For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'போலீஸ்' பக்ருதீன் போலீஸ் காவலில் இல்லை-வழக்கு முடித்து வைத்து உயர்நீதிமன்றம் உத்தரவு

Google Oneindia Tamil News

சென்னை: 'போலீஸ்' பக்ருதீன் போலீஸ் காவலில் இல்லை என்று காவல்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட விளக்கத்தை ஏற்றுக் கொண்ட சென்னை உயர்நீதிமன்றம், இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட ஆட் கொணர்வு மனுவை பைசல் செய்து உத்தரவிட்டது.

சென்னை மண்ணடி மூட்டைக்காரன் தெருவைச் சேர்ந்த எம்.அப்துல்லா என்பவர் உயர்நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் எனப்படும் ஆட் கொணர்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில் நானும் பக்ருதீனும் நண்பர்கள். கடந்த 2-ந் தேதி சென்னை சி.பி.சி.ஐ.டி. சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசாரால் பக்ருதீன் கைது செய்யப்பட்டார். (பா.ஜ. தலைவர் அத்வானி வரும் பாலத்தில் வெடிகுண்டு வைத்த வழக்கில்).

தற்போது அவர்களின் அலுவலகத்தில் பக்ருதீன் சட்ட விரோதமாக அடைக்கப்பட்டுள்ளார். அவரை போலி என்கவுண்டர்' மூலம் சுட்டுக் கொலை செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர். எனவே பக்ருதீனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி அவரை வெளியே அனுமதிக்க போலீசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இதை நீதிபதிகள் நாகப்பன், சுதந்திரம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் நேற்று விசாரித்தது. இதுதொடர்பாக விளக்கம் அளிக்க காவல்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். இதைத் தொடர்ந்து சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜன் பதில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

அதில், மதுரை மாவட்டம் திருமங்கலம் ஆலம்பட்டி கிராமம் அருகே பாலம் ஒன்று உள்ளது. அந்த வழியாக பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி ரதயாத்திரைக்கு வர இருந்தார். அவர் வருவதற்கு சற்று முன்பு அந்த பாலத்தின் கீழ் பைப் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது. அது சம்பந்தமாக திருமங்கலம் தாலுகா சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் கொடுத்த புகாரின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் உமாதேவி அக்டோபர் 28-ந் தேதி வழக்கு பதிவு செய்தார். பின்னர் இந்த வழக்கு மதுரை சி.பி.சி.ஐ.டி. சிறப்பு புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கு சம்பந்தமாக கடந்த 1-ந் தேதி அப்துல்லா மற்றும் இஸ்மத் ஆகியோரை கைது செய்தோம். அவர்கள் கொடுத்த தகவலில் அடிப்படையில் பக்ருதீன் என்ற போலீஸ் பக்ருதீனை தேடி வருகிறோம். அவர் தொடர்ந்து தலைமறைவாக இருக்கிறார். இதுவரை அவரை நாங்கள் கைது செய்யவுமில்லை. சட்டவிரோதமாக அடைத்து வைக்கவும் இல்லை. மனுதாரர் தனது மனுவில் கூறியுள்ள அனைத்து கருத்துகளும் பொய். எனவே அதை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார்.

அரசுத் தரப்பு வக்கீலும், இந்த மனுவைத் தள்ளுபடி செய்யக் கோரினார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், பக்ருதீன் கைது செய்யப்பட்டதை மனுதாரர் தரப்பில் யாரும் நேரடியாக கண்ணால் காணவில்லை. மேலும் சட்டவிரோதமாக அவரை அடைத்து வைத்திருப்பதற்கான ஆதாரத்தையும் மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யவில்லை. எனவே மனுவை முடித்து வைத்து உத்தரவிடுகிறோம் என்று கூறி மனுவைப் பைசல் செய்து உத்தரவிட்டனர்.

English summary
Madras HC has ordered to close the Habeas corpus petition on 'Police' Fakhruddin. CB-CID police yesterday filed a reply that, we have not arrested Fakhruddin yet. HC accepted the reply and ordered to close the case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X