For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பழங்குடியின பெண்கள் பாலியல் பலாத்காரம் - சிபிஐ விசாரணை கோரும் தேமுதிக எம்.எல்.ஏக்கள்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

திருக்கோவிலூர்: விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் போலீசாரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படும் 4 பழங்குடியின பெண்களை தேமுதிக எம்.எல்.ஏ வெங்கடேசடன் மற்றும் பழங்குடியின மக்கள் இயக்கத் தலைவர் நஞ்சப்பன் எம்.எல்.ஏ ஆகியோர் சந்தித்து விசாரணை நடத்தினர்.

பின்னர் இந்த விவகாரத்தை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

விழுப்புரம் மாவட்டம் டி.கே.மண்டபம் கிராமத்தில் வசித்து வரும் இருளர் சமுதாயத்தை 6 பேரை திருட்டு வழக்கு தொடர்பாக திருக்கோவிலூர் போலீசார் கைது செய்து அழைத்து வந்தனர். இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த நான்கு பெண்களையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். விசாரணைக்கு அழைத்து வந்து விட்டு தங்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக போலீசார் மீது நான்கு போரும் புகார் தெரிவித்துள்ளனர்.

விசாரணை நடத்த உத்தரவு

பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த புகார் மீது விசாரணை நடத்த விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு ஜுடிசியல் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண்களை தேமுதிக எம்.எல்ஏ வெங்கடேசடன் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏவும் பழங்குடியின மக்கள் இயக்கத் தலைவருமான நஞ்சப்பன் ஆகியோர் சந்தித்து விசாரணை நடத்தினர்.

கற்பழிக்கவில்லை என்று சொல்லுமாறு மிரட்டினர்:

அப்போது 4 பெண்களும் அவர்களிடம் கூறுகையில், எங்களை இரவு முழுவதும் போலீஸ் நிலையத்தில் அடைத்து வைத்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது பெண் போலீசார் எங்களை மிரட்டினார்கள். கற்பழிப்பு நடந்ததாக கூறினால் நாங்கள் உங்களை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து செல்வோம். இதனால் உங்களுக்கு பல பிரச்சனைகள் ஏற்படும். எனவே எங்களை போலீசார் கற்பழிக்கவில்லை என்று சொல்லுங்கள் என வற்புறுத்தினார்கள்.

எனவே பயந்து போன நாங்கள் போலீசார் எங்களை கற்பழிக்கவில்லை என்று கூறினோம். அதை 2 வீடியோவில் படம் எடுத்தனர். நாங்கள் கூறியவற்றை எழுதி கையெழுத்தும் வாங்கிக் கொண்டனர் என்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் நஞ்சப்பன் எம்.எல்.ஏ. கூறுகையில்,

4 பெண்களையும் திருக்கோவிலூர் போலீசார் விசாரனைக்கு அழைத்து சென்று பின்னர் பலாத்காரம் செய்துள்ளது உறுதியாகிறது. இதனை நான் மட்டும் விசாரித்து சொல்லவில்லை. எங்கள் இயக்கத்தைச் சேர்ந்த 9 பேர் கொண்ட குழுவினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அந்த பெண்கள் கூறியதை ஆதாரமாகக் கொண்டே இதனை கூறுகின்றேன்.

இது குறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் போலீசார்கள் என்பதால் இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க அரசு உத்தரவிட வேண்டும். அப்போதுதான் உண்மை வெளிவரும். மேலும் இந்த வழக்கில் தொர்புடைய போலீசாரை சஸ்பெண்டு செய்தால் மட்டும் போதாது கைது செய்திடவேண்டும் என்றார்.

விஜயகாந்திடம் அறிக்கை:

தேமுதிக எம்.எல்.ஏ. வெங்கடேசன் கூறுகையில், கற்பழிக்கப்பட்டதாக புகார் வந்ததை தொடர்ந்து கட்சியின் தலைவர் தொகுதி என்ற முறையிலும், கட்சியின் மாவட்ட செயலாளர் என்ற முறையிலும் நான் நேரில் வந்து விசாரனை செய்தேன். அப்போது கிடைத்த தகவல்களை விஜயகாந்திடம் அறிக்கையாக கொடுக்க உள்ளேன். அதனை தொடர்ந்து அவருடைய அறிக்கை வெளிவரும் என்றார்.

போலீசாரை டிஸ்மிஸ் செய்ய வைகோ கோரிக்கை:

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூருக்கு அருகில் உள்ள மண்டபம் கிராமத்தில், இருளர் சமூகத்தை சேர்ந்த லட்சுமி, கார்த்திகா, ராதிகா, வைகேஸ்வரி ஆகிய நான்கு பெண்களை, காவல் துறையினர் விசாரணைக்கு என்று கூறி, இழுத்துச் சென்று கற்பழித்த கொடுமை நெஞ்சை உறைய வைக்கிறது.

லட்சுமி என்ற பெண், மூன்று மாத கர்ப்பிணி ஆவார். அதனைக் கூறி காலில் விழுந்து மன்றாடிய போதும், இந்த கொடுமையை காவல் துறையினர் செய்து உள்ளனர். இந்தச் செயலில் ஈடுபட்டோருக்கு பலத்த கண்டனத்தை தெரிவிக்கின்றேன்.

கண்துடைப்புக்காக காவல் துறையினர் மீது வெறும் வழக்கு மட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இக்குற்றத்தை செய்த காவல் துறையினரை உடனடியாகப் பணியில் இருந்து நீக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

பொதுமக்கள் அதிர்ச்சி

இதனிடையே 4 பெண்கள் கற்பழிப்பு விவகாரம் டி.கே.மண்டபம் கிராம மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இதனால் இந்த கிராம மக்கள் அனைவரும் ஒன்றுகூடி அந்த வழியே செல்லும் போலீசார், மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைவரிடமும் எங்கள் ஊரின் பெயர் இப்படி யெல்லாம் பேப்பரிலும், டி.வி.யிலும் வருகின்றதே. இது எங்களுக்கு மிகவும் அவமானமாக உள்ளது என்று வருத்தம் தெரிவித்தனர்.

போலீசார் சென்ற வாகனத்தை மறித்த அவர்கள், பாதிக்கப்பட்ட பெண்களை பார்க்கச் சென்ற எல்.வெங்கடேசன் எம்.எல்.ஏ காரையும் வழி மறித்து உள்ளே செல்ல அனுமதிக்க மாட்டோம் எனக்கூச்சலிட்டனர். கோபமாக இருந்த ஊர் மக்களிடம் கட்சி நிர்வாகிகள் எடுத்து பேசி பின்னர் வழிவிடச்செய்தனர்.

English summary
DMDK has urged for CBI probe in Irular women rape case. Party MLA Venkatesan and CPI MLA Nanjappan met the victims and demanded the govt to handover the case to CBI.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X