும் சிக்கிக் கொண்டனர்.

தற்போது பக்ருதீன் உள்ளிட்டோர் சென்னையில் பதுங்கியிருப்பதாகவும், சிலர் பெங்களூரில் பதுங்கியிருப்பதாகவும் போலீஸாருக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன. இதையடுத்து போலீஸார் இரு நகரங்களையும் முற்றுகையிட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையே, இஸ்மத் மற்றும் அப்துல்லா ஆகியோரை நவம்பர் 6ம் தேதி வரை போலீஸ் காவலில் அனுமதித்து திருமங்கலம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. அவர்களிடம் நடத்தப்படவுள்ள விசாரணையின்போது வெடிகுண்டு வைப்பு தொடர்பாக மேலும் பல தகவல்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
CBCID Spl police team is search 'Police' Fakruddin in Chennai. He is the brain behind Alampatti pipe bomb case. Meanwhile 3 more have detained in Madurai in the case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X